கர்ணனின் கவசம்





‘‘ஆதி, யந்திரம் சுத்த ஆரம்பிச்சுடுச்சு...’’ - தாராவின் குரலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
‘‘இல்ல தாரா... இது வார்ம் அப். பல நூறு வருஷங்களா சக்கரம் சுத்தாம இருக்கறதால அதுக்கு கிரீஸ் போட்டுட்டு இருக்காங்க...’’
‘‘அப்படீன்னா நமக்கு இன்னும் நேரம் இருக்கு...’’
‘‘இல்ல. அவகாசம் சில நிமிடங்கள்தான். அதுக்குள்ள இந்த ஜெயிலோட முனையை மழுங்கடிக்கணும்...’’
‘‘என்ன இது... திடீர்னு இந்த மர்ம உலகம் சுத்த ஆரம்பிக்குது?’’ - தள்ளாட ஆரம்பித்த மத்திம மனிதன், கீழே விழாமல் இருப்பதற்காக காலை அழுத்தமாக ஊன்றி நின்றான்.
‘‘நெருப்பு பந்து நம்மை நோக்கி வருது... ஓடுங்க...’’ அலறிய உயரமான மனிதன், சட்டென்று ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான். வேகமாக உருண்ட நெருப்புக் கோளம் ஸ்விட்ச் போட்டது போல் அப்படியே நின்றதுதான் காரணம்.
‘‘என்ன நடக்குது?’’ கால்கள் நடுங்க மத்திம மனிதன் வார்த்தைகளை உதிர்த்தான்.
‘‘யந்திரத்தை சுத்த வைக்கப் போறாங்க. அதுக்கான முன் ஏற்பாடு இது. யந்திரம் சுத்த சுத்த அந்த நெருப்பு பந்து நம்மை நோக்கி வரும். விழுங்கும்...’’ பதிலளித்த குள்ள மனிதன் தொடர்ந்தான். ‘‘அப்படீன்னா நம்ம நண்பர்கள் இந்த மாய உலகத்தோட மறுமுனைல இருக்காங்கனு அர்த்தம்... நிச்சயம் அவங்க நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பாங்க...’’
‘‘அதுவரைக்கும் நாம சும்மா இருக்கணுமா?’’
‘‘தேவையில்லன்னுதான் நினைக்கறேன்...’’ உயரமான மனிதனை நோக்கி பதிலளித்த மத்திம மனிதன், மறு நொடியே குள்ள மனிதன் பக்கம் திரும்பினான். ‘‘எதையாவது செஞ்சு ஃபார்முலாவை பிரேக் பண்ணுவோம். அவங்களை வழில சந்திப்போம். நேரமும் மிச்சமாகும். என்ன சொல்ற?’’
‘‘ஆமோதிக்கறேன். ஆனா, எல்லாரும் போக வேண்டாம்...’’
‘‘பின்ன?’’
‘‘நான் மட்டும் மறுமுனைக்கு வழி இருக்கான்னு பார்க்கறேன். நீங்க இங்கயே இருங்க...’’
‘‘இதை என்னால ஏத்துக்க முடியாது...’’ என்று பதிலளித்த மத்திம மனிதனின் கைகளைப் பற்றினான் உயரமான மனிதன்.
‘‘குள்ளன் சொல்றது சரிதான். ஆபத்துல நாம ஒன்பது பேரும் ஒரே நேரத்துல சிக்கறது சரியில்ல. அவன் போகட்டும். நாம இங்கயே இருப்போம். அப்பதான் நம்ம நண்பர்கள் ஒருவேளை வேற வழியா இந்தப் பக்கம் வந்தாலும் நாம அவங்களை சந்திக்க முடியும்...’’
‘‘ஆனா...’’ என்று இழுத்த மத்திம மனிதனை பார்வையால் எரித்தான் குள்ள மனிதன்.
‘‘நட்புக்கு இங்க இடமில்ல... கர்ணனோட கவசத்தை எதிரிங்க கைப்பற்றக் கூடாது. அது மட்டும்தான் நம்ம நோக்கம்...’’
‘‘அதுக்காக உன்னை பலி கொடுக்க சொல்றியா?’’
‘‘அப்படி ஒண்ணு நடந்தா, அது நம்ம குழுவுக்கு பெருமைதான்...’’
‘‘தாரா... நல்லா கவனி. இரண்டாவது முறை சொல்ல வைக்காத...’’ கண்களை நான்கு புறமும் சுழற்றியபடியே பேசினான் ஆதித்யா.
‘‘ம்... சொல்லு...’’ கைகளை தேய்த்தபடி தயாரானாள் தாரா.
‘‘இப்ப நாம இரண்டு பேரும் தனித்தனியா பிரியப் போறோம்...’’
