சொல்றேண்ணே... சொல்றேன்!




குழந்தைங்ககிட்ட என்ன பேசுறதுன்னு நமக்கெல்லாம் தெரியலண்ணே... என்னையுஞ் சேத்துத்தான் சொல்றேன். யார் வீட்டுக்காச்சும் போறோம்... அங்க ஒரு குட்டிப் பிள்ளையப் பார்க்கறோம்... ‘எப்படி இருக்கே? என்ன வெளாட்டு பிடிக்கும்? யாரு கூட வெளாடுவே?’ன்னு நல்லதா நாலு வார்த்தை கேக்கலாம்ல. ஆனா, நாம எடுத்த உடனே, ‘‘பாப்பா, எந்த ஸ்கூல்ல படிக்கறே?’’ம்போம்.

‘நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு’னு அது மனசுக்குள்ள மண்ணள்ளிப் போட்டுக்கிட்டே சிரிச்சு வைக்கும். நாம யாரு? அத்தோட விடுவோமா? ‘‘எந்த கிளாஸ் படிக்கிறே?’’, ‘‘என்ன ரேங்க் வாங்குவே?’’ன்னு பள்ளிக் கல்வி அதிகாரி மாதிரி பிரிச்சிப் பிறாண்டுவோம்.

அய்யா, நான் தெரியாமதான் கேக்கேன்... எந்தக் குழந்தையாவது நம்மகிட்ட வந்து, ‘‘எந்தக் கம்பெனியில வேலை பாக்கீங்க? நல்லா வேலை பாப்பீங்களா? எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க? இந்த வருஷம் எவ்வளவு இன்க்ரிமென்ட் போட்டாங்க’’ன்னு கேக்குதா? அதுகளுக்குத் தெரியிற இங்கிதம், நமக்குத் தெரியல பாருங்க!

குழந்தைகளை தப்பா பயன்படுத்திக்கிடுறதுல நாமெல்லாம் கில்லிண்ணே. இந்த எஸ்.எம்.எஸ்னு ஒண்ணு வார வரைக்கும் நம்ம குழந்தைங்க பாஸ் பண்ணி விட்ட காதல் கடுதாசிகளுக்கு கணக்கு வழக்கே இல்லண்ணே... அந்தப் பட்டுவாடாவுக்கு ஒரு ரூவா, ரெண்டு ரூவான்னு டிப்ஸ் வேற ஃபிக்ஸ் பண்ணி, ஒரு தலைமுறைக்கே லஞ்சத்தைப் பழக்கி விட்டுட்டாய்ங்க, இந்த லவ்ஸு பார்ட்டிக! சரி... ஆளாளுக்கு கையில போனு வந்த பிறகாவது இது போச்சானு பார்த்தா, இன்னும் முழுசா போகலேண்ணே. ஒரு அபார்ட்மென்ட்ல குடியிருக்குற குழந்தை திடீர்னு என்கிட்ட வந்து, ‘‘அங்கிள், எயிட்டுக்கு அப்புறம்தானே நைன் வரும்?’’னு கேட்டுச்சு. ‘‘நான் படிக்கும்போதெல்லாம் அப்படித்தான் வரும் பாப்பா... இப்ப என்ன மாறிருச்சா?’’ன்னு கேட்டேன்.



‘‘மேல் மாடி அக்காவோட செல் நம்பர் 965XXXXXXXனு   வருது. ஒன், டூ, த்ரீ எல்லாம் தப்புத் தப்பா இல்ல?’’னு கேக்குதுண்ணே. அப்புறம்தான் புரியுது... எவனோ ஒருத்தன் ஒரு பொண்ணுகிட்ட நம்பர் வாங்குறதுக்கு இந்தக் குழந்தைய அனுப்பியிருக்கான். அனுமார் இலங்கைக்கு தீ வச்ச மாதிரி, இந்தக் குழந்தை எல்லார் வீட்டுக்கும் போய் இதே மாதிரி நம்பரைச் சொல்லி சந்தேகம் கேக்க, அபார்ட்மென்ட் முழுக்க இந்த விஷயம் பத்தி எரிஞ்சது. நல்லா வேணும் அவிங்களுக்கு. எதெதை குழந்தைங்ககிட்ட பேசறதுன்னு இல்ல?

ஒரு ஆளு இப்படித்தாண்ணே... கட்டுன பொண்டாட்டிகிட்ட ரொமான்ஸ் பண்றதுன்னா, நேரடியா பேசித் தொலைய வேண்டியதுதானே! குட்டிப் பையனைப் பார்த்து, ‘‘டேய், உனக்கு தம்பிப் பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?’’ன்னு ஜாடையா கேட்டிருக்காரு. பையன் ஒரு அஞ்சு செகண்ட் யோசிச்சுட்டு, ‘‘என் கூட கிரிக்கெட் வெளாட ஆளே இல்ல. அதனால, பந்து போடுறதுக்கு ஒரு தம்பி, பின்னாடி கீப்பிங் நிக்க ஒரு தம்பி, பந்து பொறுக்கிப் போட ஒரு தம்பி, அப்புறம் கை தட்ட ஒரே ஒரு தங்கச்சி’’ன்னு ஓட்டல்ல ஆர்டர் கொடுக்குற மாதிரி சொல்லியிருக்கான்.

