அழகுராஜா





டைரக்டர் ராஜேஷ்.எம், நம்ம கார்த்தி, சந்தானம்னு சொன்னா போதாதா? பெரிய விமர்சனமெல்லாம் தேவையான்னு கேட்கிறீங்க... அதானே?
அதேதான்...
இன்கமிங் வராத உள்ளூர் சானலை நடத்தும் எம்.டி கார்த்தியும், அவர் நண்பேன்(!) சந்தானமும் அடிக்கிற வகைதொகையில்லாத லூட்டிதான் ‘அழகுராஜா’. ‘சேனலை வளர்த்த பின்தான் கல்யாணம்’ என விரதத்தில் இருக்கிறார் கார்த்தி. அப்புறம் ‘கார்த்திக்கு கல்யாணம் நடந்ததா... இடையில் நடந்த கலாட்டாக்கள் என்ன?’ என காமெடியில் வழிமொழிந்து இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

எப்போதும் போல இந்த தடவையும் சிரிப்பு ரவுசில் களைகட்டி, ‘கல்லா’ கட்டி விடலாம் என்று எதிர்பார்த்திருக்கிறார் ராஜேஷ். வழக்கம் போல மூச்சு விட நேரம் இல்லாமல் வரும் காமெடி டெலிவரிதான் படத்தின் உயிர்நாடி. ஏற்கனவே அடித்து அடித்து சொல்லப்பட்ட கதை. அதையே கடித்துச் சொல்ல முயற்சித்திருப்பதுதான் படத்தின் பெரிய வீக்னஸ்! ராஜேஷ் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறார். நாம் எதைச் சொன்னாலும் சிரிக்கிறார்கள்... இந்த முறை ‘டாஸ்மாக்’ காமெடியை மட்டும் டெலிட் பண்ணி முயற்சி பண்ணலாம் என யோசித்திருக்கிறார். ஆனாலும்... இந்த முறை தொட்டுக்கக் கூட கதை வைத்துக்கொள்ளவில்லை.

ஆக்ஷனிலேயே நடித்துக்கொண்டிருந்த கார்த்திக்கு நிச்சயம் இது ரிலாக்ஸ் படம்தான். ஆனால், டைரக்டரும் மெனக்கெடாமல் கூட சேர்ந்து படு ரிலாக்ஸ் ஆகிவிட்டதுதான் பிரச்னை. படத்தின் இன்னொரு நாயகனாகவே தோளோடு தோள் நின்று வருகிறார் சந்தானம். வழக்கம்போல் அடுத்த வரி.... ‘பிரித்து மேய்ந்து விட்டார்’ என்றுதான் எழுத வருகிறது நமக்கு. ஆனால், சொல்கிற பாதி ஜோக்குக்கு அவரேதான் சிரிக்க வேண்டியிருக்கிறது. சந்தானம் இரண்டு வேடத்தையும் சிறிய வித்தியாசங்களோடு சம்பந்தமில்லாமல் செய்திருப்பதைப் பாராட்ட வேண்டும். ஆனால், பெண் வேஷமிட்டு வரும் சந்தானத்தின் போர்ஷன் அடல்ட்ஸ் ஒன்லியாக நெளிய வைக்கிறது.

கார்த்தி எப்போதும் போல சிரித்துக்கொண்டே சமாளிக்கிறார். இவ்வளவு குட்டிக் கதையில் அவர் இந்த அளவுக்கு வர முடிந்ததே ஆச்சரியம்தான். காஜல் அகர்வால் ‘பாடகி’யாக வந்து கார்த்தி கலாய்ப்பதாலேயே தன்னை உணர்ந்து அவரையே காதலிக்கிறார். இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் ஹீரோயின்கள் மக்குகளாகவே வரப் போகிறார்களோ! இதுவரையில் ராஜேஷ் படங்களில் ஹீரோயினை ஹீரோ கலாய்க்கும்போது, அதில் கொஞ்ச நஞ்ச நியாயம் இருப்பதாக நமக்குப்படும். இங்கே அதுகூட மிஸ்ஸிங். அழகில் சொக்க வைக்கும் காஜல் அகர்வாலை அழகுராஜாவிடமிருந்து காப்பாற்றத்தான் நமக்குத் தோன்றுகிறது. கை தட்ட வரவில்லை. அப்பா பிரபு தோற்றத்தில் கார்த்தி வருவதுதான் ஆகச் சிறந்த ஐடியா. தோற்றம், மேனரிசம் முதற்கொண்டு முயன்று பார்த்திருக்கிறார் கார்த்தி.

தமனின் பாடல்கள் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றுகின்றன. ‘உன்னப் பார்த்த நேரம்...’ ஒரு சோற்றுப்பதம். சக்தி சரவணனின் கேமரா, சொன்ன வேலையை மட்டும் செய்துவிட்டுப் போகிறது. ராஜேஷ் எப்போதும் எடுக்கிற படம்தான். அதே காட்சிகள்தான். இந்த முறை கலவை சரியில்லாமல் ஏமாற்றிவிட்டார்.

ஆகக் கடைசியாக கதை சொல்லும் நீதி: எடுத்த படத்தையே திரும்பத் திரும்ப எடுக்கக் கூடாது.
- குங்குமம் விமர்சனக் குழு