‘பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது, அழுதால் கொஞ்சம் நிம்மதி’ கட்டுரை, திரைப்படக் காட்சிகள் போல மனதில் பதிந்தது. ஒரு போர், மக்களின் வாழ்வில்தான் எத்தனை வடுக்களை ஏற்படுத்தி விடுகிறது!
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மனித நேய கருத்தை தன் உணவகத்தில் பயன்படுத்தி பலனடைந்ததாக ஒரு அன்பர் கூறிய தகவல், வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது என்பதை மெய்ப்பித்துள்ளது!
- எஸ்.பிரசன்னகுமார், வேலூர்.
இதுவரை தொலைக்காட்சியில் சிரிப்பு மூட்டிய இமான் அண்ணாச்சி, இப்போது, ‘சொல்றேண்ணே... சொல்றேன்!’ என குங்குமத்தில் சிரிப்பு சரவெடியைத் தொடங்கியிருப்பது அசத்தல்.
- எஸ்.ஆதவன், புதுச்சேரி.
‘உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்ல...’ என்பதை நிரூபித்திருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ‘சதுரங்க ராணி’ ஜெனிதா ஆன்டோ. பாராட்டுக்கள்!
- வி.கே.சுஜிதா மோகன், கடலூர்.
காதலுக்கு எதிராக ஜாதித் தலைவர்களும், மதத் தலைவர்களும் கூப்பாடு போட்டு வரும் இந்நேரத்தில், காதல் என்பது ஒரு நோயாக, வன்முறைக்களமாக மாற்றப்படுவது பற்றி தெளிவாக விளக்கியுள்ளார் மனுஷ்யபுத்திரன். புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி!
- எல்.வி.கீர்த்திவாசன், மதுரை.
‘சினிமாவுக்கு வரிவிலக்கு... கல்விக்கு வரியா?’ என்பது சரியான நேரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் சரியான கேள்வி. ஏற்கனவே, ‘கல்விக் கொள்ளை’களால் பரிதவிக்கும் பெற்றோருக்கும் இந்த வரி, கூடுதல் வொரி!
- இரா.வளையாபதி, கரூர்.
‘நடிக்க ரெடி... சம்பளத்தை குறைக்க ரெடி’ என டைரக்டர்களிடம் பேசி, டாப்ஸி, ஹன்சிகாவை எல்லாம் அப்செட் ஆக்கிய அப்சரஸ் அஞ்சலிக்கு ஜே!
- டி.வி.குணசேகரன், கோவை.
கேஸ் விபத்துகளைத் தடுக்க பேராசிரியர் மூர்த்தி கண்டுபிடித்துள்ள, ‘ஸ்மார்ட் கேஸ் சிலிண்டர் மெஷின்’, லட்சோப லட்சம் இல்லத்தரசிகளின் வயிற்றில் பால் வார்க்கும் கருவி. இத்தனைக் காலம் இப்படியொரு கருவி இல்லாததே அவமானகரமானது!
- ‘மண்வாசனை’ சாரதாமணி, சுந்தராபுரம்.
படக் காதல், நிஜக்காதல் இரண்டிற்கும் சேர்த்து சிம்பு-ஹன்சிகா ஜோடியின் எழில் கொஞ்சும் வண்ணப் படங்களில் வாரி வழங்கிவிட்டீர்... ஒரே கல்லில் இரு மாங்காய் அடிப்பதில் கில்லாடி பாஸ் நீங்க!
- ஏ.சுகுமார், காட்பாடி.
கடலுணவும் கட்டுப்படியாகாமல், அடித்தட்டு மக்களின் கைக்கு எட்ட வந்த சிக்கனும் வாய்க்கு எட்டாமல் போய்விட்ட சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடத் தொடங்கிவிட்ட சிலரை என்னவென்று சொல்வது?
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.
மனித இனத்துக்கு சவக்குழி தோண்டும் மணல் கொள்ளை உண்மையை தாங்கள் தோண்டி எடுத்து அம்பலப்படுத்தியதற்கு நன்றிகள் பல!
- ஜி.டி.முரளிதரன், சிதம்பரம்.