பாபாவின் மீது எந்த பக்தனுக்கு முழு பக்தி ஏற்படுகிறதோ, அவனது கேடுகளும் அபாயங்களும் துடைக்கப்படுகின்றன.
- பாபா மொழிமகல்சாபதியுடன் காசிராம் சிம்பி மற்றும் அப்பா சாகலே மூவரும் சாயிபாபாவிடம் வந்தார்கள்.
‘‘இவர்களிருவரும் என் குழந்தைகள். இவன் காசி. இன்னொருத்தன் யார்?’’
தன் பெயர் சாயிக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டான் காசிராம் சிம்பி.
‘‘இவன் பெயர் அப்பா சாகலே.’’
‘‘உட்காருங்கள்... காசிராம் சிம்பி. உங்கள் பெயரிலேயே காசி என்னும் தீர்த்தஸ்தலமும் ராம் என்கிற கடவுளும் கலந்து இருக்கிறார்கள். எங்கெங்கோ அலைந்து, எறும்பிற்கு சர்க்கரையிட்டு, இப்போது இந்த சாயியைப் பார்க்க வந்திருக்கிறார்.’’
‘‘பாபா, உங்களுக்கு எப்படி எல்லா விஷயமும் தெரிந்திருக்கு?’’ என வியந்தான் காசிராம்.
அவனுக்குப் பழைய சம்பவங்கள் நினைவிற்கு வந்தன.
ஜானகிதாஸ் பாபா ஷீரடியில் இருந்தார். அவருக்கு காசிராம் சேவை செய்துவந்தான். ஒருநாள் அவரிடம், ‘‘மகராஜ், எனக்கு தீட்சை கொடுங்கள்’’ என்றான்.
‘‘காசிராம், என்னால் உனக்கு தீட்சை கொடுக்க முடியாது! அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை.’’
‘‘நீங்கள் எவ்வளவு பெரிய மகான். உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் யாருக்கு இருக்கிறது?’’
‘‘காசிராம், நான் சாதாரண மனிதன். மனிதனுள் இருக்கும் ஞானத்தை வெளிக்கொணர முயலும் சாதனையில் நான் வெறும் ஒரு துளி. இதை போதிப்பவர் ஷீரடியில் அவதரிப்பார். அவரை நீ சந்திக்கும் பாக்கியமும் கிடைக்கும்.’’
‘‘இது எப்பொழுது நடக்கும்?’’
‘‘கூடிய சீக்கிரம்!’’
‘‘ஆனால் காசி, அதுவரைக்கும் நான் சொல்வதை நீ செய்யணும்.’’
‘‘கண்டிப்பாகச் செய்கிறேன்.’’
‘‘எறும்புகளுக்கு தினமும் சர்க்கரை போட்டுக்கொண்டிரு. அந்தச் சின்னஞ்சிறு வாயில்லா ஜீவனால் உனக்கு அனுக்கிரகம் கிடைக்கும்.’’
இப்போது நிகழ்காலத்தில் பாபா அழைத்தார்...
‘‘காசி... என்ன பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டாயா? ஏ அப்பா சாகலே, நீ முழித்துக்கொண்டுதானே இருக்கிறாய்?’’
‘‘ஆமாம்!’’
‘‘பகலில் தூங்கும் உன் நண்பனைத் தட்டி எழுப்பு!’’
அதற்குள் காசி பழைய நினைவுகளிலிருந்து மீண்டான்.
‘‘இவ்வளவு ஆச்சரியத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே! மனிதனைப் பார்த்ததே இல்லையா?’’
‘‘பாபா, நீங்கள் சாதாரண மனிதரல்ல. சாது. சொல்லப் போனால் இறைவன்தான். ஒன்று மட்டும் நிச்சயம்...’’
‘‘என்ன அது?’’
‘‘ஜானகிதாஸ் பாபா சொல்லியிருந்தார். ‘ஞான சாகரத்தில் நான் ஒரு சிறுதுளி. ஷீரடியில் சீக்கிரம் ஒரு மகான் தோன்றுவார்’ என்று!’’
