உயிர் நண்பன் ராணா, ஒரு ஆக்ஷனில் தீவிரவாதிகளின் துப்பாக்கிக்கு பலியாக... நொந்து போகிறார் அஜித். அடுத்த கட்டத்தில் தெரிகிறது ராணா போட்டிருந்த புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டின் லட்சணம். அவ்வளவுதான்... ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து விடுகிறார் அஜித். ஊழலில் சம்பந்தப்பட்ட டி.ஜி.பி., உள்துறை அமைச்சர், இன்னும் சில இடைத்தரகர்களை போட்டு வாங்கும் அதிரடிதான் ‘ஆரம்பம்’.
இணைய ஹேக்கிங்கில் சமர்த்துப் பையனான ஆர்யாவைக் கூட்டு சேர்த்துக்கொண்டு திட்டங்களை நிறைவேற்றும் பாங்கில் சூடாகப் பறக்கிறது திரைக்கதை. அஜித்தும், ஆர்யாவும் ஆரம்பத்தில் பரம வைரிகளாய் மோதுகிறபோது, ‘ஐயையோ... படம் முழுக்க இப்படித்தானா...’ என்ற பீதி லேசாக எழுகிறது. ஆனால், பணயக் கைதியாகக் காதலியை கொண்டு வந்து சேர்த்துவிட்ட காரணத்தால் அஜித்திடமே போய்ச் சேர்கிறார் ஆர்யா. புல்லட் ப்ரூஃப் ஊழலில் சேர்த்த பணத்தை ஆர்யாவின் மாஸ்டர் மைண்ட்(!) மூலம் கைப்பற்றி இந்திய அரசுக்கே திருப்பிச் செலுத்துகிற நேர்மையில் வெற்றி பெற்றார்களா, உயிரைப் பணயம் வைக்கும் பழிவாங்கலில் வெற்றி பெற்றார்களா... என்பது படம் மொத்தமும் வருகிற திக்... திக்... நிமிடங்கள்!
ஒன்றுமேயில்லை... அஜித்தின் இருப்பே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறது. நிற்பதில், நடப்பதில், பேசும் கோபத்தில் கிட்டத்தட்ட அஜித்தின் அமர்க்களமாகி விடுகிறது ஒட்டுமொத்தப் படமும்! ஆனால், எல்லாவற்றிலும் புத்திசாலித்தனத்தின் இழை இருப்பதால் படம் ஓடுகிற நேரமே தெரியவில்லை. தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகு, ‘இப்படியொரு ஆக்ஷன், ஈஸியாக ஊடுருவும் ஆபரேஷன், சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்திய ரிசர்வ் வங்கி அக்கவுன்ட்டுக்கு டிரான்ஸ்பர் செய்வது... இதெல்லாம் சாத்தியமா?’ என முட்டி மோதுகின்றன லாஜிக் சந்தேகங்கள். ஆனால், உள்ளே இருக்கும்வரை அப்படி எந்த சந்தேகமும் எழாதபடி, பரபர திரைக்கதையில் அசரடிக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
தீவிரவாத தடுப்புப் பிரிவில் பணிபுரியும்போதும் சரி, தனியாக விலகி ஆக்ஷனில் கதற வைக்கும்போதும் சரி... விறைப்பும், முறைப்பும், மிடுக்குமாக கேரக்டருக்கு உயிர் தருகிறார் அஜித். நிதானமாகப் பேசி, குரலை உயர்த்துவது நமக்கே நெஞ்சுக்குழியில் சில்லிட வைக்கிறது. ஆக்ஷனில் மொத்தப் பேரையும் கொத்தும்போதும், அனல் வசனத்தில் கன்னம் சிவக்கும்போதும் அழகு கூட்டுகிறது. ‘எவ்வளவு பேர் வேண்டுமானாலும் படத்தில் இருந்திட்டுப் போங்கப்பா... இது என் படம்’ என்கிற அலட்சியத்திற்கு இந்த மேனரிசம்தான் காரணம்.
நயன்தாரா ‘பில்லா’வில் மிச்சம் வைத்திருந்த கவர்ச்சியை இதில் அள்ளி வழங்கியிருக்கிறார். மினிமம் உடையில் வில்லனை மயக்கும்போது... மயங்குவது வில்லன் மட்டுமல்ல! டாப்ஸியை நாமெல்லாம் ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நயன் இருக்கும்போது டாப்ஸி கடைசி ‘விக்கெட்’தான்.
ஆரம்பத்திலேயே... அஜித் முன்பு ஆர்யா அடங்கிவிட்டார். கடைசி வரை ஸ்டைலில் ஆர்யாவை மிஞ்சுவதால் அஜித்திற்கு பதற்றமே ஏற்படவில்லை.
இத்தனை ஸ்டைலுக்கும் ஈடு கொடுக்கிறார் வில்லன் மகேஷ் மஞ்ச்ரேகர். க்ளைமாக்ஸில் அவர் பதறுகிறபோது பதற்றம் நமக்குள் ஒட்டிக்கொள்கிறது. யுவன் ஷங்கர் ராஜா பாடல்களில் ஓய்வு எடுத்துவிட்டு, பின்னணியில் மட்டும் உழைத்திருக்கிறார். எடிட்டிங்கில் ஸ்ரீகர் பிரசாத்தின் உழைப்பு தெரிகிறது. இவ்வளவு ஆக்ஷனுக்கும், வேகத்திற்கும் பொருந்தியிருக்கிறார் ஒளிப்
பதிவாளர் ஓம்பிரகாஷ். வெளிநாட்டு படப்பிடிப்பெல்லாம் துடைத்தெடுத்த அழகு.
லாஜிக் பார்க்க விடாமல் செய்வது அஜித்தின் மேஜிக்!
- குங்குமம் விமர்சனக் குழு