ஒரு வேலையை ஆரம்பித்துவிட்டால், தோல்வி பயத்தில் அதைக் கண்டிப்பாகக் கைவிடாதீர்கள்; உண்மையாக உழைப்பவர்கள்தான் உலகத்தில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
- சாணக்கியர்
ஒரு வேலை உங்களுக்குத் தரப்பட்டுள்ளது; அது மிக எளிதானதாகவோ, கடினமானதாகவோ இருக்கலாம். வழக்கமானதாக இருந்தால்கூட, அதைச் செய்து கொண்டிருக்கும்போது நடுவில் களைப்பு ஏற்படக்கூடாது என்று அவசியம் இல்லையே. ஏற்படத்தான் செய்யும். ஆனால், ஒரு பணியைத் துவக்கும்போது காட்டப்படும் உற்சாகமும், ஆரம்ப வேகமும் கடைசி வரை இருந்தால்தான் அந்தப் பணி உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்... பெருமை சேர்க்கும்! நடுவில் செய்யும் தவறுகள் உங்கள் முயற்சிகள் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டு, நிம்மதியைப் பிடுங்கிக்கொள்ளும். எனவே, நந்தி மாதிரி வந்து நிற்கும் இந்தக் களைப்பை எப்படி வெற்றிகொள்வது?
பணியைத் துவங்கும் முன் அதைப் பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அதை ஒவ்வொன்றாக முடித்தால் உங்களுக்கு வேலையின் நடுவே களைப்பு தெரியாது. உதாரணமாக, நீங்கள் திருநெல்வேலியில் இருக்கிறீர்கள். சென்னையில் தாம்பரத்திற்கு அருகில் உள்ள காமராஜபுரத்திற்கு வர விரும்பினால், முதலில் கவனம் செலுத்த வேண்டியது உங்கள் இருப்பிடத்தில் இருந்து திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கோ, பஸ் ஸ்டாண்டிற்கோ எப்படிக் கிளம்புவது, எத்தனை மணிக்குக் கிளம்புவது... இதுதான் உங்கள் பயணத்தின் முதல் பகுதி. இதில் கூடுதல் கவனம் செலுத்தினால் பதற்றம் இன்றி பயணம் செய்யலாம். இரண்டாவது பகுதி, தாம்பரத்தில் காலடி வைப்பது. அடுத்த பகுதி அங்கிருந்து ஆட்டோ பிடிப்பது... இப்படிப் பிரிக்கும்போது, பெரிய பணிகள் எல்லாம் சிறிய பணிகளின் தொகுப்பாகி விடும். சின்னச் சின்ன முடித்தல்கள் உங்களுக்கு சந்தோஷம் தரும். உங்கள் களைப்பைத் துரத்தி அடுத்த கட்டத்திற்கு வழி காட்டும்.
அடுத்ததாக, ஒரு வேலையைச் செய்யும்போது, அதைச் செய்வதற்காகவே இந்த பூமிக்கு நீங்கள் வந்திருப்பது மாதிரி நடந்துகொள்ள வேண்டும். அந்தப் பணியை வேறு யாராலும் நீங்கள் செய்திருப்பதை விட சிறப்பாகச் செய்ய முடியாது என்கிற மாதிரி, நீங்கள் பணியைச் செய்திருக்க வேண்டும். கடமைக்குச் செய்தால் களைப்பு வந்தே தீரும்.
அன்று உங்களுக்கு வேலையே ஓடவில்லை... எல்லாமே தப்புத்தப்பாக நடக்கிறது என்றால் என்ன செய்வது? அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து சரி செய்யப் பாருங்கள். சரி செய்ய முடியவில்லை என்றாலோ, காரணத்தையே கண்டறிய முடியவில்லை என்றாலோ, அன்று அந்த வேலையையே செய்யாதீர்கள். தப்பும் தவறுமாய் செய்து மேலும் களைப்படைவதை விட, அன்று அந்த வேலையைத் தொடாமல் இருப்பது நல்லது. முடிந்தால் விடுப்பு எடுத்துவிட்டு, உங்களை உற்சாகப்படுத்திக் கொண்டு திரும்பி வாருங்கள். நீங்கள் திறமையான பணியாளர் என்றால், உங்களை இதற்காக யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.