‘‘யார் அது?’’
‘‘நீங்கள்தான் பாபா. நீங்கள்தான் அந்த மகான். ஞானத்தின் பீடம். நான் இப்பொழுது வாழ்வின் பயனை அடைந்தேன்’’ என்றபடி அவர் காலில் விழுந்தான். அப்பாவும் விழுந்தான். மகல்சாபதியும் பாபாவும் சிரித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஷாமா அங்கு வருவதைப் பார்த்து, ‘‘இன்னொரு பக்தன் வருகிறான் பார், வாப்பா ஷாம்!’’ என்றார் சாயி.
ஷாமா மாஸ்டர் சிரித்தவாறே மசூதியினுள் நுழைந்து, சாயி அருகில் உட்கார்ந்தான். தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து, பாபா அதிக சந்தோஷ
மடைந்தார் என்பது நிதர்சன
மாகத் தெரிந்தது!
ஜவ்ஹார் அலி கேட்டுக்கொண்டபடி, கிராம அதிகாரி பள்ளிவாசலுக்காக ஓர் இடம் ஒதுக்கிக் கொடுத்தார். முஸ்லிம்களுக்கு சந்தோஷம். அவர்களுடைய நெடுநாள் கோரிக்கை நிறைவேறப் போகிறது. எல்லோரும் சேர்ந்து சிறிது சிறிதாகக் கட்டிடம் கட்டினார்கள். ஜவ்ஹார் அலியும் நடு
நடுவே சென்று பார்த்து, ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
ஒருநாள் அவர் கூட்டத்தினரிடையே பேசினார்:
‘‘சகோதரர்களே! சிறிது நாளில் தொழுகைக்கான இடம் கட்டி முடிக்கப்படும். பிறகு நமக்கென்று ஒரு மசூதி தேவை! அதற்கான இடம் நான் வாங்கிக்கொடுப்பேன்.’’
‘‘உங்களுக்கு மிக்க நன்றி! நீங்கள் எங்களுடன் இருந்தால் எல்லாம் நடக்கும். நீங்கள் சொல்வதை, நாங்கள் செய்து காட்டுகிறோம்.’’
ஜவ்ஹார் அலி கர்வத்துடன் புன்னகைத்தார். பிறர் தன்னைப் புகழ்வதை விரும்பினார். மக்கள் தன் பெருமையை, தன் ஆற்றலை உணர்ந்து அவர்கள் வாயால் சொல்ல வேண்டும் என விருப்பப்பட்டார். இது கிடைத்ததும், அவர் சந்தோஷமடைந்தார்.
‘‘சரி... சரி... நான் எல்லாவற்றையும் செய்கிறேன். நீங்கள் எல்லோரும் சண்டை போடாமல், ஒற்றுமையுடன் இருக்கணும். மேலும், நீங்கள் எல்லோரும் என் சிஷ்யர்களாகணும்.’’
இதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.
‘‘ஏன் சிரிக்கிறீர்கள்? நான் சொன்னது வேடிக்கையாக இருக்கிறதா?’’
‘‘இதை நீங்கள் சொல்லத் தேவையில்லை. நாங்கள் எப்போதோ உங்கள் சிஷ்யர்களாகிவிட்டோம்.’’
ஜவ்ஹார் அலிக்கு மனம் சமாதானமாயிற்று. கிளம்பி அவர் இடத்துக்கு வந்தார். சில நோயாளிகள் காத்திருந்தார்கள். அவர்களை விசாரித்து, மருந்து கொடுத்து அனுப்பினார். பிறகு பகு வந்தான்.
‘‘குழந்தாய், ஒரு காரியம் செய்யணுமே?’’
‘‘சொல்லுங்கள்.’’
‘‘சில நாட்களுக்கு முன் புலால் உணவு கொண்டு வந்தாய் அல்லவா! அது ரொம்ப ருசியாக இருந்தது.’’