‘‘ம்...’’
‘‘ஃபிபொனசி கோட்-ஐ அமல்படுத்தப் போறோம்...’’
‘‘இத்தாலிய கணித ஸ்காலரை சொல்றியா?’’
‘‘யெஸ். மத்திம காலத்துல இந்திய - அராபிய எண்கணித முறையை ஐரோப்பாவுல அறிமுகப்படுத்தினாரே... அவரேதான். அவரோட வழிமுறையைத்தான் இப்ப நாம செயல்படுத்தப் போறோம்...’’
‘‘சுருக்கமா அதை சொல்லிடு. நினைவுல இல்ல...’’
‘‘ஓகே. ஃபிபொனசி நம்பர் பூஜ்ஜியத்துலேந்து ஆரம்பிக்கும்...’’
‘‘ம்...’’
‘‘அதுக்குப் பிறகு ஒண்ணு, இரண்டு, மூன்றுன்னு போய்க்கிட்டே இருக்கும்...’’
‘‘ம்...’’
‘‘நாம இப்ப இருக்கிற இடத்தை பூஜ்ஜியம்னு நினைச்சுக்க...’’
‘‘ஓகே...’’
‘‘நீ அந்தப் பக்கமும், நான் இந்தப் பக்கமுமா பிரிஞ்சு நடக்கப் போறோம்... அதாவது மகாமேரு உள்ள இருக்கிற வெவ்வேறு சதுரம், முக்கோணத்துக்குள்ள நுழையப் போறோம்...’’
‘‘ம்...’’
‘‘முதல் சதுரத்துல நான் நுழைஞ்சதும் ஓரடி எடுத்து வச்சுட்டு வலப்பக்கம் திரும்புவேன்... நீயும் அதே போல ஓரடி எடுத்து வைச்சுட்டு திரும்பு. ஆனா, வலப்பக்கம் இல்ல... இடது பக்கம்...’’
‘‘சரி...’’
‘‘இப்ப நாம ரெண்டு பேரும் அடுத்த சதுரத்துல இருப்போம்...’’
‘‘புரியுது...’’
‘‘அதுல நான் இரண்டடி நடந்துட்டு இடது பக்கம் திரும்புவேன். நீயும் அதே போல இரண்டடி நடந்துட்டு வலப்பக்கம் திரும்பு...’’
‘‘ஓகே...’’
‘‘இப்ப நாம ஒவ்வொருத்தரும் நமக்கான மூணாவது சதுரத்துல இருப்போம்...’’
‘‘ஆமா...’’
‘‘இதுல நான் மூன்றடி எடுத்து வைச்சுட்டு வலப்பக்கம் திரும்புவேன்...’’
‘‘நானும் அதே போல செஞ்சுட்டு இடது பக்கம் திரும்பணுமா?’’
‘‘இல்ல...’’ என்று தலையசைத்த ஆதித்யா, ‘‘கவனி தாரா... இந்த மூணாவது சதுரத்துக்குள்ள நீ நுழையறதுலேந்து ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது...’’ என்றான்.
‘‘என்னது?’’
‘‘இதுக்கு முன்னாடி இரண்டு சதுரத்துக்குள்ள நீ எத்தனை ஸ்டெப்ஸ் வைச்சியோ அதனோட ப்ளஸ்ஸை நீ அமல்படுத்தணும்...’’
‘‘அதாவது, முதல் இரண்டு சதுரங்கள்ல ஒண்ணு, இரண்டுன்னு அடிகளை எடுத்து வைச்சதால மூணாவது சதுரத்துல மூன்றடி நடக்கணும்...’’
‘‘ஆமா...’’
‘‘நான்காவது சதுரத்துல முந்தைய இரண்டை கூட்டணும். அதாவது 2 ப்ளஸ் 3. ஸோ, ஐந்தடிகள் நடக்கணும். அதே போல ஐந்தாவது சதுரத்துல முந்தைய இரண்டை கூட்டி - ஐ மீன் 3 ப்ளஸ் 5 = 8 அடிகள் நடக்கணும். இல்லையா?’’
‘‘அதே... இதேபோலதான் கடைசி வரைக்கும் நடக்கணும். அதே சமயத்துல எடுத்து வைக்கிற அடிகள் முடிஞ்சதும் நீ இடது, வலதுனு மாறி மாறி திரும்பணும். நான், ஒண்ணு, இரண்டு, மூன்றுன்னுதான் ஸ்டெப்ஸ் வைப்பேன். பட், நான் திரும்பறது வலது, இடதுனு இருக்கும்...’’
‘‘புரிஞ்சுகிட்டேன்...’’
