விஐய் சீக்ரெட்!





அரசிதழில் தீர்ப்பு வெளியானாலும், காவிரி நீர் இன்னும் நமக்கு கானல் நீராகத்தான் இருக்கிறது; இதில் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய கட்டுரைக்குப் பாராட்டுகள். அது முடியாதவரை முழு வெற்றி என்று யாரும் சொல்லிக்கொள்ள முடியாது.
- இரா.வளையாபதி, கரூர்; க.மோகன், மங்களம்.

‘மலட்டுத்தன்மை ஆண், பெண் இருவருக்கும் பொதுவே’ என்று வரலாற்றுத் தகவல்களின் மூலம் ‘மலடி’ பட்டம் சுமக்கும் பெண்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது ‘ச்சீய் பக்கங்கள்’ என்ற ஆச்சரியப் பக்கங்கள்.- நாயோன், திருச்சி.

பாலியல் வன்கொடுமையிலிருந்து இளந்தளிர்களைப் பாதுகாப்பது குறித்த மனுஷ்யபுத்திரனின் வேதனைக் குரல், அத்தனை பெற்றோர்களின் ஒருமித்த குரலாகவே எதிரொலித்தது.
- ‘மண்வாசனை’ சாரதாமணி, சுந்தராபுரம்.

‘விஸ்வரூபம்’ பட வில்லன் ராகுல் போஸின் பேட்டி நச்! ‘‘அடுத்த ‘விஸ்வரூபம் 2’வில் நான் இருக்கிறேனா தெரியாது’’ என்றதுதான் கொஞ்சம் ஓவர். முழுப் பூசணியை சோற்றில் மறைக்காதீங்க மிஸ்டர் போஸ்!
- நா.நடராஜ், புதுச்சேரி.

கை தட்டல்களுக்காக பரிந்து பேசும் பேச்சுகள், திருநங்கைகளை வாழ வைத்து விடாது. வாடகைக்கு வீடு கூடக் கிடைக்காமல் அவர்கள் படும் அவதியைச் சொல்லி, கலங்க வைத்து விட்டது உங்கள் கட்டுரை.
- தி.தெ.மணிவண்ணன்,அங்கலக்குறிச்சி.

உறவுகளையே உதாசீனப்படுத்தும் இன்றைய மானிட உலகில், பிராணிகளை பாசத்துடன் பராமரிக்கும் சம்பத், தேவகி போன்றோர் பிரமிக்க வைக்கிறார்கள்.
- பேச்சியம்மாள் மந்திரமூர்த்தி,புதுச்சத்திரம்.

‘அமலாபாலா... அப்படின்னா யாரு?’ என்று டாப்ஸி பேட்டியில் ஒரு இடத்தில் கூடச் சொல்லவில்லை. நீர் என்னடாவென்றால், தலைப்பு வைக்கிறேன் என்று அவர்களுக்குள் பத்த வைக்கிறீயே பரட்ட!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

யார் படமென்றாலும் கதைதான் முக்கியம் என்ற டைரக்டர் விக்ரமனின் அதிரடிப் பேட்டி ஆகா. சிகரெட்டும் கையுமாக கேஷுவல் பேட்டி கொடுத்தவர், அப்படியே விஜய் கால்ஷீட் கிடைக்காத சீக்ரெட்டையும் போட்டு உடைத்திருக்கலாம்!
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

இளையராஜாவின் பேச்சால் பாரதிராஜாவுக்கு மட்டுமல்ல, ஒரு நல்ல நட்புக்கும் காயம்பட்டுள்ளது. ‘யாகாவாராயினும் நா காக்க...’ என்ற வள்ளுவனின் அமுதமொழி, ‘ராஜாக்களுக்கும்’ பொருந்தும்தானே?
- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

சிங்கள இன வெறியர்களும் அந்நாட்டு அரசும் தமிழர் நிலங்களை அபகரித்துக் கொண்டிருப்பதை படித்து மனம் அதிர்ந்தது. ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக இந்தியத் தமிழர்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
அட்டையில்: ஸ்ருதி ஹாசன்
ஸ்பெஷல் படம்: கார்த்திக் ஸ்ரீனிவாசன்