‘‘சரி அதற்கென்ன?’’ - பகு கொஞ்சம் பயப்பட்டான். மறுபடி அப்படிக் கேட்டால் என்ன செய்வது? அன்று சமைத்துக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடாயிற்று.
‘‘பகு, புலால் சாப்பிட்டு நாளாகிவிட்டது. மறுபடி சாப்பிட நாக்கு துடிக்கிறது. எனக்கு இப்பொழுது சாப்பிடணும் போல இருக்கிறது’’ - ஓரக்கண்ணால் பகுவைப் பார்த்துக்கொண்டே ஜவ்ஹார் அலி கூறினார்.
பகு சதாபள் தயங்கினான். ‘‘சரி’’ என்று சொல்ல முடியாமல் திண்டாடினான். அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “பகு, ஏன் பேசாமல் இருக்கிறாய்? உன்னால் கொண்டுவர முடியாது என்றால் பரவாயில்லை. நீ எனக்கு நிறைய சேவகம் செய்கிறாய், அதுவே போதும். வேறு யாரிடமாவது சொல்லி வரவழைத்துச் சாப்பிடுகிறேன். உனக்குத் தொந்தரவு வேண்டாம்’’ - இனிமையாகப் பேசினார் ஜவ்ஹார் அலி.
‘‘தொந்தரவு இல்லை. நீங்கள் என்னுடைய குரு. குருவின் தேவையைப் பூர்த்தி செய்யணும்.’’
‘‘ரொம்ப சந்தோஷம்... அப்போ, நீ கொண்டுவருகிறாயா?’’
‘‘ஆமாம்...’’
‘‘சரி, ஆனால்... எனக்கு ஆட்டிறைச்சி வேண்டாம். மாட்டு இறைச்சி வேண்டும்!’’
இதைக் கேட்டதுமே பகுவிற்கு தலை சுற்றியது. தான் பூமியில் நிற்கிறோமா என்கிற சந்தேகம் வந்தது.
‘‘பகு குழந்தாய், என்னவாயிற்று?’’
‘‘ஒன்றுமில்லை...’’ - தன்னை குரு பரிசோதிக்கிறார் என நினைத்தான் பகு. இல்லாவிடில் தன்னைப் போன்ற இந்துவை இப்படிப்பட்ட வேலை செய்யச் சொல்லமாட்டார். அவர் தன்னை உரைத்துப் பார்க்கிறாரோ? தான் அவரிடம் தீட்சை பெற வேண்டும்... மோட்ச பிராப்தி அடைய வேண்டும் என்றால், இம்மாதிரி பரீட்சைகளைத் தாண்டியாக வேண்டும். ‘‘சரி, நான் இரவு எடுத்து வருகிறேன்’’ என்றான் பகு, மனதை திடப்படுத்திக்கொண்டு.
‘‘நீ என்னுடைய செல்லம். உன்னைக் கரையேற்றும் நாள் நெருங்கிவிட்டது’’ என்றார் அலி. அதைக் கேட்டு பகு திருப்தியடைந்தான். குஷியுடன் வெளியேறினான்.
இதற்காக அவன் நிறைய இன்னல்களைச் சந்தித்தான். முஸ்லிம்கள் வாழும் இடத்திற்குப் போய், இறைச்சி விற்குமிடத்தைத் தேடி, மிகுந்த மன இறுக்கத்துடன், இரண்டு கிலோ மாட்டு இறைச்சியை வாங்கினான். முஸ்லிம் பெண்களிடம் கொடுத்து, சமைத்துக் கொடுக்கும்படி கெஞ்சினான். பிறகு, யாருக்கும் தெரியாமல் இரவில் அதைக் கொண்டு வந்தான்.
பகுவைக் கண்டதும் ஜவ்ஹார் அலிக்கு ஆனந்தம். எழுந்து ஒரு துள்ளு துள்ளினார். ‘‘வா பகு... மாட்டிறைச்சி கிடைத்ததா?’’
‘‘ம்...’’
