அரவாணிகளின் ஆறாத் துயரம்
‘‘எங்களுக்கு இந்தச் சமூகத்தின் கருணையோ அங்கீகாரமோ தேவையில்லை. யாருடைய உதவியும் எங்களுக்கு வேண்டியதில்லை. நாங்களே எங்களை பார்த்துக்கொள்ள முடியும். அரவாணின்னா என்ன, பாட்டு பாடி டான்ஸ் ஆடுறவுங்க மட்டுமா? இனி நாங்க பாட மாட்டோம்... ஆட மாட்டோம். ரெடிமேட் கார்மென்ட் ஆரம்பிக்கப் போறோம்... எலெக்ஷன்ல நிக்கப் போறோம்’’ - பாரதி கண்ணம்மாவின் பேச்சில் அனல் தெறித்தது.
அது ஒரு நபரின் கோபம் அல்ல. யுகாந்திரங்களாய் தொடரும் அவமானத்திலிருந்து, கொடுமைகளிலிருந்து, புறக்கணிப்பின் தண்டனைகளிலிருந்து பிறந்த கசப்பு அது. மதுரையில் நடந்த திருநங்கைகள் முப்பெரும் விழாவில் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். ‘அரவாணிகள்’ என்றோ, ‘திருநங்கைகள்’ என்றோ அழைப்பதில் எனக்கு சிறு மனத்தடை இருந்தது. அவை எல்லாமே பல்வேறு கலாச்சாரச் சுமை ஏறி உள்ள சொற்கள் என்று தோன்றியது. ‘மாற்றுப் பாலினத்தவர்’ என்று அவர்களை அழைப்பதையே விரும்புகிறேன் என்றேன். அது இன்னும் ஜனநாயக மதிப்பீடுகள் கூடிய சொல். ‘‘ஆம்.. Sexually challenged’’ என்றார் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா. அரவாணி, திருநங்கை என்ற சொற்கள் பொட்டை, ஒன்பது என்ற இழி சொற்களிலிருந்து கிடைத்த பெரிய விடுதலை. நாம் மேலும் அடையாளங்களை ஜனநாயகப்படுத்த வேண்டியிருக்கிறது. ஊனமுற்றவர்கள், தலித்துகள் அப்படித்தான் தங்கள் விடுதலையின் முதல் நிபந்தனையாக தங்களைக் குறிக்கும் சொற்களிலிருந்து விடுபடப் போராடுகிறார்கள்.
கூட்டத்தில் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா தொகுத்த ‘மெல்ல விலகும் பனித்திரை’ என்ற மாற்றுப் பாலினத்தவரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. மாற்றுப் பாலினத்தவருக்கும் இந்த சமூகத்திற்கும் இடையிலான இரும்புத்திரை பனித்திரையாக மாறுவதற்கே எவ்வளவோ காலம் சென்றுவிட்டது. இந்த பனித்திரையும் விலகும் காலம் ஒன்று வரத்தான் செய்யும்.
இந்திய சமூகத்தில் மாற்றுப் பாலினத்தவரைப் போல வேட்டையாடப்பட்ட சமூகம் வேறொன்றில்லை. இந்த உலகம் ஆண், பெண் என்ற இரண்டு பிரிவுகளாக எங்கோ பிளவுண்டு போய்விட்டது. ஆணும் பெண்ணுமற்ற தன்மைக்கு நமது புராணங்களிலும் பண்டைய இலக்கியங்களிலும் கிடைத்த சிறிய இடம்கூட பிற்காலத்தில் கிடைக்கவில்லை. ஆணாதிக்கத்தின் வெறியேறிய சமூக அமைப்புகள் உருவான காலத்தில், ஆண் உடலில் பெண் மனதோடு இருப்பவர்கள் கடும் ஏளனத்துக்கும் அவமானத்திற்கும் ஆளாக்கப்பட்டனர். ஆணின் அதிகாரம் அழியாமல், பெண்களுக்கு மட்டுமல்ல, மாற்றுப் பாலினத்தவருக்கும் விடுதலை இல்லை.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமேயான உலகில் மாற்றுப் பாலினத்தவர் வேற்றுக் கிரகவாசிகளாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் வழிதவறி இந்த உலகில் நுழைந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். மனிதர்கள் எத்தனையோ விதமான உடலியல் சார்ந்த குழப்பங்களோடும் பிரச்னைகளோடும் இந்த உலகில் பிறக்கிறார்கள். இவர்களும் அப்படித்தான். குரோமோசோம்களின் குழப்பம். ஆனால் எந்த பிரச்னைகளோடும் பிறந்தவர்களுக்கு இல்லாத அளவுக்கு அநீதிகள் இவர்களுக்கு இழைக்கப்படுகின்றன. காரணம், இங்கே அனைத்து சமூக அதிகாரங்களும் பாலியல் அதிகாரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. இந்த அதிகாரத்திற்குள் மாற்றுப் பாலினத்தவரை எங்கே வைப்பது என்று தெரியாததால், அவர்கள் சமூகத்திற்கு வெளியே துரத்தப்படுகின்றனர்.
