நிழல்கள் நடந்த பாதைகள்





அமிலத்தில் கரையும் பெண்மை
வினோதினியைத் தொடர்ந்து வித்யா என்ற பெண்ணும் அமில வீச்சுக்கு உயிரைக் கொடுத்திருக்கிறாள். இது ஒரு வழக்கமான கதையாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது.

வித்யா இறந்த அன்று இதுபற்றி நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நான் ஒரு கேள்வி கேட்டேன். ‘‘ஊடகங்கள் ஒரு அமில வீச்சு பற்றி இவ்வளவு விரிவாக அலசுகின்றன. இதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் இதற்காக அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர். ஆனால் குற்ற மனப்பான்மை கொண்ட சிலர், பழிவாங்குவதற்கு இது சுலபமான வழியாக இருக்கிறதே என்று அகரீதியாக தூண்டப்படுவதற்கும் இதுபோன்ற சம்பவங்களுக்குக் கிடைக்கும் பிரபலம் காரணமாக அமைந்துவிடாதா?’’ என்று.

உண்மையில் குற்றங்களை சாதாரண மனிதர்கள் பார்ப்பதற்கும், குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் பார்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. பாலியல் வன்முறை சம்பவங்களில்கூட அதைப் பற்றி விரிவாகக் கேட்பதில் சமூகத்தின் ஒரு பகுதி கிளுகிளுப்படைகிறது என்றே தோன்றுகிறது. பிரபலமான குற்றங்களுக்கும் சமூகத்தின் ஆழ் மனதில் உறைந்திருக்கும் குற்ற மனப்பான்மைக்கும் இடையே ஒரு ரகசியமான கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. ஒரு குற்றத்திற்கு எதிராக நாம் பேசும் சந்தர்ப்பத்தில்கூட, அந்தக் குற்றத்தில் நம் மனம் ஒரு சிறு கணமேனும் ரகசியமாகப் பங்கேற்கிறது. நீங்கள் இதைக் கேட்டு அதிர்ச்சியோ, கோபமோ அடைய வேண்டியதில்லை. குற்றவாளிகளுக்கும் குற்றத்தைக் கண்டிப்பவர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு சிறிய கண்ணாடிச் சுவர்தான் இருக்கிறது. அந்த சுவர் எப்போது வேண்டுமானாலும் தகர்ந்துவிடலாம்.

ஆசிட் வீச்சு சம்பவங்கள் மூன்றாம் உலக நாடுகளில்தான் அதிகம் நடக்கின்றன என்கிறார்கள். சுமார் இருபது நாடுகளில் வருடத்திற்கு 1500க்கும் மேற்பட்ட ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. தாக்கப்படுகிறவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். முப்பது வயதிற்கு உட்பட்டவர்கள். பெரும்பாலும் இவர்கள் நன்கறிந்த நெருங்கிய நபர்களால்தான் தாக்கப்படுகிறார்கள். இந்தியா, வங்க தேசம் போன்ற நாடுகளில்தான் அதிக ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.

ஆண் - பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்னைகள்தான் பல ஆசிட் வீச்சு சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துதல், பாலியல் உறவுக்கு வற்புறுத்துதல் போன்றவற்றின் அடிப்படையிலேயே ஆசிட் வீச்சுகள் நடக்கின்றன. வினோதினி, வித்யா விஷயத்திலும் அதுதான் நடந்தது. வினோதினி தன் குடும்பத்திற்கு நன்கு தெரிந்த நபரின் திருமண விருப்பத்தை மறுத்தார். வித்யா திருமணத்திற்கு சம்மதித்தபோதும், உடனடி திருமணத்தை மறுத்தார்.

இந்தியா போன்ற நாடுகளில் பெண் என்பவள் ஒரு உடைமை. எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு பொருள். அவளால் நிராகரிக்கப்படுவது ஆண்மைக்கு விடப்படும் சவால். இந்த மனப்பான்மைதான் பெரும்பாலான காதல் கொலைகளுக்குக் காரணமாகிறது. ஆனால் இன்று பெண்களின் வாழ்க்கை பெருமளவுக்கு மாறி வருகிறது. பலவிதமான வாய்ப்புகளும் சாத்தியங்களும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒரு மனிதனோடு தன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளும் முன், அவர்கள் ஏராளமான விஷயங்களை யோசிக்கிறார்கள். நண்பர்களாகவோ காதலர்களாகவோ பழகியவர்களிடம்கூட, திருமணம் என்று வரும்போது குணாதிசயங்கள், அந்தஸ்து, பொருளாதாரம் என எத்தனையோ கேள்விகள் வந்து விடுகின்றன. அதன் அடிப்படையில்தான் இன்று பெண்கள் திருமணம் குறித்த முடிவுகளை எடுக்கிறார்கள்.

ஆனால் ஒரு பெண்ணிடம் திருமணம் சார்ந்த எதிர்பார்ப்புடன் பழகும் ஒரு ஆண், அந்தப் பெண் வேறொரு முடிவை எடுக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறான். அதை தன் ஆண்மைக்கு விடப்பட்ட சவாலாகக் கருதுகிறான். இது ஒரு ஆணாதிக்க சமூக மனநோய். ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள மறுப்பதை, ஒரு யுத்தத்தில் தோற்றதற்கு நிகராக எடுத்துக்கொள்ளும் மனநோய். பதிலுக்கு பழி வாங்கவும் அழிக்கவும் முயற்சிக்கிறான்.  

