சிரிப்பு போலீஸ் மொக்கை போலீஸ் டம்மி போலீஸ்





‘‘இப்பவும் பாருங்க... வீட்டில குழந்தை சாப்பிடலைன்னா, ‘போலீஸ்காரனைக் கூப்பிடுவேன்... ஒழுங்கா சாப்பிடு’ன்னு மிரட்டுவாங்க. போலீசை பூச்சாண்டியாத்தான் குழந்தைகளுக்கே பழக்கம். ஆனா ‘ரகளபுரம்’ போலீசைப் பார்த்தா, அந்தக் குழந்தைகளுக்கே சிரிப்பு வரும். இந்தப் படத்தில் எல்லாமே உல்டா. குற்றவாளிகள் போலீசுக்கு பயப்படறது போய், சம்பளம் வாங்கினதும் பையைப் பிடிச்சுக்கிட்டே பயந்தபடி போற கான்ஸ்டபிள் வேலு இவன். ‘ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டு’ன்னு சூர்யா சார் நரம்பு தெறிக்க பேசுற மாதிரி கிடையாது. யாரோ ரெண்டு பேர் அடிச்சுக்கறதைக் கூட பார்க்க சகிக்காத மனசு. இந்த வேலு, ரகளபுரம் ஸ்டேஷனில் நடத்துகிற அல்லுசில்லுதான் படத்தோட ஏரியா’’ - கருணாஸ் பேசினாலே ஆரவாரம்; வார்த்தைக்கு வார்த்தை காமெடி காரம்!
‘‘ஆக, இப்ப இருக்கிற காமெடி சீசனைப் புடிச்சிட்டீங்க?’’

‘‘நாம எப்பண்ணா காமெடியை விட்டோம். வாழ்க்கையில கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டால்தான் காமெடி வரும். திடீர்னா இந்த இடத்திற்கு வந்து உட்கார்ந்தோம்? ஒத்தையில வீரபாண்டி கோயில் திருவிழாவிற்கே போக வெவரம் தெரியாதவனை, வெளிநாட்டில் எறக்கி விட்டா வெலவெலப்பா இருக்கும்ல... அப்படி எனக்கு இருந்தது பாலா சார் கையில குட்டு வாங்கினப்போ! பழசையெல்லாம் மறக்கறது கருணாஸ் பயபுள்ளையோட ஸ்டைல் இல்லைண்ணா. போலீஸ் பத்தி 100 கதை வந்தாச்சு. எல்லாமே டிப்டாப்பா, கம்பீரமா, தியாகமா வந்திருக்கு. சிவாஜி ஐயாவை ‘தங்கப்பதக்க’த்துல மறக்க முடியுமா? அங்கிட்டு எம்.ஜி.ஆர், இங்கிட்டு சிவாஜி, ரஜினி, கமல்னு எத்தனையோ பேர் போலீஸா வாழ்ந்திட்டுப் போயிட்டாங்க. நாம அதே கம்பீரத்தில் இருந்து நடிச்சா சிரிப்பாங்க. அதனால் இந்தப் படத்தில் சிரிப்பு போலீஸ், மொக்கை போலீஸ், டம்மி போலீஸ்னு எல்லாத்தையும் கலந்தடிச்சு செய்திருக்கேன்.’’