‘‘எங்கிருந்து கொணர்ந்தாய்? நீதான் இந்துவாச்சே?’’
‘‘குருவிற்கு சேவை செய்வதென்றால், கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். எங்கிருந்து கொண்டு வந்தேன் என்பதை இப்போது கேட்காதீர்கள். சாப்பாடு சூடாக இருக்கிறது. முதலில் சாப்பிடுங்கள். நான் வருகிறேன்!’’
‘‘போய் வா மகனே! உனக்கு ஒரு பரீட்சை வைத்தேன், அதில் நீ தேறிவிட்டாய். இனி உனக்கு தீட்சை கொடுப்பதில் தடங்கல் இல்லை. போ... மனம் சமாதானமாகி, நிம்மதியாகத் தூங்கு. இறைவன் எப்பவும் உனக்கு நன்மையே செய்வார்.’’
பகு அவரை நமஸ்கரித்து அமைதியுடன் சென்றான். ஆனால்... நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவனுக்குத் தெரியாது!
ஜவ்ஹார் அலி ரொம்ப உற்சாகமாகச் சாப்பிட்டார். எலும்பைக் கடித்து முடித்தவுடன் அவற்றை வீரபத்திர கோயிலின் பக்கம் தூக்கி எறிந்தார். தான் செய்வது சரிதானா என்பதுகூடத் தெரியவில்லை. சில எலும்புத் துண்டுகள் கோயிலில் விழுந்தன. மீதி, கோயிலின் வாசற்படியிலும் மற்றும் பிராகாரத்திலும் போய் விழுந்தன.
சாப்பிட்டு முடித்தவுடன், பாத்திரங்களை அருகில் வைத்து, பெரிதாக ஏப்பம் விட்டார். அருகிலிருந்த படுக்கையில் படுத்தார். சிறிது நேரத்தில் குறட்டை விட ஆரம்பித்தார்.
காலையில் வீரபத்திர கோயிலின் பூசாரி, குளித்து கையில் பூக்களுடன் கோயிலுக்கு வந்தார். வாசற்படியில் எலும்புத்துண்டுகள் அவர் காலில் இடறின. இருட்டில் அவை என்னவென்று புரியாமல் குழம்பியபடி உள்ளே நுழைந்தார். அங்கேயும் எலும்புத்துண்டுகள் அவர் காலைக் குத்தின.
‘‘என்னது, ஏதோ குத்துகிறதே...’’ என்றவாறே, கோயில் விளக்குகளை ஏற்றினார். பிரகாசத்தில் அவற்றைப் பார்த்து திடுக்கிட்டார்! பயந்தார்! நடுங்கினார்!
‘‘வீரபத்திரக் கடவுளே, யார் செய்த வேலையப்பா இது?’’ என்று பெரிதாகக் கத்தினார். அவருடைய கூப்பாடு, அருகிலிருந்த வீடுகளை எட்டியது. காலை நேரம் என்பதால், ஜனங்கள் விழித்துக்கொண்டு அவரவர் வேலையில் இருந்தனர். கூக்குரலைக் கேட்டு எல்லோரும் கோயிலுக்கு ஓடி வந்தார்கள்.
‘‘ஷிவா... ஏனப்பா கத்தினாய்?’’ யாரோ பூசாரியைக் கேட்டார்கள்.
‘‘துஷ்டமிருகம் ஏதாவது கோயிலினுள் நுழைந்துவிட்டதா?’’
‘‘அதைவிட பயங்கரம் நடந்திருக்கு...’’
‘‘என்ன? சீக்கிரம் சொல்...’’
‘‘சொல்கிறேன். இதோ பாருங்கள் எலும்புத்துண்டுகள். யாரோ, கோயிலின் வாசற்படியிலும் உட்புறமும் போட்டிருக்கிறார்கள். இவை பெரிதாக இருப்பதால் மாடு அல்லது எருமையின் எலும்பாக இருக்கலாம்!’’
‘‘பயங்கரமாக இருக்கிறதே!’’
