பெட்ரோல் டீசல் இனி வேண்டாம்... ஹைட்ரஜனில் ஓடுது பஸ்!




‘‘இன்னும் 200 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் என எதுவுமே உலகில் இருக்கப் போவதில்லை. எல்லாம் தீர்ந்துவிடும். அப்போதும் நாம் சொகுசாக வாகனங்களில் பறக்க வேண்டுமென்றால், இப்போதே மாற்று எரிபொருள் பற்றி சிந்திக்க வேண்டும்’’ - உலக விஞ்ஞானிகள் ஒட்டுமொத்தமாக அடிக்கும் எச்சரிக்கை மணி இது. இந்த எச்சரிக்கை உணர்வு இந்தியாவுக்கும் இருக்கிறது என்பதுதான் இப்போது நிரூபணமாகியிருக்கிறது. ஆம், டாடா மோட்டார்ஸின் ஆய்வு முயற்சியால், இந்தியாவின் முதல் ‘ஹைட்ரஜன் பஸ்’ வெற்றிகரமாக இயங்கிக் காட்டியிருக்கிறது!

‘‘வருங்கால எரிபொருள் ஹைட்ரஜன்தாங்க. அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். சுற்றுப்புறத்துக்கு கொஞ்சமும் கெடுதல் இல்லாமல், புகை இல்லாமல் பெட்ரோலின் வேலையைச் செய்யக் கூடிய வாயு அதுதான்’’ என முன்னுரை தருகிறார் விஞ்ஞானி ஞானகாந்தி. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவில், திரவ ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் நிபுணராக இருந்து ஓய்வு பெற்றவர் இவர். ‘ஃப்யூவல் செல் ஸ்டார்பஸ்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் டாடாவின் இந்த ஹைட்ரஜன் பஸ் தயாரிப்பிலும் இவரது பங்கு முக்கியமானது.



‘‘பொதுவாக ஹைட்ரஜன் வாயுவைக் கண்டால் எல்லோருக்கும் பயம். தண்ணீர் என்பது ஹைட்ரஜன் இரு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் கொண்டது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால், அந்தத் தண்ணீரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுவிட்டால், மிகத் தீவிரமான எரிபொருளாகிவிடுகிறது ஹைட்ரஜன். பெட்ரோல் பற்றிக் கொள்ளக் கூட ஒரு தீப்பொறி தேவை. ஆனால், நாம் தலை சீவும்போது வரும் சின்ன மின் அதிர்வில் கூட ஹைட்ரஜன் தீப்பிடித்துவிடும். எனவே, கொஞ்சமும் லீக் இல்லாமல் மிக கவனமாக இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பெருமை எல்லாம் டாடா மோட்டார்ஸையே சாரும். கிட்டத்தட்ட 5 வருடங்களாக இந்த ஆய்வுக்குப் பொருளுதவி செய்து மிக நேர்த்தியாக வாகனத்தைத் தயாரித்திருக்கிறார்கள்’’ என்னும் ஞானகாந்தி, இந்த பஸ் இயங்கும் விதம் பற்றியும் விளக்கம் தருகிறார்...

‘‘பொதுவாக தண்ணீரில் மின்சாரத்தைப் பாய்ச்சும்போது அதிலுள்ள ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் தனித்தனியாகப் பிரியும். அதையே தலைகீழாகவும் சொல்லலாம். அதாவது, ஹைட்ரஜனை ஆக்ஸிஜனோடு கலந்து தண்ணீரை உருவாக்கும்போது அங்கே மின்சாரம் உருவாகிறது. இதுதான் இந்த வாகனத்தின் அடிப்படை. இந்த பஸ்ஸுக்கு மேலே வைக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்களில் அழுத்தம் தரப்பட்ட ஹைட்ரஜன்கள் இருக்கும். அது குழாய் வழியாக ஹைட்ரஜன் செல் எனும் பகுதிக்கு செல்லும். இங்கு மின்சாரம் உருவாக்கப்பட்டு அந்த மின்சாரத்தால்தான் பஸ் இயங்குகிறது. மின்சாரத்தால் இயங்குவதால், புகையோ பொல்யூஷனோ இதில் இல்லை. ஹைட்ரஜன் செல்லில் ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் கலப்பதால் தண்ணீர் உப பொருளாக உற்பத்தியாகிறது. அது நல்லதுதானே!’’ என்கிறார் அவர்.

உலகம் முழுவதும் ஹைட்ரஜன் பற்றிய ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் பெருகியிருந்தாலும், அதில் ஒரே ஒரு சிக்கல் மட்டும் நிலவுகிறது. இப்போதைக்கு ஹைட்ரஜனை உருவாக்கும் செலவு பெட்ரோலோடு ஒப்பிடும்போது ஒன்றரை மடங்கு அதிகம். இதே சிக்கல் இந்தப் பேருந்துக்கும் உண்டு. ஆனால், பொல்யூஷனைத் தவிர்ப்பதற்காக அரசே பொது போக்குவரத்து வாகனங்களில் இதைப் பயன்படுத்த முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



‘‘எத்தனை வீரியமான எரிபொருளாக இருந்தாலும் ஹைட்ரஜனை இங்கே நாம் ‘எரிபொருளாக’ப் பயன்படுத்தவில்லை. அதாவது, பெட்ரோல், டீசல் போன்றவை எஞ்சினுக்குள் எரிவது போல இங்கே ஹைட்ரஜன் எரிக்கப்படவில்லை. எனவே, ஆபத்து பற்றிய பயம் தேவையில்லை. அதிக தூரங்கள் பயணிக்கும் தேவை இருக்கும் வாகனங்களைப் பொறுத்தவரை இப்போதே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஒரு காலத்தில் கேஸ் சிலிண்டரைப் பார்த்துக் கூடத்தான் மக்கள் பயந்தார்கள். பாதுகாப்பு முறைகள் சரியாக இருந்தால், ஆபத்தான பொருள் என்று எதுவுமே இல்லை.

விலையைப் பொறுத்தவரை ஹைட்ரஜன் கொஞ்சம் அதிகம்தான். இப்போதைக்கு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரித்து எடுப்பதுதான் ஒரே வழியாக இருக்கிறது. அதற்கு மின்சார சக்தியைச் செலவிடாமல் சூரிய ஒளியையோ காற்று சக்தியையோ பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் உலகம் எங்கும் நடந்து வருகின்றன. அது வெற்றியடையும்போது, நிச்சயம் குறைந்த பொருட்செலவில் ஹைட்ரஜன் வாகனங்களை நாம் ஓட்டி மகிழ முடியும்’’ என்கிறார் ஞானகாந்தி.
பெட்ரோல், டீசலுக்கு டாட்டா சொல்ல வைக்குமா, டாடாவின் இந்த ஸ்டார்பஸ்?
- வ.ஜெகதீஸ்
படங்கள்: வி.முருகன்