கவிதைக்காரர்கள் வீதி





*   சிதறிய பருக்கைகளும்
    பசியாறிக் கொண்டன,
    குழந்தைகள் சாப்பிட்டதால்!

*   சோறு பொங்கி
    குழந்தைகள் விளையாடுகையில்
    பசியுடன் காத்திருக்கின்றன
    பொம்மைகள் எல்லாம்...

*   குழந்தையின் கையில்
    படபடக்கும் வண்ணத்துப்பூச்சி
    தெறித்து விழும்
    அழகிய ஹைக்கூ

*   எத்தனையோ விளையாட்டுகளை
    தங்களிடம் வைத்திருந்தாலும்
    எதை எடுத்துக் கொள்வதென்ற
    உரிமையை மட்டும்
    குழந்தைகளிடமே விட்டுவிட்டன
    பொம்மைகள்!

*   நதியை வரைந்தது குழந்தை...
    நனைந்து போனது
    காகிதம்

*   முற்றங்களைத் தேடுகிறது
    நிலா
    குழந்தைச்சோறு
    உண்டு மகிழ...

*   வலம் வரும் சப்பரம்
    ஓடி வரும் குழந்தைகள்
    ஏறிக் கொள்ள,
    இறங்கி வழிவிடுகிறார் கடவுள்

*   நீரூற்றும் குழந்தைகளிடமிருந்து
    சிரிக்கக் கற்றுக்கொள்ளும்
    பூச்செடிகள்