இந்திய சமூகம், பிறரைப் பற்றிய தப்பெண்ணங்களால் நிரம்பிய சமூகம். அந்த தப்பெண்ணங்களாலேயே அது தனது போலி மேன்மைகளை அடையாளம் கண்டு நிம்மதி கொள்கிறது. மாற்றுப் பாலினத்தவர் தப்பெண்ணங்களால் எல்லா இடங்களிலும் வேட்டையாடப்படுகிறவர்கள். மாற்றுப் பாலினத்தவராக ஒருவர் வாழ்வது மிகப்பெரிய துயரம். நீங்கள் உங்கள் வீடு என்று நம்பி வேறொரு வீட்டிற்குள் கவனக்குறைவாக நுழைந்து விடுகிறீர்கள். ஆனால் அது உங்கள் வீடு அல்ல. அங்கே எல்லாமே உங்களுக்கு அன்னியமாக இருக்கிறது. எந்த இடத்திலும் நீங்கள் நிம்மதி கொள்ள முடியவில்லை. நீங்கள் எப்படியாவது அந்த வீட்டை விட்டு வெளியேறி உங்கள் வீட்டிற்குப் போய்விட நினைக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குத் திரும்பும் வழி தெரியவில்லை. அந்த வீட்டின் சுவர்களின் மீது தலையை மோதிக்கொண்டு அழுகிறீர்கள். இதுதான் ஒரு மாற்றுப் பாலினத்தவரின் வாழ்க்கை. அவர்கள் தங்களுக்கு சம்பந்தமில்லாத வேறொரு உடலுக்குள் சிக்கிக்கொண்டவர்கள். இதைவிட ஒரு துயரம் இருக்க முடியுமா? இந்தக் குழப்பத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஆண் உடலுக்குள் வாழும் பெண் மனம். இவர்கள்தான் அதிகம். பெண் உடலுக்குள் வாழும் ஆண் மனங்களும் இருக்கின்றன. இவர்களோடு, ஆண்மைத் தன்மை இல்லாதவர்கள், மலட்டுத்தன்மை கொண்டவர்கள், வலுக்கட்டாயமாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட அலிகள் என எல்லோரையும் ஒன்றென குழப்பிப் புரிந்துகொள்ளும் நிலை இருக்கிறது. தெளிவான ஆண் தன்மையையும் தெளிவான பெண் தன்மையையும் நம்பும் ஒரு சமூகத்தில், இடையில் சிக்கிக்கொண்டவர்களை சரியாக இனம் பிரித்துப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
ஆண் உடலில் வாழும் ஒரு பெண் மனம், ஆணின் உடலை உதற விரும்புகிறது. பெண்களின் ஆடைகளை அணிவது, பெண்களுக்கு என்று விதிக்கப்பட்ட வேலைகளைச் செய்வது, ஆடல் பாடல்களில் நாட்டம் கொள்வது எனப் பல்வேறு நிலைகளில் நடக்கும் இந்தப் போராட்டம், பருவ வயதில் பாலியல் உணர்வுகள் - உறவுகள் சார்ந்து உச்சத்தை எட்டுகிறது. பெண்களைப் போல நடந்துகொள்ளும் ஆண் உடல் கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கின்றன. அவர்களைச் சரி செய்வதற்கு வீடுகளில் கடுமையான சித்ரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று மாற்றுப்பாலினத்தவர் சுயசரிதைகள் எழுதுகின்றனர். அந்த துயரக்கதைகள் கேட்டுத் தீராதவை.
