தயக்கம் என்பது வேற; பயம் என்பது வேற. * ஒரு ஆண் ஒரு பொண்ணுகிட்ட பேசறதைத் தடுப்பது தயக்கம்; அதே ஒரு ஆணை தன் பொண்டாட்டிகிட்ட பேசத் தடுப்பது பயம்.
* கல்யாணமான ஆண் கருத்தடை சாதனம் வாங்க காட்டுவது தயக்கம்; கல்யாணமாகாத ஆண் கருத்தடை சாதனம் வாங்க காட்டுவது பயம்.
* ஒருத்தன் பொய் சொல்லும் முன்னால இருப்பது தயக்கம்; பொய் சொன்ன பின்னால இருப்பது பயம்.
* பெத்த அம்மா சொன்னத செய்ய முடியாம தவிப்பது தயக்கம்; மனைவிய பெத்த அம்மா சொன்னத செய்ய முடியாட்டி வர்றது பயம்.
* தங்கச்சி ரெண்டு பக்கமும் கால் போட்டு டூவீலர்ல நம்மளோட வரப்ப, நாலு பேரு ஏதாவது சொல்வாங்கன்னு நினைப்பது தயக்கம்; மச்சினிச்சி அப்படி வர்றப்ப நாலு பேரு ஏதாவது சொல்வாங்கன்னு நினைப்பது பயம்.
* காதலைச் சொல்றதுல வர்றது தயக்கம்; கள்ளக்காதலைச் சொல்றதுல வர்றது பயம்.
* முன்னாள் காதலிய அவ புருஷனோட பார்க்கிறப்ப வர்றது தயக்கம்; அதே முன்னாள் காதலிய நம்ம மனைவியோட பார்க்கிறப்ப வர்றது பயம்.
* பாகிஸ்தானின் குடைச்சலை பொறுத்துக்கக் காரணம் தயக்கம்; இலங்கையின் செயல்களை பொறுக்கக் காரணம், பயம்!
பிடிக்காதவன்கூட மட்டுமல்ல... பிடிச்சவன் கூடவும் ஆரம்பத்துல பொண்ணுங்க வெடுக்கு வெடுக்குன்னுதான் பேசுவாங்க. ஒரு வார்த்தைலதான் பதில் சொல்வாங்க. இதை மனசுல வச்சுக்கிட்டு, ‘அந்தப் பொண்ணுக்கு நம்மள புடிக்கலை’ன்னு தள்ளிப் போயிடக்கூடாது. பல ஆண்கள் தப்பு செய்யறது இந்த இடத்துல, இந்த நேரத்துலதான். கண்ணா, இந்த இடத்துல நீ ஆக்சிலேட்டர அழுத்தக் கூடாது, இண்டிகேட்டரப் போட்டு, இன்ஜின அணைக்காம கொஞ்ச நேரம் பொறுத்திருந்தா, ‘சொந்தத்துல கல்யாணம் பண்ணினா தப்பு, அதனால வா... நாம கல்யாணம் பண்ணி சொந்தமாகலாம்’னு ப்ரபோஸ் பண்ணி, கியர போட்டு போயிக்கிட்டே இருக்கலாம். இதை ஏன் சொல்றோம்னா, பொண்ணுங்க எல்லாம் கோயிலுக்கு வெளிய கழட்டிவிட்ட புது செருப்பு மாதிரி. கவனிக்காம விட்டா, இன்னொருத்தன் களவாடிக்கிட்டு போயிடுவான்!
ஆல்தோட்ட பூபதிபெட்ரோலை கண்டுபிடிச்சவன் வெளிநாட்டுக்காரனா இருந்துட்டுப் போகட்டும். பெட்ரோல் எங்க கிடைக்கும்னு பார்த்து அதை எடுத்து ஏற்றுமதி செய்யிறவனும் வெளிநாட்டுக்காரனா இருந்துட்டுப் போகட்டும். ஆனா, டூவீலர் டேங்க்ல பெட்ரோல் எவ்வளவு இருக்குனு பார்க்க, ‘வௌக்குமாத்து குச்சியோ மீட்டரை’க் கண்டு பிடிச்சவன் தமிழன். பாதி வழில பெட்ரோல் தீர்ந்து போச்சுன்னா, டேங்க்ல வாய வச்சு ஊதி, பங்க் வரை போகத் தெரிஞ்சவன் தமிழன். எட்டணா பெட்ரோல் விலை ஏறப்போகுதுன்னு தெரிஞ்சா, எட்டு நாள் வரிசைல நின்னாவது ரெண்டு லிட்டர் போடுறவன் தமிழன். சினிமா தியேட்டர், கல்யாண மண்டபம்னு போறப்ப, முன்ஜாக்கிரதையா வண்டிய ரிசர்வ்ல வச்சுட்டுப் போறவன் தமிழன்.
பெட்ரோலை எவன் வேணா கண்டுபிடிக்கட்டும்யா; அதை கருத்தா பாத்துக்கிறவன் யாரு? நம்ம பயகதேன்!