‘‘எப்படியிருக்கும் படம்?’’
‘‘ ‘ரகளபுரம்’ போலீஸ் ஸ்டேஷன் பார்க்கவே நல்லாயிருக்கும். சதா மாத்திரையும் தண்ணி டம்ளருமா இருக்கிற இன்ஸ்பெக்டர் மனோபாலாவைப் பார்த்தாலே சிரிப்பு வரும். சிங்கம் புலி, கோவை சரளா, மயில்சாமின்னு நிறையப் பேர். இப்பப் பாருங்க, மெரீனா பீச்சுக்கு அடுத்து ஆஸ்பத்திரியிலதான் கூட்டம் களை கட்டுது. ஏன்னா, இருக்கிற பிரச்னையில் சுகர், ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், கிட்னி பிராப்ளம்னு எல்லாம் ரவுண்டு கட்டுது. ஜனங்க சிரிக்க
மறந்ததுதான் எல்லாத்துக்கும் காரணம். நாங்க ஆளுக்காளு டாக்டர் ஆகி வைத்தியம் பார்க்கறோம். 50 ரூபாய் செலவழிச்சு டிக்கெட் எடுத்தா, கன்னம் வலிக்க சிரிச்சு, நல்லா மூச்சு விட்டு ஆயுசை அதிகரிக்கலாம். சலம்பறதும், அலம்பறதும் இந்த வாழ்க்கையில ஒரு சின்னக் கட்டம்ணே. பிறகு பக்குவப்பட்டு, பாலீஷ் ஆகி, பயபுள்ள மனுஷனாயிரணும். இந்த கருணாப்பய அடிபட்டு, இடிபட்டு ஏதோ இன்னைக்கு இந்த ஷேப்ல இருக்கான்னா அதுக்கு இந்த சிரிப்புத்தான் காரணம். மனுஷங்களைப் படிக்க படிக்கத்தானே வாழ்க்கை நல்லாயிருக்கும். சிரிச்சாத்தாண்ணே ஆக்ஸிஜன் உள்ளே போயி தாராளமா வெளியே வரும். ‘ரகளபுரம்’ பார்த்திட்டு சிரிச்சுக் கொண்டாடுங்கன்னு சொல்றதுதான் மெசெஜ். வடிவேலு, விவேக் நடிச்ச போலீஸ் படமெல்லாம் எப்பவும் ஹிட்டுதான். ‘ஏழுமலை’ மறக்க முடியுமா? அதையே முழு நீளமா படம் பண்ணினால் எப்படியிருக்கும்... அதுதான் ‘ரகளபுரம்’.’’



‘‘ஹீரோயின் அழகழகா இருக்காங்களே?’’
‘‘ஆமாண்ணே. நம்ம படமெல்லாம் அப்படித்தானே இருக்கும். அங்கனா ராய்னு புதுப்பொண்ணு. புடிச்சுக் கொண்டு வந்திட்டோம். ரொம்ப மரியாதையான பொண்ணு. மும்பையில் படிச்சிக்கிட்டு இருந்தது. போதும்னு கூட்டி வந்திட்டோம். அதோட சஞ்சனா சிங்னு கிளாமர் அயிட்டம், முமைத் கான் சிஸ்டர்ஸ், ஏக்தா திரிவேதின்னு அப்படியே சிம்ரன் இடுப்போட வந்திருக்கு. கிளாமர் சைடுக்கு அவங்க பக்கபலமா இருந்தாங்க. இளைஞர்கள் கண்ணு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகராம பார்த்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. டைரக்டர் மனோ நகைச்சுவையில்


மன்னன்...’’
‘‘உங்க படங்களில் குத்துப் பாட்டு கண்டிப்பா இருக்குமே?’’
‘‘ஸ்ரீகாந்த் தேவாதான்
மியூசிக். எல்லாமே ஐயா வைர
முத்துதான் எழுதினார்.
‘ஒபாமாவும் இங்கேதான்
ஒசாமாவும் இங்கேதான்
சல்மான்கானும் இங்கேதான்
சாமிநாதனும் இங்கேதான்
அறிவாளியும் இங்கேதான்
அடிமுட்டாளும் இங்கேதான்னு
ஆவி போனால்
கூடுதானடா’ன்னு ஒரு பாட்டு இருக்கு. இப்ப எங்கே பார்த்தாலும் காலர் ட்யூனா இதுதான் அலறுது. இப்ப வெற்றிப் படம்னா அதில் கேமராமேன் வேல்ராஜ்னு ஒரு பேர் கண்டிப்பா வரணும்னு ஆயிடுச்சு. அவர்தான் ‘ரகளபுர’த்துக்கும் கேமரா. வைரமுத்து, வேல்ராஜ் எல்லாம் எனக்குப் பெரிய பலம். போருக்குப் போகும்போது வீரதீர தளபதிகள் மாதிரி இவங்க.’’
- நா.கதிர்வேலன்