மாற்றுப் பாலினத்தவர்கள் சொந்த வீடுகளைவிட்டு துரத்தப்படுகின்றனர்; நாடோடிகளாக மாறுகின்றனர். அவர்களுக்கு பாலினம் இல்லாததால் சாதி இல்லை. மாற்றுப் பாலினத்தவரைத் தேடி அடைக்கலமாகின்றனர். அங்கே சடங்குகளும் உறவுமுறைகளும் உண்டு. அவர்கள் கூட்டாக வாழ்கின்றனர். அவர்களுக்கு நிற்க நிழலில்லை; வேலை தருபவர்கள் அரிது. வாடகைக்கு வீடு தர மாட்டார்கள். பலருக்கும் பிச்சை எடுப்பதும் விபசாரமும் கடைசிப் புகலிடமாகிறது. சமூகம் அவர்களை அந்த இடத்திற்கு அனுப்பிவிட்டு, ‘அவர்கள் அங்கே இருக்கிறார்கள்’ என்று அதுவே குற்றம் சாட்டவும் செய்கிறது.
நமது சினிமாக்களில் மாற்றுப் பாலினத்தவர் அவமானப்படுத்தப்பட்டதற்கு அளவே இல்லை. அவர்களைப் பற்றிய பொதுக் கருத்துக்களை வலியாக்கியதில் அவற்றிற்கு பெரும் பங்கு உண்டு. பல சமயங்களில் தமிழ்ச் சமூகத்தைவிட தமிழ் சினிமாக்கள் கொடூரமானவையாக இருக்கின்றன. இன்று மாற்றுப் பாலினத்தவர்கள் கல்வியாலும், கலையாலும், தமக்கான அரசியலாலும் தங்களது இடத்தை உருவாக்குகிறார்கள். பிரியா பாபு, ஆஷா பாரதி, லிவிங் ஸ்மைல் வித்யா, ரோஸ், நர்த்தகி நடராஜ், லக்ஷ்யா, மலைக்கா, ஸ்ரீதேவி, மதனா, கல்கி என பல ஆளுமைகள் இன்று பல்வேறு துறைகளில் நம்முன் எழுந்து நிற்கிறார்கள். மாற்றுப் பாலினம் என்பது இனி மைய நீரோட்டத்தில் விலக்க முடியாத ஒரு அங்கம்.
இன்னும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி ஏராளம் இருக்கிறது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு மிகவும் முக்கியம். காவல்துறை, செவிலியர் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். அதேபோல கழிப்பறைகள், பேருந்துகள், ரயில்களிலும் சிறப்பு இருக்கை வசதிகள் அளிக்கப்பட வேண்டும். கல்வித்திட்டத்தில் மாற்றுப் பாலினத்தவர் பற்றிய அறிவியல் பூர்வமான பார்வைகளை இணைக்க வேண்டும்.
நான் என் கவிதைகளில் பெண்ணின் மனதை எழுதுவதற்குத்தான் எப்போதும் போராடிக்கொண்டிருக்கிறேன். எனது ஆண் உடல் என்ற தடை நீங்கும்வரை அந்த மனதை நெருங்கிச் செல்லவே முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது.
(பேசலாம்...)
மனுஷ்ய புத்திரன் பதில்கள்நாடாளுமன்ற அதிகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது சரியா?
- எம்.குணசேகரன், வேலாயுதம்பாளையம்.நமது அரசாங்க அதிகாரத்தில் கார்ப்பரேட்டுகளும் பெரு முதலாளிகளும் தலையிடுவதோடு ஒப்பிட்டால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை.
கடவுளை தேடிப்போய் கும்பிட வேண்டுமா; இல்லை, நாம் இருக்கும் இடத்திற்கு அவரை வரவழைக்க வேண்டுமா?
- எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.கடவுளைத் தேடிப்போனால் நீர் பக்தர். உமது இடத்திற்கு அவரை வரவழைத்தால் நீர் சாத்தான்.
டெல்லி போலீசாரை 24 மணி நேரமும் பணி செய்யச் சொல்லும் அரசின் உத்தரவு சரியா?
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.லஞ்சம் வாங்கும் போலீசாரை கேட்டுப் பாருங்கள். ஒரு நாளைக்கு 48 மணி நேர டூட்டி போடச் சொல்கிறார்களாம்.
‘‘எங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே தேவையில்லை’’ என உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் மத்திய அரசுக்கு சவால் விடுவது பற்றி?
- அ.குணசேகரன், புவனகிரி.அவர் சொல்வது சரிதான். ஏற்கனவே நிர்வாகத்தை அரசியல்வாதிகளும் கான்டிராக்டர்களும் மணல் கொள்ளையர்களும்தானே நடத்துகிறார்கள். எதற்கு தண்டச்செலவு என்று நினைத்திருப்பார்.