இன்னமும் கொஞ்ச நாள்தான், கொஞ்ச வருஷம்னு வேணா வச்சுக்கலாம்... அப்போ பெண்கள் எல்லா விஷயத்திலும் ஆண்களை ஜெயிச்சுடுவாங்க. விளம்பரப்பலகை எழுதறதுல இருந்து, விமானம் ஓட்டுற வரை... ஸ்கூட்டர் விடுறதுல இருந்து ராக்கெட் விடுற வரை... சீரியல் எடுக்கிறதுல இருந்து சினிமா எடுக்கிற வரை... சமையல் செய்யறதுல இருந்து ஜாதகம் பார்ப்பது வரை... சம்பாதிப்பதிலிருந்து சம்பளம் கொடுப்பது வரை... கட்டிடம் கட்டுவதிலிருந்து கல்யாணம் கட்டுவது வரை... ஊறுகா போடுவதிலிருந்து உலகம் சுற்றுவது வரை... வேலை செய்வதிலிருந்து வியாபாரம் செய்வது வரை... எல்லா விஷயங்களிலும் இந்தப் பெண்கள் ஆண்களை ஜெயிச்சுடுவாங்க. ஆனா, எவ்வளவு முன்னேறினாலும் ஒரு விஷயத்துல தோத்துடுவாங்க. ஆமா, ஏதாவது விசேஷத்துக்கு கிளம்ப எடுத்துக்கிற மொத்த நேரத்துல, பெண்களால ஆண்களை ஜெயிக்க முடியாது. மூஞ்சிய கழுவி சட்டையை போட்டா ஆண்கள் ரெடி! ஆனா பெண்கள் கிளம்ப எடுத்துக்கிற நேரத்துல இந்தியாவுல எல்லோருக்கும் மொட்டையே போட்டுடலாம்!
காதல் ஒரு கைக்குழந்தை - வீட்டுல இருக்கிறவங்க தூங்கும்போது முழிச்சுக்கும்; எல்லாரும் முழிச்சிருக்கும்போது தூங்கும். கைக்குழந்தைக்கு அப்பப்போ பாலும் மருந்தும் தர்ற மாதிரி, காதல் குழந்தைக்கு குறுந்தகவல்களும் மொபைல் போன் முத்தங்களும் தரணும். காதல் குழந்தை, கைக் குழந்தை ரெண்டுக்குமே பரிசுப் பொருட்கள் குவியும். காதல் குழந்தை, கைக்குழந்தை... ரெண்டுமே வீட்டுல இருக்கிறவங்க பேசுறத கேட்குமே தவிர, யார் கூடவும் பேசாது; யார் சொல்றதையும் கேக்காது. கைக்குழந்தை நினைக்கிறதும், காதல் குழந்தை நினைப்பதும் ஒண்ணுதான்... வீட்டுல இருக்கிறவங்க நம்மை பத்திரமா பாத்துக்குவாங்கன்னு! ஆனா, வீட்டுல இருக்கிறவங்க நினைப்பது ரெண்டு குழந்தைக்கும் தெரியாது. காதல் குழந்தைக்கும் கைக்குழந்தைக்கும் இருக்கும் ஒரே ஒரு வேற்றுமை... கைக்குழந்தை அழுதா வீட்டுல எல்லோரும் போய்த் தூக்குவாங்க. ஆனா காதல் குழந்தை அழுதா, தனியாத்தான் அழணும்.
அப்பா வீட்டுக்குள் நுழைந்த உடனே, ‘‘டேய் சிவராமா, உன் பொண்ணு போன்ல சிரிச்சு சிரிச்சு அரை மணி நேரமா பேசுறாடா, என்னன்னு கேளு’’ன்னு சொல்ற அப்பத்தாங்க. அம்மாகிட்ட போய், ‘‘இந்தா சாவித்திரி, உன் பையன பார்க்க அவன் ஃபிரெண்டுன்னு ஒருத்தன் வந்தான். அவனும் அவன் மூஞ்சியும், ரவுடிப் பய மாதி* இருக்கான்’’னு சொல்ற அப்புச்சிகள். ‘‘உன் பொண்டாட்டி சமையலுக்கு எண்ணெய மோந்து மோந்து ஊத்துறாடா’’ன்னு புகார் சொல்லும் அம்மாச்சிகள். ‘‘உன் புருஷன் குடிச்சுட்டு வந்திருக்கான் போல, கொஞ்சம் கவனி’’ என போட்டுத் தாக்கும் ஆத்தா, தாத்தாக்கள். இவங்க எல்லாம் வெறும் வயசான பெருசுங்கன்னு நாம நினைக்கிறோம். ஆனா, என்னைக்கு திண்ணை இல்லாம வீடு கட்டினோமோ... அன்னைக்கே இந்த பெருசுங்க எல்லாம் நாம என்ன செய்யறோம்னு கவனிக்கும் சி.சி.டி.வி கேமரா ஆயிட்டாங்க.
இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...ஒரு அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்ல 61க்கு மேல! பொருளாதார நிபுணர்கள் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தும் டாஸ்மாக் தமிழன் போல தள்ளாடும் நம் பொருளாதாரம்தான் போஸ்டர் பாய்!