ஐந்து ஐந்து ஐந்து : சினிமா விமர்சனம்




ஒரு சாலை விபத்தின் கடும் பரபரப்பில் ஆரம்பிக்கிறது ‘555’. ஐ.டி-யில் பணிபுரியும் பரத்தும் அவர் காதலியும் விபத்தில் சிக்க, பரத்துக்கு தலையில் பலத்த காயம். விபத்தை மட்டும் ஒப்புக்கொண்டு, காதலியே இல்லை என சத்தியம் செய்கிறார்கள் டாக்டரும் அண்ணனும். பரத்துக்கு உண்மையிலேயே காதலி இருந்தாரா? இருந்தால், அவர் எங்கே? இந்த மர்மங்கள் இட்டுச் செல்கிற இடம் என்ன என்பதை அறியும் பரபரப்பு க்ளைமாக்ஸ்தான் மீதிக் கதை.

முதல் ஃப்ரேமிலேயே படத்தைத் துவக்கி, பிரதான கதாபாத்திரங்களை ‘நச¢ நச்’சென அறிமுகப்படுத்தி ஐந்தாவது நிமிடத்திலேயே படத்திற்குள் நம்மை இழுப்பதில் வெற்ற¤ பெற்றிருக்கிறார் டைரக்டர் சசி. பரபரப்பான சாலையில் தீப்பிடிக்கும் திரைக்கதை, கடைசி வரையிலும் அதே திருப்பங்களோடு நகர்கிறது. ஆனால், அதே அதிக திருப்பங்கள்தான் திரைக்கதையை ரசிகன் தாங்க முடியாத அளவுக்கு ஆக்கிவிட்டதோ என்றொரு நினைப்பு எழுவது நிச்சயம்.

தனது தோற்றத்திற்கு ஏற்ற ஆக்ஷன் கதையில், அதிகம் பேசாமல் சட்சட்டென்று முடிவெடுத்து காரியம் சாதிக்கும் நேர்த்தியில் பரத் அருமை. இத்தனை நாள் இடைவெளி சரியாக நிரப்பப்பட்டிருக்கிறது. மொட்டைத் தலை, பரட்டைத் தலை, அழகான ஸ்லிம் உடம்பு, அதிரடிக்கும் சிக்ஸ்பேக் (ஒன்றிரண்டு அதிகம் இருக்கும் போல!) என கடுமையாக எடை மாற்றி மாற்றி பின்னுகிறார் பரத். நடிப்பிலும் ரசிக்க ரசிக்க குறையாத கம்பீரம், அழகு! காதலில் மருகும்போதும், காதலை உணர்ந்து தவிக்கும்போதும், காதலியைத் தேடும்போதும் முகபாவங்களில் அருமையான முன்னேற்றம்.

மென்மையான காதல்தான் சொல்லத் தெரியும் என்று நினைத்தால், ஆக்ஷனிலும் அதிரடிக்கிறார் டைரக்டர் சசி. படம் மொத்தமும் நிலவுகிற மேக்கிங் ஸ்டைல் புது தினுசு. ஒன்றிற்கு இரண்டு கதாநாயகிகள் இருந்தும், எங்கும் கவர்ச்சியைப் பயன்படுத்தாமல் கௌரவமாகக் காட்டியிருக்கிற விதம் சசிக்கு நிச்சயமாக ப்ளஸ்!

சித்திரமாக இருக்கிறார் மிருத்திகா. சடசடவென உருண்டோடும் படத்தில் அவர் பெரிய ஆறுதல். ஏதோ ‘பவர்’ பரத்திடம் இருக்கிறது என வெகுளியாக நம்புவதும், சிரிப்பதும், வெட்கமும் அப்படியொரு இயல்பு. ‘காதலில்’ உருகிக் கரையும்போது, ரசிக்க முடிகிறது. இன்னொரு நாயகியான எரிகா பெர்னாண்டஸ் பக்கமும் கொடி பறக்கிறது. எடுத்தெறிந்து பேசியே பழக்கப்பட்ட சந்தானம், இதில் பொறுப்புள்ள பரத்தின் அண்ணனாக நடித்திருப்பது ஆச்சரியம். வரவர சந்தானத்தின் டயலாக்கை நாமே யூகித்து விடலாம் போல.

வில்லனின் பின்னணி, யாரும் எதிர்பார்க்காத கிளைக்கதை. அத்தனை விரட்டல், மிரட்டல், பில்ட் அப்போடு வரும் கதையில், ஏன் இத்தனை அடுக்கடுக்கான புதிர்கள்? அதுவும் பாப்கார்ன் பாக்கெட்டை குனிந்து பார்த்தால் கூட ஏதோ ஒரு மர்மம் மிஸ்ஸாகும் அளவுக்கா இருக்க வேண்டும்? ரொம்ப ஓவர்!

புது இசையமைப்பாளர் சைமன் இன்னும் பெரிய இடத்திற்கு வரக்கூடிய அறிகுறி புலப்படுகிறது. ஒளிப்பதிவில் முதல் ஃப்ரேமில் இருக்கும் அதே அக்கறையோடு கடைசி வரை வெளுத்துக் கட்டுகிறார் புதுமுகம் சரவணன் அபிமன்யு. எப்படியிருந்தாலும் ஈர்ப்பை, கொஞ்சம் குழப்பத்தைத் தவிர்த்து, திரைக்கதையில் தெளிவு காட்டியிருந்தால், ரொமான்டிக் த்ரில்லராக முதலிடத்தில் இருந்திருக்கும் 555!
- குங்குமம் விமர்சனக் குழு