இமான் அண்ணாச்சி
அண்ணே... இந்த குழந்தைகள் தினத்துல பிள்ளைகளுக்கு புதுசா என்ன சொல்லித் தரப் போறீய? நம்ம முன்னோர்களை மதிக்கச் சொல்லிக் குடுங்க... அவங்களுக்கு நன்றி சொல்லக் கத்துக் குடுங்க. ஏஞ்சொல்றேன்னா, நமக்கெல்லாம் நம்ம ஊருன்னா அவ்வளவு இளக்காரம்.
வெள்ளக்காரன் நல்லா ஃபுட்பால் ஆடுவான்... நல்லா கிரிக்கெட் ஆடுவான்ணே... அதையெல்லாம் நாமளும் கத்துக்கிட்டு அவன்ட்ட போயி போட்டி போடுறோம். நாம என்னத்த நல்லா செய்வோமோ அதைக் கத்துக்கிட்டு வந்து அவனை போட்டி போடச் சொல்லுங்களேன் பாப்போம்..? ஒண்ணுமே இல்லைண்ணே... ஒரு தோசை சுட்டுக் காட்டச் சொல்லுங்க. பசிக்காக அம்மா போடுற மொந்தை தோசை, லாபத்துக்காக மாஸ்டர் போடுற மெல்லீஸ் தோசை... ரெண்டுமே கஷ்டம்ணே! வாசத் தெளிக்கிறாப்ல மாவத் தெளிச்சி செய்யிற ரவா தோசை, நாசாவாலயே முடியாத நகாசு வேலைண்ணே.
யோசிச்சுப் பாருங்க... உலகத்துல எங்கயுமே சாப்பாட்டுல இவ்வளவு தொழில்நுட்பம் இல்ல. பிரட்டு மாவுல அவன் ஈஸ்ட்டுனு ஒண்ணு கலக்குறான். கேட்டா, புளிக்கிறதுக்காம். ‘கையில மாவரைச்சு கருக்கல்ல கரைச்சி வச்சா, அது தானே வந்துரும்டா வெண்ண’ன்னு சொன்னவன் தமிழன்தான்ணே. திங்கிறதுலயும் திங்கிறதை செய்யிறதுலயும் நாம வெயிட்டு. ஆறு மாசம் கோர்ஸ் வச்சி அசைன்மென்ட் குடுத்துக் கொன்னாலும் அவனுக மண்டையில இது ஏறாது!
நான் நாக்குக்கு அடிமை கிடையாதுண்ணே... வயித்துக்கு அடிமை. நல்லா திங்கணும்ங்கிறதை விட நெறைய திங்கணும். அதுதான் சின்னப்புள்ளையில இருந்தே நமக்குக் கொள்கை. சென்னையில அன்லிமிடெட்னு போர்டு தொங்காத ஓட்டல்ல நான் அட்ரஸ் விசாரிக்கக்கூட போனதில்ல. மளிகைக் கடையில இருந்தப்ப ஓனருக்குத் தெரியாம கொஞ்சம் போல ரவையும் சக்கரையும் எடுப்போம்... அதுல தேங்கா எண்ணெய சொட்டுச் சொட்டா விட்டு வெரலால கொழப்பிக்கிட்டே இருந்தோம்னு வைங்க... அஞ்சு நிமிசத்துல அழகா களி மாதிரி தெரண்டு வரும். அப்படியே உருண்டை புடிச்சி உள்ள தள்ளுவோம். சமைச்ச ஸ்வீட்ல கூட இல்லாத டேஸ்ட் அதுல கெடைக்கும்ணே.
எங்க ஊருப்பக்கம் திருநெல்வேலி அல்வாவத்தான் நெறைய பேருக்குத் தெரியும். சீனி மிட்டாய் அத விட ஃபேமஸ்ணே. ஜாங்கிரி மாதிரிதான்... ஆனா, வெள்ளை கலர்ல ஏணிப்படி ஜாடையில இருக்கும். திருநெல்வேலிக்காரனுக்கு சக்கரை வியாதி வருதுன்னா, அதுல இந்த அயிட்டத்துக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்குண்ணே. நேரடியா சீனிய திங்கிறதை விட, இது ஒரு பங்கு அதிகமா தித்திக்கும். ஆனாலும் யாருக்குக் கவலை? நானெல்லாம் சீனி மிட்டாய ஒரு பிளாப்பெட்டி நெறைய திம்பேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்ணே... சக்கரையை வாழ வைக்கலைன்னா எப்படி?
ஆனா, நாமெல்லாம் ரொம்ப குடுத்து வச்சவங்கண்ணே... எத எதத் திங்கணும்... எதுலல்லாம் வாய வைக்கப்படாதுன்னு முன்னக்கூட்டியே அண்ணம்மாருங்க ஆராஞ்சி சொல்லி வச்சிருக்காங்க. இஞ்சிக்கு தோல் நஞ்சு, கடுக்காய்க்கு வெத நஞ்சுன்னு எதை எதை ஒதுக்கி ஓரங்கட்டணும்னும் மெனு குடுத்துட்டாங்க. நாம ஜாலியா பீட்சா, பிரியாணின்னு ஒரு வெட்டு வெட்டுறோம்.