எல்லையில் தொடர்ந்து இந்திய வீரர்கள் கொல்லப்படுவது பற்றி...?
-ஜி.கோபாலகிருஷ்ணன், திருவாரூர்.இந்தியா - பாகிஸ்தான் இரண்டுக்குமே ஒரு குட்டி யுத்தம் தேவைப்படுகிறது. அதற்கான முகூர்த்தம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
நெஞ்சில் நின்ற வரிகள்தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பத்து பெண்களைச் சொல்லும்படி கேட்டால் எனது பட்டியலில் நிச்சயம் அமலா இருப்பார். அவ்வளவு அழுத்தமான உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு முகம் என்பது அபூர்வமானது. அமலாவுக்காகவே இந்தப் பாடலை பலமுறை பார்த்திருக்கிறேன். லதா மங்கேஷ்கரின் குரல் இந்தப் படத்தில் அமலாவுக்காகவே வார்க்கப்பட்டது போல அவ்வளவு இயைந்துபோகிறது.
காதலின் துடிப்பையும் இளமையின் நடனத்தையும் இந்தப் பாடல் நிகழ்த்தும் வேகம் அபாரமானது. கமல் திரையிலும் எஸ்.பி.பி. பின்னணியிலும் வெகு அற்புதமாக அதை வழி நடத்துகிறார்கள்.
‘வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலுவென சிறகுகள்
படபட துடிக்குது எங்கும் தேகம் கூசுது’
துண்டு துண்டாக உடைக்கப்பட்ட இந்தப் பாடல் வரிகளில் அர்த்தம் என்பது நேரடியானதல்ல. அதற்குப் பின்னே இருக்கும் குதூகலத்தால் அது பொங்கிப் பிரவகிக்கிறது.
எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள் :
https://www.facebook.com/aathmaarthi.rs?fref=tsஆத்மார்த்தியின் ஃபேஸ்புக் பதிவுகள் அந்தரங்கமான கவிதைகள், கோபதாபங்கள், புத்தகங்கள், இசை, சினிமா, வாழ்க்கையின் சுவாரசியமான தருணங்கள் என பலவற்றாலும் நிரம்பியிருப்பவை. அவரது சமீபத்திய ஒரு பதிவு: நேற்றைக்கிரவு 11 மணியளவில் மதுரைக்கல்லூரியின் எதிர்ப்புறம் பேருந்து நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு ஒரு நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அந்த நண்பர் தன் டூவீலரை அருகே நிறுத்தி இருந்தார். முன் சீட்டில் வந்து அமர்ந்தார். நான் டிரைவர் சீட்டிலேயே இருந்தேன். அமர்ந்தவர் இடதுபுறக் கதவை முழுவதுமாகத் திறந்து வைத்தார். லைட்டைப் போடச் சொன்னார். அவரது செயல்களை நான் ஏன் எனக் கேட்க நினைத்தும் கேட்கவில்லை. சற்று நேரத்தில் ஒரு பேட்ரோல் வாகனம் வந்து மெல்ல அருகே ஊர்ந்தது. அதில் இருந்து இறங்கிய இரண்டு காவலர்கள், எங்கள் வாகனத்துக்கு சற்றுத் தள்ளி நின்றபடியே ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தைகூட பேசாமல் நகர்ந்து சென்றுவிட்டனர்.
பேசிக்கொண்டிருந்த என் நண்பர் உடனே என்னிடம்... ‘‘இதுக்குத்தான் ஆத்மா கதவைத் திறந்து லைட்டைப் போடச் சொன்னேன். நம்மகிட்டே எதுவும் கேட்காமலே அவர்கள் சோதனையை முடிச்சுட்டுப் போயிட்டாங்க... ஒன்று, நாம காரில் குடிக்கிறோமா என்பதை சோதிக்கணும். அல்லது ஒரு ஆணும் பெண்ணும் காரை நிறுத்திவிட்டுக் கூடுகிறார்களா என்பதையும் கண்காணிக்கணும். திறந்திருக்கும் கதவும் உள்ளே எரியும் விளக்கும் இது இரண்டும் நடக்கலைன்னு உணர்த்திடும் இல்லையா’’ என்றார். அத்தனை பரபரப்பிலும் என் நண்பரின் சமயோசித புத்தியை நினைத்து வியந்தேன்.