இல்லை... இன்று முடித்தே தீர வேண்டிய வேலை என்றாலும், பிரச்னையில்லை. வேலையை பகுதி பகுதியாகப் பிரித்திருப்பீர்கள் அல்லவா? அதில் ஒரு பகுதியை முடித்தவுடன் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு செயலைச் செய்யலாம் என்ற வாக்குறுதியை உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பிடித்த ஒரு கப் காபியை அருந்தும் செயலாக இருக்கலாம்... சாக்லெட் சாப்பிடுவதாக இருக்கலாம்... மனதுக்குப் பிடித்தவருடன் போனில் உரையாடலாக இருக்கலாம்... பிடித்த பாடலைக் கேட்பதாக இருக்கலாம்... இப்படி ஏதாவது. உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்ளுங்கள்... சலுகையை அளித்துக் கொள்ளுங்கள்... காரியம் சாதித்தவுடன் லஞ்சம் கொடுத்துக்கொள்ளுங்கள். வேலை உற்சாகமாக நடக்கும். களைப்பு தெரியாது. லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் தவறு என்கிற பொது விதியை மீறி, இந்த லஞ்சத்தை விரும்புங்கள்.
உங்களது வெற்றி, பிறந்த நாளில் கட் செய்யப்படும் கேக் மாதிரி. அனைவருக்கும் அதில் பங்கு உண்டு. ஆனால், தோல்வி என்பது மாத்திரை, மருந்துகள் மாதிரி. இனிப்பாக இருந்தாலும் யாரும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அதன் ஏகபோக உரிமையாளர் நீங்கள் மட்டும்தான். ஒரு நொடி களைப்பில் நீங்கள் செய்யும் தவறு, உங்களது வாகனத்தையும், பயணத்தையும் சேதப்படுத்தி விடும். எனவே, கவனமாக இருங்கள்.
உங்களிடம் உங்கள் மேலிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி கருத்து கேட்கிறது. அல்லது, ஒரு அறிக்கை தயார் செய்து தருமாறு கேட்கிறது.
உடனே என்ன செய்கிறீர்கள்? ராப்பகலாக வெறியுடன் உழைக்கிறீர்கள். பல புத்தகங்களை ஆராய்ச்சி செய்கிறீர்கள்... இன்டர்நெட்டில் நுழைந்தும் புள்ளிவிவரங்களைக் கைப்பற்றுகிறீர்கள். வியர்வை சொட்டச் சொட்ட ஒரு இறுதி பதிலை தயார் செய்து அளிக்கிறீர்கள்.
இதன் தொடர்ச்சியாக அடுத்து சில காட்சிகள் நிகழ வாய்ப்பு இருக்கிறது.
1) உங்கள் பாஸ் உங்களை அழைத்து கை குலுக்கி ‘வெரி குட்’ என்று பாராட்டி, ‘இதற்குத்தான் இந்த வேலையை உங்களிடம் கொடுத்தேன்’ என்கிறார். உங்கள் உழைப்பு வீணாகிவிடவில்லை... உங்கள் முயற்சி அங்கீகரிக்கப்பட்டது. இதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள்.
2) உங்களின் கடும் உழைப்பினால் உருவான அறிக்கையை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, சீண்டாமல் ‘‘அந்த டேபிள்ல வச்சுட்டுப் போங்க...’’ என்ற ஆணவ வரவேற்பு கிடைக்கிறது. நீங்கள் போன பின் உங்கள் யோசனைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு, தெரிந்தோ, தெரியாமலோ உங்களை ஓரம் கட்டி விடுகிறார்கள். இதற்காக நீங்கள் தூக்கமின்றி உழைத்த காட்சிகள் உங்கள் முன் நிழலாட... கொந்தளிக்கிறீர்கள்.