‘‘அடக்கடவுளே!’’
‘‘இதனால் கடவுளின் கோபத்திற்கு நாம் ஆளாவோம்.’’
‘‘உண்மைதான்.’’
‘‘மறுபடி மகாமாரி வரும்.’’
‘‘கொடிய நோய்கள் பெருகும்.’’
‘‘இப்போது என்ன செய்யலாம்?’’ - ஒரு வயோதிகன் பூசாரியை வினவினான்.
‘‘முதலில் கிராம அதிகாரியைக் கூப்பிடுங்கள். என்ன செய்யணும் என்பதை அவரே நிர்ணயிப்பார்.’’
‘‘ஆமாம்... ஆமாம்...’’
சிலர் கிராம அதிகாரியின் வீட்டிற்குச் சென்றார்கள். சிறிது நேரத்தில் இருட்டு மறைந்து, காலை மலர்ந்தது. ஜனங்களின் கூட்டம் பெருகியது. கிராம அதிகாரி ஓடிவந்தார். அவர் எலும்புத்துண்டுகளைப் பார்த்து திடுக்கிட்டார். இருந்தாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டார்.
‘‘எந்த மடையனின் வேலை இது? நம்முடைய இந்துக் கடவுளை அவமதிக்கும் துணிச்சல் யாருக்கு இருக்கிறது?’’ - எல்லோரையும் பார்த்துக் கேட்டார்.
பகு சதாபள் அங்கு இருந்தான். விஷயம் அவனுக்குப் புரிந்தது. அவன்தான் இறைச்சியைக் கொண்டுவந்து கொடுத்தவன்.
‘‘அப்படியானால்?’’
(தொடரும்...)
வினோத் கெய்க்வாட்
தமிழில்: பி.ஆர்.ராஜாராம்
தமிழகத்தில் சாயி கேட்டது தரும் சாயி!கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் சாய்ராம் கோயில் பிரபலமாக உள்ளது. கேட்டது தரும், நாள் பட்ட நோய் தீர்க்கும் சாயியை தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்தக் கோயிலை வில்லுப்பாட்டுக் கலைஞரான கணேசன் உருவாக்கியிருக்கிறார். பிரம்மச்சாரி கலைஞர் ஒருவர் கட்டியுள்ளார். சாய்பாபாவின் அபூர்வ சக்தி வெளிப்பட இந்த பிரம்மச்சாரியை அவர் பயன்படுத்தியுள்ளார்.
‘‘15 வருடங்களுக்கு முன்பு புட்டபர்த்தி சத்திய சாயிபாபா கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது, ‘‘நீ சாய்பாபாவுக்கு உன் இருப்பிடத்தில் ஒரு கோயிலைக் கட்டு’’ என எனக்குக் கட்டளை வந்தது. அன்றிலிருந்து எங்கு சென்றாலும் சாய்பாபாவுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தேன். ஆனால் கோயிலை எப்படிக் கட்டுவது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
இங்கு இடம் வாங்கி வீடு கட்ட நினைத்தேன். ஒரு நாள் ஒரு முதியவர் என்னிடம் வந்து, ‘எனக்கு கோயில் கட்டச் சொன்னா, நீ உனக்கு கட்டுகிறாயே... மறந்துட்டியே’ என்றார். அப்போதுதான் தவறு உறைத்தது. அதன்பின் இந்த இடத்தில் கோயிலைக் கட்ட ஆரம்பித்தேன். பணத்துக்கு சிரமமாக இருந்தபோது ஊர் ஊராகப் போய் வில்லுப்பாட்டு பாட ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. கோயிலும் சிறப்பாக அமைந்தது. மகாராஷ்டிராவிலிருந்து சாய்பாபா சிலை கொண்டு வரப்பட்டது. அதன்பின் இங்கு தினமும் அதிசயம்தான்’’ என்கிறார் கணேசன்.
கோயில் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவில்பட்டி புது பஸ்நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் உள்ளது.
- முத்தாலங்குறிச்சி காமராசு