‘‘ஒரு சதுரத்துல நாம சேருவோம். அந்த ஸ்கொயர் வர வரைக்கும் இந்த ஃபிபொனசி கோட்-ஐ பின்பற்ற வேண்டியதுதான்...’’
‘‘டன். ஆரம்பிக்கலாமா?’’
‘‘களப்பலி நடந்துதான் தீரும்...’’ - உதட்டோரம் சிரிப்பு வழிய சகுனி வார்த்தைகளை உச்சரித்தார்.
‘‘அரவான் மாதிரியா?’’ - திரிசங்கு சொர்க்கத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த துரியோதனன் கேட்டான்.
‘‘ஆமா...’’
‘‘அது ஆதித்யாவா இருந்தாதானே நல்லது?’’
‘‘குள்ளனா இருந்தாலும் நல்லதுதான்...’’ கைகளைக் கட்டியபடி பதிலளித்த பரமேஸ்வர பெருந்தச்சன், ‘‘மாமா... தாயத்தை உருட்டுங்க. இந்த குருக்ஷேத்திரப் போர்ல வெற்றி நமக்குத்தான்...’’ என்றார்.
தாயத்தை உருட்ட ஆரம்பித்தார் சகுனி.
‘‘ஆரம்பிக்க வேண்டியதுதான்...’’ தனக்குள் முணுமுணுத்த குள்ள மனிதன் துரிதமாக செயலில் இறங்கினான்.
மகாபாரதத்தில் சகுனி ஆடிய தாய விளையாட்டுதான் இப்போது அவன் கண் முன்னால் விரிந்தது. ஆறு பக்கமும் எண்கள் கொண்ட இரு சதுரமான டைஸ். இரண்டையும் ஒரே சமயத்தில் உருட்டும்போது எந்த எண் விழும் என்று யாருக்கும் தெரியாது. இது சீரற்ற நிகழ்வுதான். ஆனால், தொடர்ச்சியாக தாயத்தை உருட்டும்போது, சீரற்ற நிகழ்விலும் ஒரு சீரான தொடர்ச்சி இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அதாவது ஆறு பக்கமும் எண்கள் கொண்ட இரு டைஸையும் உருட்டும்போது, அது 36 வழிகளில் ஏதேனும் ஒன்றை எதிரொலிக்கும். அப்போது இரண்டு டைஸும் வெளிப்படுத்தும் கூட்டுத் தொகை 2ல் இருந்து 12க்குள் இருக்கும். இப்போது அடுத்த உருட்டலில் இரண்டு டைஸையும் சேர்த்து வரும் கூட்டுத் தொகை 12க்குள் என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
கூட்டுத் தொகை இரண்டு என்றால் அதற்கான வழி... ஒன்று கூட்டல் ஒன்றுதான். ஆனால், கூட்டுத் தொகை மூன்று வர வேண்டுமென்றால் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று கூட்டல் இரண்டு அல்லது இரண்டு கூட்டல் ஒன்று. ஆனால், 36 வாய்ப்புகள் இருப்பதால், கூட்டுத்தொகை 3 வருவதற்கு 2/36, அதாவது 5.56 சதவீதம் வாய்ப்பிருக்கிறது.
இப்படியே கணக்கிட்டால் கூட்டுத் தொகை 2 வருவதற்கு 1/36; 3 வருவதற்கு 2/36; 4 வருவதற்கு 3/36; 5 வருவதற்கு 4/36; 6க்கு 5/36; 7க்கு 6/36; 8க்கு 5/36; 9க்கு 4/36; 10க்கு 3/36; 11க்கு 2/36; 12க்கு 1/36 வாய்ப்புகள் இருக்கின்றன.
அதாவது கூட்டுத் தொகை இரண்டு வருவதற்கு எத்தனை வாய்ப்பிருக்கிறதோ அதேதான் கூட்டுத் தொகை பன்னிரெண்டு வருவதற்கும்.
இந்த சூத்திரம் சகுனிக்கு தெரியும்; தர்மருக்கு தெரியாது. அதனால்தான் சூதாட்டத்தில் எளிதாக தர்மரை தோற்கடித்தார் சகுனி.
‘இப்போது இந்த சிறை யந்திரமும் தாயம் உருட்டுவது போல்தான் சுற்றப் போகிறது. தர்மரின் பார்வையில் நடந்தால், அழிந்துவிடுவோம். சகுனியின் எண்ண ஓட்டப்படி காலடி எடுத்து வைத்தால், மறுமுனையில் இருக்கும் நண்பர்களை சந்திக்கலாம். காமதேனுவின் பாலை வாங்கலாம். மர்ம உலகை விட்டு வெளியேறும் வழியை கண்டுபிடிக்கலாம். சிறைக்கு அடியில் இருக்கும் கர்ணனின் கவசத்தை எதிரிகள் கைப்பற்றாதபடி பார்த்துக் கொள்ளலாம்...’
