சிம்புவோட பாட்டும் ஆர்யாவோட இடமும் எனக்குத் தான்... : பவர் ஸ்டார் ஆட்டம்





‘இப்படி ஒரு கொடுப்பினை இதுவரை கிடைத்ததில்லை’ என்று பின்னி மில்லே ‘ஃபீல்’ பண்ணும் அளவுக்கு ஒரு அதகளம் அரங்கேறிக் கொண்டிருந்தது.
‘ஓ கேர்ள் மை ஹார்ட் லவ் ஃபீல் வித் நோ ரீஸன்...’ என்று ஹாலிவுட் ஆல்பம் ஸ்டைலில் பாட்டு கேட்கவே, செட்டில் எட்டிப் பார்த்தோம். கையில் கிடாரும் கக்கத்தில் அழகிகளுமாக ஸ்டெப் போட்டுக்கொண்டிருந்தார் பவர் ஸ்டார். கிட்டத்தட்ட சிம்புவின் ‘லவ் ஆன்தம்’ ஸ்டைலில் பவர் போட்ட ஸ்டெப்ஸ் பார்த்து ‘ஆடிப்போனோம்!’

‘‘இங்க என்ன நடக்குது டாக்டர்...’’ என பவரிடம் கேட்டால், பளிச் சிரிப்போடு இயக்குனர் நந்தா பெரியசாமியை கை காட்டினார். ‘‘என்னோட ‘அழகன் அழகி’ படத்துக்காகத்தான் சார் டான்ஸ் பண்றார்’’ எனப் பேசத் தொடங்கினார் இயக்குனர்.

‘‘பிரபல டி.வி சேனல் ஒன்றில் வரும் வெற்றிகரமான நிகழ்ச்சியின் பெயர்தான் ‘அழகன் அழகி’. ‘தன்னம்பிக்கையும் நேர்மையும் கொண்ட எந்த ஒரு ஆணும் அழகன்தான்’ என்ற கருவை மையமாகக் கொண்ட படம்தான் இது. ‘கல்லூரியின் கதை’, ‘மாத்தி யோசி’ படங்களுக்குப் பிறகு நான் இயக்கும் இந்தப் படத்தில் ஜோ, ஆருஷி என்ற புதுமுகங்கள்தான் ஹீரோ, ஹீரோயின். ‘தமிழ்ப்படம்’ கண்ணன் மியூசிக் பண்றார்.



படத்தின் புரமோஷனுக்காக வெஸ்டர்ன் ஸ்டைலில் ஒரு பாட்டு எடுக்கலாம்னு ஐடியா பண்ணினோம். நாங்க நினைச்சதைவிட பாட்டு நல்லா வந்ததால, ஓபனிங் ஸாங்கா வைக்கலாம்னு முடிவு பண்ணினோம். இந்தப் பாட்டுக்கு ஆர்யா ஆடினா நல்லாயிருக்கும்னு நினைச்சு அவர்கிட்ட கேட்டேன். ‘இரண்டாம் உலகம்’ படத்தில அவர் ரொம்ப பிஸி. ‘ஏப்ரலுக்குப் பிறகு கால்ஷீட் தர்றேன்’னு சொன்னார். சரி, ஆர்யாவை விட்டா அடுத்து யார் பாப்புலரான நடிகர்னு யோசிச்சப்ப பவர் ஸ்டார்தான் எல்லாரோட சாய்ஸா இருந்தது. கிட்டத்தட்ட சிம்புவோட ‘லவ் ஆன்தம்’ மாதிரியே இதை ஷூட் பண்ணியிருக்கோம்.’’

‘‘பவர் ஸ்டாருக்கு டான்ஸ் ஆடுற அளவுக்கு பவர் இருக்கா?’’
‘‘ஐயோ, அத ஏன் கேக்குறீங்க. ஸ்பாட்ல செம அட்டகாசம் பண்றார். அவர் கூட மும்பை மாடல்கள் சிலரும் ஆடுறாங்க. டான்ஸ் மாஸ்டர் கந்தாஸ் போடற ஸ்டெப்பில் பாதி அளவுக்கு பிக்கப் பண்ணிக்கிறார். ஆடிக்கிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு மாடலை கிஸ் பண்ணிட்டார். அந்தப் பொண்ணோட பாய் ஃபிரண்டும் ஸ்பாட்ல இருந்ததால, அந்தப் பொண்ணு டென்ஷனாகி கிளம்பிடுச்சு.’’
‘‘மாடல் இருக்கட்டும்... சிம்பு கோவிச்சிக்குவாரே?’’



‘‘படத்தில இந்தப் பாட்டை பார்த்துட்டு சிம்புவே சிரிக்கப் போறார். பவர் ஸ்டார் ஒரு குழந்தை மாதிரி. அவர் மேல யாருக்கும் கோபம் வராது. பவர் ஸ்டாரும் யார் மேலயும் கோபப்பட மாட்டார்’’ என்று நந்தா பெரியசாமி ஒதுங்கிக்கொள்ள, பவரை ஓரம் கட்டினோம்.
‘‘நிறைய படங்களில் ஒரு பாட்டுக்கு ஆட ஆரம்பிச்சுட்டீங்களே?’’

‘‘என்னால ஒரு படத்துக்கு பப்ளிசிட்டி கிடைக்கும், பிசினஸ் ஆகும்னு நினைச்சு டேட் கேட்கிறாங்க சார். என்னை நம்பி வர்றவங்களுக்காக நான் பெர்ஃபாம் பண்றேன். இதனால எனக்குப் பெருமைதானே? சிம்பு ஸ்டைல் பாட்டிலும், ஆர்யாவுக்காக வச்சிருந்த தேதியிலும் நான் இருக்கறது சந்தோஷம்தானே! இந்தப் படம் ரிலீஸான பிறகு பாருங்க... எம் டி.வி, யூ டியூப்னு கலக்கப்போகுது. ஏன்... மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள் கூட எனக்கு ரசிகர் ஆகலாம்’’ என நமக்கு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு அடுத்த ஸ்டெப்புக்கு தயாராகிறார் ‘பவர்’.
- அமலன்