வீடு
‘‘ஏய் அஞ்சலி! உனக்கென்ன புத்தி கெட்டுப் போச்சா? பத்துக் குடும்பங்களுக்கு மத்தியில அடைசலான போர்ஷன்ல இருக்கியேன்னு பெருசா, காத்தோட்டமா தனி வீடு பாத்துக் குடுத்தா, அங்க நிம்மதியா இருக்க முடியலையா? முட்டாள்தனமா மறுபடி அந்தப் பழைய குருவிக் கூட்டுக்கே வந்துட்டேன்ங்கிறியே..?’’ - செல்போன் அதிர மறுமுனையில் கொதித்தாள் அம்மா.
அஞ்சலி குரல் தாழ்த்தி பதில் சொன்னாள்... ‘‘இவர் குணம் உனக்கு தெரிஞ்சதுதானேம்மா. கோவம் வந்தா என்ன செய்வார்னு யாருக்கும் தெரியாது. என் கூட சண்டை சச்சரவுன்னு வந்துட்டா, பக்கத்து வீட்டுக்குக் கேக்குமேன்னுதான் கொஞ்சம் அடக்கி வாசிப்பார். ஆனா, ஆள் நடமாட்டமில்லாத தனி வீட்டுக்குப் போனதும் இன்னும் சத்தத்தைக் கூட்டிட்டார். கூடவே, கெட்ட வார்த்தைகளை எல்லாம் கூசாம பேச ஆரம்பிச்சிட்டார். தடுக்க வேற ஆளில்லையா... சண்டைக்கு நடுவுல கை நீட்டக் கூட பழகிட்டார். அதான் ஏதேதோ பொய்யைச் சொல்லி மறுபடி பழைய வீட்டுக்கே வந்துட்டேன்! அக்கம் பக்கத்துக்குப் பயந்து இங்க முந்தி மாதிரியே கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்மா.’’ அம்மாவுக்கு மகள் மீதிருந்த கோபம் பறந்து, பரிதாபம் பிறந்தது.
|