செஞ்சுரி அடிக்கும் வெங்காயம்!





போன மாதம் சின்ன வெங்காயம் என்றால், இந்த மாதம் பெரிய வெங்காயம். கிலோ 20 ரூபாய் விற்ற பெரிய வெங்காயம், புதன்கிழமை நிலவரப்படி 80 ரூபாய். சில தினங்களில் செஞ்சுரி அடிக்கும் என்கிறார்கள். இனி, வெங்காயத்தை கடித்துக்கொண்டு கஞ்சித் தண்ணீரைக் கூட குடிக்க முடியாது போல! 110 ரூபாய் சாம்பார் வெங்காயமே 40 ரூபாய்க்கு இறங்கி வந்துவிட்ட நிலையில், பெரிய வெங்காயத்துக்கு என்னவாயிற்று?

‘‘மகாராஷ்டிராவில் நாசிக் நகரத்தைச் சுற்றி 400 சதுர கி.மீ அளவுக்கு வெங்காயம் விளைகிறது. கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத்திலும் ஓரளவுக்கு விளைகிறது. இந்த இடங்களில் இருந்துதான் இந்தியா முழுக்க வெங்காயம் போகிறது. தமிழகத்துக்கு வரும் 80 சதவீத வெங்காயம் நாசிக்கில் விளைவதுதான். கடந்த 3 வருடங்களாக பெரிய வெங்காயத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. அதனால், பெரும்பாலான மகாராஷ்டிர விவசாயிகள் மாதுளை, திராட்சை, கோதுமை, மக்காச்சோளம், கரும்பு விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். இதில் கடந்த ஆண்டு வறட்சி, விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாடு வேறு. இதனால் அங்கு வெங்காய உற்பத்தி பெருமளவு குறைந்து விட்டது. விளைந்திருந்த வெங்காயமும் அண்மையில் பெய்த மழையால் அழுகி விட்டது. ஆந்திரா, கர்நாடகாவிலும் இதே பிரச்னை. பற்றாக்குறையால் இப்போது விலை அதிகமாகி விட்டது’’ என்கிறார் சென்னை கோயம்பேடு வெங்காய மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர், ஜான் பல்தாரிஸ்.

‘வெங்காய அரசியல்’ ஆட்சியையே கவிழ்த்த ஃபிளாஷ்பேக், அரசியல்வாதிகள் மனதில் மின்னுகிறது.
‘‘வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அரசின் இறக்குமதி கொள்கையும் காரணம்’’ என்கிறார் கோயம்பேடு மார்க்கெட்டின் மொத்த விற்பனையாளர் சங்க ஆலோசகர் வி.ஆர்.சௌந்தர்ராஜன்.

‘‘மகாராஷ்டிர விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. 2010ல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, வெங்காய விலை உயர்ந்தபோது, மத்திய அரசு உடனடியாக ஏற்றுமதியைத் தடை செய்தது. பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டபிறகே அது சரியானது. ஆனால் இப்போது, ஏற்றுமதி கட்டுப்படுத்தப்படவில்லை. சற்று கூடுதல் விலை கிடைப்பதால், விவசாயிகள் ஏற்றுமதியில் ஆர்வம் காட்டுகிறார்கள். டீசல் விலை உயர்வால், போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து விட்டன. கர்நாடகாவில் சித்திரதுர்கா, தாவணகரெ பகுதியில் இப்போது 50 லட்சம் மூட்டை விளைந்து வரவேண்டும். ஆனால் பாதி அளவுக்கே விளைந்துள்ளது. ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நடப்பதால், லாரி போக்குவரத்து தடைபட்டுள்ளது. அதனால் தட்டுப்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. பாகிஸ்தான், சீனாவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்றார்கள். ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த வெங்காய லாரிகளை அந்நாட்டு அரசு இந்தியாவுக்குள் அனுமதிக்கவில்லை. இன்னும் ஒரு மாதத்துக்கு விலை குறைய வாய்ப்பில்லை. அக்டோபரில் புதிய வெங்காய வரத்து தொடங்கிய பிறகு 50 ரூபாய் அளவுக்கு நிலை கொள்ள வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் சௌந்தர்ராஜன்.

பச்சடிக்கு நோ!
விலை எகிறியதால், பெரும்பாலான ஹோட்டல்களில் ஆம்லெட், வெங்காய போண்டா, தோசைகளில் வெங்காயத்தின் இடத்தை முட்டைக்கோஸ் பிடித்திருக்கிறது. வெங்காயப் பச்சடிக்குப் பதில் வெள்ளரி பச்சடி வழங்கப்படுகிறது. வெங்காய விலை கட்டுக்குள் வந்ததும் இந்நிலை மாறும் என்கிறார்கள் ஹோட்டல் உரிமையாளர்கள்.
இந்த விலை உயர்வால், டெல்லி அரசு சலுகை விலையில் வெங்காயத்தை விற்கத் தொடங்கியுள்ளது. அங்கு, 280 ‘மதர் டெய்ரி’ கடைகளில் ஒரு கிலோ ரூ.32 முதல் 35 வரை விற்கப்படுகிறது.
- வெ.நீலகண்டன்
படம்: ஜா.குணசேகரன்