3) உங்களது ரிப்போர்ட்டை என்னவென்று பார்க்கவுமில்லை... படிக்கவும் இல்லை... பொருட்படுத்தவும் இல்லை. அதை அப்படியே புறக்கணித்துவிட்டு, ஒரு கற்றுக்குட்டி கொடுத்த அறிக்கையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
4) உங்களது அறிக்கையிலிருந்து உங்கள் மேனேஜருக்குத் தோன்றிய புதிய யோசனையை செயல்படுத்துகிறார்கள். அதாவது, அந்தப் புதிய யோசனை தோன்றுவதற்கே உங்கள் உழைப்புதான் காரணம். ஆனால், இந்த விஷயம் கவனிக்கப்படாமல் போக, இப்போது நீங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக உணர்கிறீர்கள்.
மேலே சொல்லப்பட்ட 2, 3, 4 நிகழ்வுகளைப் பொறுத்தவரை உங்களுக்கு ஏற்படும் ஆத்திரம் நியாயமானதுதான். உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் நியாயமானதுதான் - உங்களது கண்ணோட்டத்தில். ஆனால், நிர்வாகத்தின் நியாயம் உங்கள் நியாயத்தைவிட மேலானது. அதன்படி, உங்கள் பாஸ் நடந்து கொண்டதில் தவறு சொல்ல முடியாது.
ஆனால், நடைமுறையில் என்ன நடக்கிறது? நீங்கள் உங்களது கருத்து உதாசீனப்படுத்தப்பட்டதால் கொந்தளிக்கிறீர்கள். இந்த உழைப்பை நிராகரித்தது கூடப் பெரிதல்ல, ஒரு கத்துக்குட்டியின் மோசமான பதிலை ஏற்றுக்கொண்டு விட்டார்களே... ‘எனக்கு இங்கு என்ன மரியாதை இருக்கிறது? இதுக்காக நான் எவ்வளவு உழைத்தேன் தெரியுமா?’ என்றெல்லாம் புழுங்க வேண்டாம். நிறைய பேர் செய்கிற தப்பு இதுதான்.
ஏனென்றால், நீங்கள் வேலை செய்ய வந்திருக்கிறீர்கள். அதன்படி, சொல்லப்பட்ட வேலையைச் செய்து கொடுத்தீர்கள். வேலை செய்வதற்குத்தான் நீங்கள் அங்கு இருக்கிறீர்கள். அதற்கு பாராட்டை எதிர்பார்த்து ஏங்குவதில் பொருளில்லை. அது கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம். நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்திற்கு அவசியமில்லை. உங்கள் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற காரணத்திற்காக, உங்களை உதாசீனப்படுத்தி விட்டதாக நினைத்து வேதனை அடைந்தால் பணி நிம்மதியை இழப்பீர்கள்.
உங்களிடம் ஒரு கருத்தைக் கேட்டார்கள்... உங்களை மதிப்பதால்தான் கேட்டார்கள். நீங்கள் சொல்லிவிட்டீர்கள். அவ்வளவுதான்! சொல்கிற வரைதான் அந்த பதில் உங்களுக்கு சொந்தமானது. உங்களிடமிருந்து சென்று விட்ட பிறகு அது நிர்வாகத்தின் பொருளாகிவிடுகிறது.
எனவே, உங்கள் பதிலை ஏற்பதும், ஏற்காமல் போவதும் நிர்வாகத்தின் உரிமை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதை உங்களது மானப் பிரச்னையாக்கி துயரம் கொள்ளாதீர்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்கிற மனப்பாங்கை வளர்த்துக்கொள்கிறவர்கள், இது போன்ற நிகழ்வுகளில் காயப்பட மாட்டார்கள். இப்படி எதிர்மறையான எண்ணங்களுக்குச் சென்றுவிட்டால், உங்களின் பணியில் மெல்ல மெல்ல ஈடுபாட்டை இழப்பீர்கள். சூழலை மேலும் சிக்கலாக்கி விடாதீர்கள்..!
கண்டிப்பாக இதுபோன்ற சூழ்நிலைகளும் உங்கள் பணி வாழ்வில் வந்தே தீரும். ஏற்றுக்கொள்வதுதான் உங்கள் முன் இருக்கும் ஒரே வழி!
(வேலை வரும்...)