சாயம் வெளுக்கும் கட்சிகள்
சுதந்திர இந்தியாவில் இதுவரை நடக்காத பேரதிசயம். காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என அத்தனை தேசியக் கட்சிகளும் ஒரே கூட்டணி அமைத்துவிட்டன. சீனா, பாகிஸ்தான் அத்துமீறல்கள், விலைவாசி பிரச்னை, ஈழத்தமிழர் படுகொலை, நதிநீர் பிரச்னைகளில் எல்லாம் ஒருங்கிணையாத இந்தக் கட்சிகள் எதற்காக இப்படி கூட்டணி சேர்ந்தன?
வழக்கறிஞர்கள் சுபாஷ் சந்திர அகர்வால், அனில் பேயர்வால், பிரசாந்த் பூஷன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், ‘அரசிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு சலுகைகளைப் பெற்றுவருகிற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்கு உட்பட்டவையே’ என்று அறிவித்தது. மேலும் காங்கிரஸ், பி.ஜே.பி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் உடனடியாக பொது தகவல் அலுவலர், மேல் முறையீட்டு அலுவலர்களை நியமிக்குமாறும் உத்தரவிட்டது. தங்கள் அடித்தளமே ஆட்டம் காண்பதைக் கண்டு கொதித்த கட்சிகள், தகவல் உரிமைச் சட்டத்தையே திருத்த முடிவு செய்திருக்கிறார்கள். இதை எதிர்த்து, நாடெங்கும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் போராடத் தொடங்கியுள்ளார்கள்.
‘‘அரசியல் கட்சிகளின் பொதுநோக்கம் மக்களுக்கு நன்மை செய்வதுதான். அவர்கள் நிறுத்துகிற வேட்பாளர்களுக்கு ஓட்டளித்து தங்களுக்காக குரல் கொடுக்க அனுப்புகிறார்கள் மக்கள். மக்களைச் சார்ந்தே இயங்கக்கூடிய அரசியல் கட்சிகள், மக்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும். கட்சிகளின் கொள்கைகளைப் பற்றி கேள்வி கேட்க முடியாது. ஆனால் கட்சிக்கு எங்கிருந்து நிதி வருகிறது? எப்படி செலவு செய்யப்படுகிறது என்று தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது. கட்சிகளுக்கு வரும் நன்கொடையில் மக்களின் பணமும் கலந்திருக்கிறது. வேட்பாளர் நேர்மையானவரா, ஒழுக்கமானவரா என்று தெரிந்து கொள்ளவும் மக்களுக்கு உரிமை உண்டு. இந்த சட்டபூர்வ உரிமைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் கரம் கோர்த்து நிற்கின்றன. ஏன் இந்த அச்சம்..?
‘எங்கள் வரவு செலவுக் கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கிறோம். அங்கிருந்து வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார்கள். 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடைகளை செக்காக வாங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்த ஓட்டையைப் பயன்படுத்தி எல்லோருமே ரூ.20 ஆயிரத்துக்குக் குறைவாக நன்கொடை அளித்ததாக கணக்கு காட்டுகிறார்கள். இதனால் நன்கொடை அளித்தவரின் அடையாளம் மறைக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி வருமானவரித் துறையிடம் தாக்கல் செய்துள்ள கணக்கில், 88% நன்கொடை ‘unknown source’ என்று கூறியுள்ளது. பி.ஜே.பி 78%, கம்யூனிஸ்ட்டுகள் 96% ‘unknown source’ என்று கூறியுள்ளார்கள். அந்த ‘unknown source’ எது..? மக்கள் அதைத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு?’’ என்று கேள்வி எழுப்புகிறார் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் நிர்வாகி தீபக் ராஜ்.
