கமலின் ஸ்கேட்டிங் டான்ஸ்... ரஜினியின் மலை டான்ஸ்..!





சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இடது வலதாக நிற்க, நடுவில் அவர்கள் இருவரையும் ஆட்டுவித்த நடன இயக்குனர் புலியூர் சரோஜா இருக்கும் இந்தப் படம் பற்றிய தகவல்களை புலியூர் சரோஜாவே பகிர்ந்துகொள்கிறார்...

‘‘இவங்க ரெண்டு பேரும் என்னோட ரெண்டு கண்கள்னுதான் சொல்லணும். ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் ‘அம்மம்மா வந்ததொரு சிங்கக்குட்டி...’ன்னு ஒரு பாட்டு வரும்ல. அதை எடுத்துக்கிட்டு இருக்குறப்போ, பக்கத்து ஃபுளோரில் ஷூட்டிங்கில் இருந்த ரஜினி, திடீர்னு எங்க ஃபுளோருக்கு வந்தார். அப்போ சேர்ந்து எடுத்துக்கிட்ட படம்தான் இது. ஒரு பக்கம் ரஜினி எங்கிட்ட ‘அக்கா’ன்னும் இன்னொரு பக்கம் கமல் ‘மாமியாரே’ன்னும் கூப்பிட்டு பாசத்தைப் பொழிவாங்க.

தானொரு டான்ஸர்னாலும், டான்ஸ் மாஸ்டர் சொல்றபடி நடக்கக் கூடியவர் கமல். ‘ரிஸ்க்கெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ன்னு இந்தக் காலத்து பிள்ளைங்க சொல்ற டயலாக்கை அப்பவே அவர் செயல்ல காட்டியிருக்கார். ‘சகலகலா வல்லவன்’ படத்தில் ‘இளமை இதோ இதோ’ பாடலை எடுத்தப்போ ஸ்கேட்டிங் பண்ணிட்டே ஆடினா நல்லாயிருக்கும்னு யோசிச்ச கமல், உடனே ஸ்கேட்டிங் வீலை வரவழைச்சு, எந்த டிரெய்னிங்கும் இல்லாம உடனே கத்துக்கிட்டு ஆடினார். அதே பாட்டில் கண்ணாடியை உடைச்சுக்கிட்டு வெளியே வர்ற சீன்ல உண்மையிலேயே கண்ணாடியை உடைச்சு குதிச்சிட்டார். அவர் உடம்பில எங்க பார்த்தாலும் காயம். ‘இவ்வளவு சிரமப்படணுமா கமல்?’னு கேட்டப்போ, ‘அட விடுங்க மாமியாரே, இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? சிரமப்பட்டாதானே சீன் நல்லா வரும்’னு ரொம்ப சாதாரணமா சொன்னார்.

ரஜினியும் உழைக்கறதுக்குத் தயங்காதவர். ‘போக்கிரிராஜா’ படத்தில் வர்ற ‘போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ பாடலை திருப்பதி பக்கத்தில எடுத்தோம். ரஜினி முதுகில ராதிகா ஏறி மூவ்மென்ட் கொடுக்கிறமாதிரி ஒரு ஸ்டெப். அது மலைப்பகுதிங்கறதால முள்ளு மாதிரி ஷார்ப்பா கற்கள் இருந்துச்சு. ரஜினி அதுபத்தியெல்லாம் கேர் பண்ணிக்காம ராதிகாவோட வெயிட்டையும் தாங்கிட்டு கல் குத்துற வலியை முகத்தில் கொண்டு வராம நடிச்சுக் கொடுத்தார். ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில், ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...’ பாடலை ஷூட் பண்ணினப்போ டேக் சரியா வரல. அதனால ரஜினிகிட்ட இன்னொரு முறை ஆடச்சொல்லி கேட்டேன். டைரக்டர் முத்துராமன் சார் இதைப் பார்த்துட்டு, ‘ஃபைட் சீன்ல அடிபட்டு ரஜினியோட தோள்பட்டை இறங்கிடுச்சு... இது தெரியாம நீ ரீ டேக் கேக்குறியே’ன்னு என்னைத் திட்டினார்.

உடனே நான் ரஜினிகிட்ட, ‘ஸாரி தம்பி... உங்களுக்கு அடிபட்டது தெரியாது. இன்னொரு டேக் வேண்டாம்’னு சொல்லிட்டேன். ஆனா அவர், ‘என்னக்கா இப்படிச் சொல்றீங்க. இன்னொரு டேக் போகலாம்’னு ரெடியாகி கேமரா முன்னாடி வந்தார். இந்த டெடிகேஷன்தான் அவங்க ரெண்டு பேரையும் சூப்பர் ஸ்டாராவும், உலகநாயகனாவும் உயர்த்தியிருக்கு. இப்போ எத்தனை பேர்கிட்ட இந்த உழைப்பு இருக்குன்னு தெரியல.

இந்தக் காலத்தில ஒரு பாட்டை எடுக்கவே ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. ஒரே நாளில் முழுப் பாடலையும் நான் எடுத்து முடிச்ச காலமெல்லாம் இருக்கு.
‘குரு சிஷ்யன்’ படத்தையே எஸ்.பி.முத்துராமன் சார், 28 நாளில் எடுத்து முடிச்சார். அப்படின்னா பாடல் காட்சிகளை எவ்வளவு சீக்கிரம் எடுத்திருப்பேன்னு கணக்குப் போட்டு பாருங்க. ‘கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன்...’ பாட்டை ஷூட் பண்ணினப்போ ஆடியோ கேசட் கூட ரெடியா இல்ல. இளையராஜா பாட்டை ரெக்கார்டிங் பண்ணி முடிச்ச கையோட சுடச்சுட ஆடியோ கேசட்டை லொகேஷனுக்கு கொண்டுவந்து கொடுப்பாங்க. அடுத்த நொடியே மூவ்மென்ட் கம்போஸ் பண்ணி ரஜினிக்கும் கௌதமிக்கும் சொல்லிக் கொடுப்பேன். இப்பவும் அந்தப் பாட்டைப் பாருங்க. ஒரே நாளில் எடுத்த பாட்டு மாதிரி தெரியாது. அதெல்லாம் அந்தக் காலம்!’’
- அமலன்
படம்: ஆர்.சந்திரசேகர்