ஒரு முடிவுடன் நடக்க ஆரம்பித்தான் குள்ள மனிதன்.
சுற்றுவதும், நிற்பதுமாக யந்திரம் வார்ம் அப் ஆக, அதற்கேற்ப நெருப்புப் பந்து அருகில் வருவதும், தொலைவில் செல்வதுமாக போக்கு காட்டிக் கொண்டிருந்தது.
‘‘இறுதி மூச்சு நிக்கற வரைக்கும் நாம போராடணும்...’’ என்ற உயரமான மனிதனின் கர்ஜனையை மற்ற ஏழு பேரின் முகங்களும் எதிரொலித்தன.
ஃபிபொனசி கோட் அடிப்
படையில் மகாமேருவுக்குள் ஆதித்யாவும், தாராவும் நடக்க ஆரம்பித்தார்கள்.
உள்ளங்கையில் டைஸை நன்றாகத் தேய்த்துவிட்டு மர்மப் புன்னகையுடன் அதை உருட்ட ஆரம்பித்தார் சகுனி.
சகுனியின் உருட்டல் எப்படியிருக்கும் என்று கணக்கிட்டபடியே குள்ள மனிதன் தன் வலது காலையும், இடது காலையும் நகர்த்தினான்.
‘‘ஃபிபொனசி கோட் சரியா இருந்ததுனா கடைசி பாக்ஸ் இதுவாதான் இருக்கணும்...’’ நெற்றியில் பூத்த வியர்வையைத் துடைத்தபடி தாரா பேசினாள். வெவ்வேறு திசையில் பிரிந்து சென்ற இருவரும் இப்போது சேர்ந்தாற்போல் ஒரு சதுரத்தில் நுழைந்திருந்தார்கள்.
அவளுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் தன்னைச் சுற்றிலும் ஆராய ஆரம்பித்தான் ஆதித்யா. அவனது தலைக்கு மேலே ஒரு மூடி தென்பட்டது.
‘‘தாரா கமான்...’’ என்றபடி குனிந்தான். புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அவன் முதுகில் ஏறி, அந்த மூடியைத் திறந்தாள். அதிர்ந்தாள்.
காரணம் -
வெளியே தெரிந்தது வெளிதான்.
வானத்திலா இருக்கிறோம்..?
ஆம் என்பதுபோல்தான் அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்ந்தன. விண்வெளிக்குச் செல்லும் விஞ்ஞானிகள் போலவே வெள்ளை நிற உடையணிந்த ஒரு மனிதர் அவளுக்கு முதுகை காட்டியபடி பறந்து கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் நடராஜர் நடனமாடிக் கொண்டிருந்தார்.
சட்டென்று அந்த மனிதர் தன் முகத்தை திருப்பி அவளைப் பார்த்து புன்னகைத்தார். தாராவுக்கு மயக்கம் வருவது போலிருந்தது.
காரணம், சென்னை குரோம்பேட்டைக்குச் செல்லும்போதெல்லாம் எந்த வயதானவர் அவள் காலில் விழுவாரோ -
மும்பைக்குச் சென்றவளை தேடி வந்து எந்த தாத்தா, ‘‘மதுரை வெள்ளியம்பலத்துக்கு ஆபத்து வந்துடுச்சும்மா...’’ என்று
அழுதாரோ -
அந்த விமலானந்தர்தான் வான்வெளி விஞ்ஞானியாக சுற்றிக் கொண்டிருந்தார்.
இந்த விமலானந்தர்தான் தங்களை திரிசங்கு சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்ததாக ரவிதாசனிடம் அப்போது ஃபாஸ்ட்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.
(தொடரும்)

‘‘தலைவர் தனக்கு ‘சீப்’பா விழா எடுத்துட்டாங்கன்னு டென்ஷனா இருக்கார்...’’
‘‘ஏன்..?’’
‘‘அவரோட எடைக்கு எடை ஒரு ரூபா இட்லி வச்சுக் குடுத் தாங்களாம்!’’



‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல என்ன தெரிஞ்சுக்க விரும்பறீங்க..?’’
‘‘2016ல முதலமைச்சர் ஆவேன்னு இதுவரை எத்தனை பேர் சொல்லியிருக்காங்கன்னுதான்...’’

‘‘தலைவர் திடீர்னு மீட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு வீட்லயே இருந்துட்டார்...’’
‘‘அப்புறம்..?’’
‘‘கூட்டத்துக்கு வந்து காத்திருந்தவங்க, அவர் வீட்டுக்கு வந்து செருப்பு வீசிட்டுப் போனாங்க!’’
 - பர்வீன் யூனுஸ், சென்னை-44.