ஏண்டா கேட்டோம்னு ஆகிப் போச்சு இவருக்கு. குழந்தைங்கதான் எதையும் மறக்காதே... பையன் காலைல எந்திரிச்சுப் பார்த்திருக்கான். அப்பா சொன்ன மாதிரி, தம்பி, தங்கச்சிகள் இல்லன்னதும் ‘ஓ... ராமா’னு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டான். அன்னிக்கு ஆரம்பிச்ச ஒப்பாரி, இப்ப வரைக்கும் ஓயலண்ணே. பொது இடம்னு பார்க்காம அந்தப் பய அடிக்கடி ‘தம்பி வேணும், தங்கச்சி வேணும்’னு ஆர்ப்பாட்டம் பண்ணுவான். சமாதானப்படுத்த முடியாம பொண்டாட்டியும் புருஷனும் நெளிவாய்ங்க.



‘‘இந்தப் பையனை என்ன சொல்லிண்ணே சமாளிக்கறது?’’ன்னு நான் இன்னொருத்தர்கிட்ட கேட்டேன். ‘‘இதாவது பரவாயில்ல அண்ணாச்சி, இவன் தம்பி, தங்கச்சிதான் கேக்கறான். என் பொண்ணு அண்ணன் வேணும்னு கேக்குறா. நான் என்ன பண்றது சொல்லுங்க? நாமதான் பேச்சைக் குறைக்கணும்!’’ன்னாரு அவரு.

வீட்டுக்கு வீடு ஸ்பைடர்மேன் ஸ்டிக்கர் ஒட்டின வாசப்படிதான்!

‘கடவுளே எனக்கு நல்ல ஞாபக சக்தியக் குடு’ன்னு வேண்டிக்கிற தைரியமும் யோக்கியதையும் குழந்தைங்ககிட்டதாண்ணே இருக்கு. நமக்கெல்லாம் ஞாபக சக்திங்கற அந்த பயலைப் பிடிக்கறதே இல்ல. மறதிதான் நமக்கு ஃப்ரெண்டு. எவ்ளோ பெரிய சமாச்சாரமா இருந்தாலும், ‘மறந்துட்டேன் சார்’னு ஒரே வரியில காரணம் சொல்ல அதானே உதவுது?

ரோட்டுல பார்த்தீங்கன்னா... மனுஷன் ஒவ்வொருத்தனும் ஏதோ ஒண்ணை அர்ஜென்ட்டா மறந்தாகணும்னு அலையிறான். வெடலப் பையன் ஒருத்தன்கிட்ட கேட்டா, ‘‘அவளை மறக்கணும்ணே’’ங்கான். ‘‘அந்த துரோகிய மறக்க முடியல’’ன்னு புலம்புறான் ஒரு யாவாரி. ஜாலியா டூருக்குக் கிளம்புறவனைப் புடிச்சி நிறுத்திக் கேட்டா, ‘‘நாலு நாளைக்கு என் பொண்டாட்டிய மறக்கப் போறேன்’’னு கதறுறான்.

மறதி நமக்கு வரமா போச்சுண்ணே. காரணம் என்ன தெரியுமா? ஞாபகத்துல வச்சிக்கிற அளவுக்கு நம்ம மனசுல உள்ள எந்த அயிட்டத்துக்கும் தகுதி இல்ல. எல்லாமே மறக்க வேண்டிய மண்ணாங்கட்டிதான்னு நாமளே மார்க் போட்டு வச்சிருக்கோம். ஆனா, குழந்தைங்க மனசுல எல்லாமே பரிசுத்தமா இருக்குண்ணே. டிராபிக் சிக்னல்ல ஒரு நாளு நிக்கிறேன்... பக்கத்துல ஒரு பைக். பின்னாடி பொண்டாட்டி, முன்னாடி குழந்தைன்னு வந்தவன், சிக்னல்ல நிக்காம கிளம்பிட்டான். பக்கத்துல நின்ன போலீஸ்காரர் கூட அதைக் கண்டுக்கல. ‘‘அப்பா ரெட் எரிஞ்சா நிக்கணும்... நிக்கணும்’’னு அந்தக் குழந்தை மட்டும் கத்திக்கிட்டே போகுதுண்ணே. ஸ்கூல்ல படிச்சதை எந்த இடத்துல மறக்கணும்னு அதுக்குத் தெரியல பாருங்க. இங்கதான் அவங்களும் நாமளும் வித்தியாசப்படறோம். குழந்தை ஏ, பி, சி, டியை மறந்தா ‘‘ஏன் மறந்தே’’ன்னு அடிக்கிறான் நம்மாளு. ஆனா, அவன் போன வருஷம் சைக்கிள் வாங்கித் தாறேன்னு சொன்னதை இந்த வருஷம் கரெக்டா ஞாபகத்துல வச்சு குழந்தை கேட்டா, ‘‘கேப்பியா... கேப்பியா’’ன்னு அதுக்கும் அடிக்கிறான்...
நம்மளையெல்லாம் வச்சிக்கிட்டு இந்தக் குழந்தைங்க படுற அவஸ்தை இருக்கே... அய்யோ அய்யோ...
(இன்னும் சொல்றேன்...)
தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
படங்கள்: புதூர் சரவணன்