ஒரு நிமிசம் யோசிங்கண்ணே... அது பாட்டுக்க வளந்து கெடக்குற காட்டுக்குள்ள ஒவ்வொரு பழத்தையும் காயையும் கொட்டையையும் மொதமொதல்ல தின்னு பார்த்து சர்டிபிகேட் கொடுத்தவன் எவ்வளவு நல்லவன்? நம்மளை எல்லாம் விட்டா, எல்லாத்தையும் கடிச்சிப் பாப்போம். நல்லா இருந்தா திம்போம்... கசந்துச்சின்னா தூத்தூன்னு தூக்கி வீசிருவோம். ஆனா, கசப்பா இருந்தாலும் வேப்பிலை மருந்துங்கறான்... இனிப்பா இருந்தாலும் சில காளானை ‘திங்காதே, வயித்தால போவும்’ங்கறான்... அப்படீன்னா, டேஸ்ட்ட மட்டுமில்லண்ணே... ‘பின் விளைவு’களையும் செக் பண்ணித்தான் எல்லாத்தையும் சொல்லியிருக்கான் நம்மாளு.
ஆதி காலத்துல, அழகா இருக்கேன்னு அரளி வெதையத் தின்னுட்டு எத்தத்தன பேரு செத்திருப்பான்! அவனெல்லாம் கடைசி கட்டத்துல இன்னொருத்தன் மடியில சாஞ்சி, சினிமா கேரக்டர் ஆர்டிஸ்ட் மாதிரியே வசனம் பேசியிருப்பான்ல! ‘‘எல... இந்த ‘எல’... ரொம்ப மோசம்ல...’’ன்னு வெசச்செடிய அடையாளம் காட்டிட்டு தலை தொங்கினவன் எத்தனை பேரோ! வருங்கால சந்ததி வக்கணையா திங்கணுமேன்னு உசுர விட்டிருக்கானுவ பாருங்க... தியாகிகண்ணே. அவனுவளுக்குன்னு ஒரு டிக்கெட்டு கன்சஷன் உண்டா... தாமிரப்பட்டயம் உண்டா? எல்லாம் செய்கையில பேசிக்கிட்டு ஷேவ் பண்ணாம திரிஞ்ச காலம்ணே... ஆளு, அட்ரஸு, அடையாளம் ஒண்ணும் இல்ல. வருசத்துக்கு ஒருக்கா, போட்டோ வச்சி ஸ்பீக்கர் செட்டு போடக்கூட வழியில்ல. ஆனாலும் எதையும் எதிர்பாக்காம ஒரு கூட்டம் இத செஞ்சிருக்கு பாருங்க. நாம இப்ப அடுத்த சந்ததிக்குன்னு என்னண்ணே செய்யிறோம்?
என்ன... சிரிப்பா பேசுற பய வெறப்பா பேசுறான்னு பாக்கீயளா? ஞானம்ணே... புத்தருக்கு அரச மரத்தடியில வந்துச்சுன்னு சொல்லுவாங்கல்ல... அது நமக்கு தென்னை மரத்தடியில வந்துச்சு. எங்கூருல தென்னை மூட்டுக்குள்ள வெத்தல போடுவாங்கண்ணே... நல்லா வரும். ஒரு தடவ யாரோ ஒருத்தரு விளையில வெத்தல அறுவடை முடிஞ்சி கெடந்தது. அந்த மிச்சத் தண்டுல ஒரே ஒரு வெத்தல கெடக்க, ‘அட இதை ஏன் மண்ணுல போடணும், நம்ம வாயில போடலாமே’ன்னு எடுத்துப் போட்டேன்ணே. ஒரு மணி நேரம் இருக்கும்... முத்தின பரங்கிக்கா மாதிரி மூஞ்சி வீங்கிருச்சி. வாழ்க்கையில நான் பேயப் பார்த்து கூட பயந்ததில்லண்ணே... அன்னிக்கு கண்ணாடியில என் மொகத்தப் பார்த்து அலறிட்டேன். என் தலைல மட்டும் சுமார் முப்பது கிலோ கூடியிருக்கும்ணே... டாக்டர்ட்டப் போயி, ‘‘காப்பாத்துங்க’’னு கத்தினா, ‘‘அதெல்லாம் சரிப்பா... மொதல்ல மொகத்துல இருந்து அந்த மாஸ்க்க கழட்டிட்டுப் பேசு’’ங்காரு. அந்தளவு ஆயிப் போச்சிண்ணே நெலம. கார்ட்டூன்லல்லாம் உடம்பை எறும்பு சைஸ்லயும் தலைய யானை சைஸ்லயும் போடுவாங்க பாருங்க... அதுக்கு வாழும் உதாரணமா நான் நாலு நாளைக்கி அலைஞ்சேன்ணே.
வெத்தலைக்கிப் பின்னால என்னவோ பூச்சி இருக்குமாம்ல... அதக் கூட பாக்காம வெம்போக்கியா அத வாயில போட்டதுக்கு பூச்சிக கோர்ட்ல இதுதான் தண்டனை போலருக்கு... ‘பூச்சி கடிச்சா என்ன ஆகும்னு தெரியும்ல! பூச்சிய நாம கடிச்சித் தின்னா என்ன ஆகும்னு நீதான்லே காட்டியிருக்கே’ன்னு ஒருத்தன் விடாம என்னைய ஓட்டி எடுத்துட்டானுவ. அப்போ நான் சில முடிவுகளை எடுத்தேன்ணே... இனிமே எதத் திங்கறதா இருந்தாலும் முன்ன பின்ன பார்த்துத் திங்கணும்ங்கறது ஒரு பக்கம். மொத மொதல்ல அதத் தின்னு பார்த்துட்டு, ‘ஆபத்தில்லடா மடப்பயலே... தின்னுத் தொலை’ன்னு சொல்லியிருப்பான் பாருங்க ஒரு ஆதி மனுசன்.. அவனுக்கு ஒரு நன்றிய மனசுக்குள்ள சொல்லிப்புடணும். ஏன்னா, அவன் வலிய நான் அனுபவிச்சிருக்கேன் பாருங்க!
(இன்னும் சொல்றேன்...)
தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்