சாதித்த சிந்து
எல்லையில் மட்டும் சீன ஆதிக்கம் இல்லை; பாட்மின்டன் விளையாட்டிலும்தான்! அதை எதிர்கொண்டு தோற்கடித்து பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றிருக்கிறார் பி.வி.சிந்து. உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வென்ற வெண்கலம், தனிநபர் போட்டிகளில் ஒரு இந்தியப் பெண் பெற்ற முதல் பதக்கம். சாய்னா நெஹ்வால், அஸ்வினி பொன்னப்பா என யாரும் சாதிக்காத ஒன்றை வசப்படுத்தி இருக்கிறார் இந்த ஐதராபாத் பெண்.
ஐ.பி.எல் எனப்படும் இந்திய பாட்மின்டன் லீக் போட்டிகள் ஆரம்பமாகும் நேரத்தில் கற்கண்டாக வந்திருக்கிறது இந்த வெற்றிச் செய்தி. கூடவே இந்த 18 வயசு புயலுக்கு அர்ஜுனா விருதும் கிடைத்திருப்பது ரெண்டாவது லட்டு! அப்பாவும் அம்மாவும் வாலிபால் பிளேயர்களாக இருந்தாலும், சிந்துவுக்கு சின்ன வயதிலிருந்தே பாட்மின்டன் பிடித்தது. 10 வயதில் தினமும் 56 கிலோமீட்டர் பயணித்து பயிற்சி எடுத்துக் கொண்ட உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. தர வரிசையில் பத்தாம் இடத்திலிருக்கும் சிந்து, உலகின் நம்பர் 2 வீராங்கனையைத் தோற்கடித்து இந்தப் பதக்கத்தை சாத்தியமாக்கினார். எதிரிகளின் தகுதிகள் அவருக்கு மிரட்சி தந்ததில்லை. அவரது வெற்றி மந்திரம் இதுதான்!
|