‘‘ஒவ்வொரு கட்சியும் பல கோடி ரூபாய் வரிவிலக்கு பெறுகின்றன. பல நூறு கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை குறைந்த வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து பயன்படுத்துகிறார்கள். அரசு வானொலி, தொலைக்காட்சிகளில் இலவச பிரசாரம் செய்கிறார்கள். அரசிடம் அனைத்து லாபங்களையும் அனுபவித்துக் கொண்டே சட்டத்துக்கு உட்பட மறுக்கிறார்கள். உழைப்பாளிகள் கட்சி, வர்க்கப் போராளிகளின் கட்சி என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கிற மார்க்சிஸ்ட்தான் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறது. கட்சியைக் கூட வெளிப்படையாக நடத்தாத இவர்களால் ஆட்சிக்கு வந்து எப்படி வெளிப்படையான நிர்வாகத்தைத் தரமுடியும்? வேட்பாளர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்? இதில் என்ன ஒளிவுமறைவு? தவறு செய்ததாக ஒருவரை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள். பிறகு மீண்டும் சேர்த்து தேர்தலில் சீட் தருகிறார்கள். என்ன நடந்தது? அவர் செய்த தவறு என்னவானது? இதையெல்லாம் கேட்க வாக்காளனுக்கு உரிமை இருக்கிறது. சர்வகட்சி கூட்டம் போட்டு, ‘இந்தத் தகவல்களை தரமுடியாது, இந்தத் தகவல்களை மட்டுமே தருவோம்’ என்று சொல்லியிருந்தால் கூட நியாயம். தொடக்கத்திலேயே எதிர்த்து சட்டத்திருத்தம் கொண்டு வருகிறார்கள். இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை’’ என்கிறார் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ.
‘‘பெரும் முதலாளிகளுக்கு ஆளுங்கட்சி பல சலுகைகளை வழங்குகிறது. தொழில் நொடித்துப் போனதாகக் கூறி வரிச்சலுகை தருகிறார்கள். அதற்கு நன்றிக்கடனாக அந்நிறுவனங்கள் நன்கொடை தருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைந்து லாபம் பார்ப்பதற்காக கோடிகளைக் கொட்டுகின்றன. முதலாளிகளுக்கு அரசியல் ஆதரவு அவசியமாக இருக்கிறது.
அதனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடு இல்லாமல் நிதி வழங்குகிறார்கள். வெளிப்படையாக இந்த பரிவர்த்தனை நடக்கிறபோது முதலாளிகள் தருகிற நிதி வருமான வரிக்கு உட்பட்டதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். கறுப்புப் பணம் வெளியில் வரும். இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அரசியல் கட்சிகளின் சாயம் வெளுத்துவிட்டது’’ என்கிறார் தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர் செல்வராஜ்.
ஆர்.டி.ஐ. விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் பதற்றத்தையும், தவிப்பையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை நாடி வரும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
- வெ.நீலகண்டன்
ஏன் எதிர்க்கிறார்கள்?ஞானதேசிகன், காங்கிரஸ்: கட்சிகள் எப்போதும் வெளிப்படையாகவே இயங்குகின்றன. கட்சிகளின் வரவு செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஆர்.டி.ஐ மூலம் அங்கிருந்து தகவல்களைப் பெறமுடியும். அரசியல் கட்சிகள் ஒரு பிரச்னையில் தங்கள் நிலைப்பாட்டை எடுக்கும்போது, பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். உடன்பாடு இல்லாவிட்டாலும் அரசியல் காரணங்களால் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். எதற்காக அந்த முடிவை எடுத்தோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. வேட்பாளரின் சொத்து, வழக்கு விபரங்கள் அனைத்தையும் தேர்தல் நேரத்தில் பத்திரிகைகள் வெளியிடுகின்றன.
இதை விட வேறென்ன வெளிப்படைத் தன்மை வேண்டும்?
இல.கணேசன், பி.ஜே.பி.: காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் வரையில், ஆர்.டி.ஐ வரம்புக்குள் கட்சிகளைக் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு மிரட்டல் அரசாங்கமாக செயல்படுகிறது. தி.மு.க ஆதரவை வாபஸ் வாங்கிய மறுநாளே சி.பி.ஐ மூலம் ரெய்டு நடத்தப்படுகிறது. ஒரு தொழிலதிபர் ஆத்மார்த்தமாக ஒரு கட்சிக்கு நன்கொடை கொடுப்பது தவறல்ல. அவர்களுடைய பெயரைப் பகிரங்கப்படுத்தினால், ‘ஆளுங்கட்சி பழி வாங்கிவிடும், ரெய்டு, கேஸ் என்று அலைய வேண்டி வரும்’ என்று அஞ்சுகிறார்கள். ஆர்.டி.ஐக்குள் கட்சிகளைக் கொண்டு வருவதால் மட்டும் பெரிய மாற்றங்கள் நிகழாது. தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். தேர்தல் செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால் கட்சிகள் நன்கொடை பெற வேண்டிய அவசியமே இருக்காது.
ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.எம்: கட்சியின் வரவு செலவுகள் அனைத்தும் மாநிலக்குழுவிலும், மத்திய குழுவிலும் தணிக்கை செய்யப்படுகின்றன. வருமான வரித்துறைக்கும் வழங்கப்படுகிறது. கட்சிகளை ஆர்.டி.ஐக்குள் கொண்டு வரும்போது பல சிக்கல்கள் எழும். அண்மையில் ஒருவர், ‘40 வருடங்களாக இந்தியா முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிறுத்திய வேட்பாளர்கள் பற்றிய விபரங்களைக் கொடுங்கள்’ என்று கேட்டு எங்களுக்கு ஒரு மனுவை அனுப்பியிருக்கிறார். அத்தனை ஊழியர்களும் உட்கார்ந்து தயார் செய்தால் கூட இந்தத் தகவல்களைத் திரட்ட குறைந்தது 1 வருடமாவது ஆகும். வேட்பாளர் தேர்வு என்பது கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. கட்சிக்கென்று தேர்தல் அறிக்கை இருக்கிறது. பொதுக்கொள்கை திட்டங்கள் இருக்கின்றன. பிடித்தால் ஓட்டு போட மட்டுமல்ல, மறுக்கவும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
சி.மகேந்திரன், சிபிஐ: எங்கள் கட்சியின் வரவு, செலவு கணக்குகளை தருவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. மாநில மாநாடு, தேசிய மாநாடுகளில் வரவு செலவு அறிக்கையை பிரின்ட் செய்து அனைவருக்கும் வழங்குகிறோம். ஆனால், கட்சியின் உள்ளே என்ன நடக்கிறது, முரண்பாடுகள் என்ன என்பதை எல்லாம் பொதுவெளியில் சொல்ல முடியாது. அமைச்சரவையில் கூட ஒரு முடிவை எடுக்கும் முன்பு இருதரப்பு விவாதங்கள் நடைபெறுவதுண்டு. முடிவுதான் முக்கியமே ஒழிய விவாதங்களைப் பற்றிப் பேசுவது வீண்வேலை. அது கட்சியின் கொள்கைகளை திசை திருப்பவும், திரிக்கவுமே வழி வகுக்கும். அரசு எந்திரத்துக்கும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கும் இந்த வரம்பு பொருந்தும். எங்களைப் போன்ற பாட்டாளி வர்க்க கட்சிகளுக்கு இது அவசியமில்லை.
அரசிடம் இருந்து அனைத்து தேசிய கட்சிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல சலுகைகளைப் பெறுகின்றன. காங்கிரஸ் கட்சி டெல்லியில் 1,72,735 சதுர அடி நிலத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மதிப்பு ரூ.1,036.41 கோடி. கடந்த 3 ஆண்டுகளில் 300.92 கோடி வரிவிலக்கு பெற்றுள்ளது. பி.ஜே.பி. 92,871 சதுர அடி நிலத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மதிப்பு ரூ.557.23 கோடி. 3 ஆண்டுகளில் பெற்ற வரிவிலக்கு 141.25 கோடி. சிபிஎம் 40,156 சதுர அடி நிலத்தைப் பயன்படுத்துகிறது. மதிப்பு, ரூ.240.94 கோடி. மூன்றாண்டுகளில் 18.13 கோடி வரிவிலக்கு பெற்றுள்ளார்கள். சிபிஐ கட்சி 13,068 சதுர அடி நிலத்தை பயன்படுத்துகிறது. மதிப்பு, ரூ.78.41 கோடி. பெற்ற வரிவிலக்கு 24 லட்சம்.