ஆசிட் வீசுவதில் ஒரு ஆத்திரம் மட்டுமல்ல... ஒரு குரூரமான நோக்கமும் இருக்கிறது. அது அவளைக் கொல்வதல்ல; அவளது அழகைச் சிதைக்க வேண்டும். அவளை குரூபியாக்க வேண்டும். அவள் அந்த வேதனையை வாழ்நாள் முழுக்க உணர வேண்டும். தான் நேசித்த ஒரு பெண்ணிற்குத்தான் ஒரு ஆண் இந்தக் குரூரத்தைச் செய்கிறான் என்பதை நம்புவது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.



தான் காதலித்து திருமணம் செய்த ஒரு பெண்ணை தினமும் அடிக்கிற, பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குகிற எவ்வளவோ ஆண்களை எனக்குத் தெரியும். பெண்களை இழிவு படுத்துகிற சமூகத்தில் எல்லோரும் ஆசிட் வீசுபவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. அதைப்போல வேறு பலவித சித்ரவதை முறைகள் இருக்கின்றன. அன்பும் காதலும்கூட நம் சமூகத்தில் பல சமயங்களில் பெண்களின் மீதான தண்டனைக் கருவிகளாகவும் சித்ரவதைக் கருவிகளாகவும் இருக்கின்றன.

ஆசிட் வீசுவது ஒரு சுலபமான கொலைக்கருவியாக இருக்கிறது. ஒரு துப்பாக்கியை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. ஒருவரை கத்தியால் குத்திக் கொல்ல வேண்டும் என்றால், அதற்கு உடல் வலிமையும் சாதுர்யமும் வேண்டும். ஆனால் ஆசிட் ஒரு எளிய, கையாள சுலபமான ஆயுதம். உடனடியாக தான் விரும்பிய விளைவுகளைப் பெறலாம். பிறர் மீது ஆசிட் வீசுவது மட்டுமல்ல, ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவங்களும் ஏராளமாக நடந்திருக்கின்றன.

ஆசிட்டை வாங்குவதற்கு விதிமுறைகளை உருவாக்கப் போவதாகச் சொல்கிறார்கள். இவ்வளவு கொடூரமான ஒரு ஆயுதம் சுலபமாகக் கிடைக்கக் கூடாது என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. அப்படி ஒரு விதிமுறையை கொண்டுவருவதால் ஒரு சிறிய சதவீத அமில வீச்சுகள் குறைந்தால்கூட நல்லதுதான். ஆனால் ஒரு சமூகத்தின் பழிவாங்கும் உணர்ச்சிக்கு எப்படி சிகிச்சை யளிக்கப் போகிறோம்?

பெண்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் யார் எந்த நேரத்தில் கொலையாளி ஆகப் போகிறார்கள் என்று பயப்பட வேண்டிய காலம் வந்துவிட்டதோ! அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஏதாவது ஒரு வழி இருக்கிறதா என்று எவ்வளவு யோசித்தும் தெரியவில்லை. அன்பின் பெயரால் செய்யப்படும் கொலைகளைத் தடுக்க உண்மையிலேயே மார்க்கம் எதுவும் இல்லை.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவே காலங்காலமாக ஓடும் அமில நதியில் பெண்கள் இன்று மூழ்கிக் கரைந்து கொண்டிருக்கிறார்கள்.

ரயில் பயணங்கள் ஏழு வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம் ரயிலில் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு பயணம் செய்தேன். ரயில் ஒரு நகரும் கிராமம். ரயிலிலேயே தொடங்கி ரயிலிலேயே முடிந்துவிடும் எத்தனையோ உறவுகளை இந்த முறையும் கண்டேன். அவ்வளவு மனம்விட்டுப் பேசிவிட்டு பெயரோ, போன் நம்பரோ கேட்காமல் பிரியும் அற்புதம் ரயில் பயணங்களைவிட வேறு எங்கும் கிடைக்காது. முன்பதிவு செய்து வருபவர்கள், முன்பதிவு செய்யாதவர்களைப் பார்க்கும் ஏளனப் பார்வை இந்தியாவில் உயர்சாதியினர் தலித்துகளைப் பார்க்கும் பார்வையைவிட மோசமானது.

இந்திய ரயில்வே நமது இந்திய அரசாங்கத்தைப் போன்றது. எவ்வளவு காலம் ஆனாலும் எதுவுமே மாறாது. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் எலிகள் காலைப் பிறாண்டிவிட்டு ஓடின. டாய்லெட்டுகளை எப்போது சுத்தம் செய்திருப்பார்கள் என்று ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ரயில் சாப்பாடுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மிகவும் திட்டமிட்டு தயாரித்தால் ஒழிய, அப்படி ஒரு மோசமான ருசியை உருவாக்குவது கடினம்.

எத்தனை அமைச்சர்கள், எத்தனை ரயில்வே பட்ஜெட் படித்தாலும் இதெல்லாம் மாறவே மாறாது. இந்த வருட ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய ரயில்கள் விட்டிருக்கிறார்களாம். ‘‘அந்த ரயில்கள் ஓட தமிழகத்தில் தண்டவாளமோ, வந்து நிற்க பிளாட்பாரமோ போதிய அளவில் இல்லை’’ என்று யாரோ டி.வியில் திட்டிக்கொண்டிருந்தார்கள்.
(இன்னும் நடக்கலாம்...)

எனக்குப் பிடித்த கவிதை
அம்மா நீங்கிய அறையில்

முதல் முறை
குழந்தை தன் முகம் ஸ்பரிசிக்கிறது
கண்ணாடியில்
மற்றொரு குழந்தையின் முகமென
பாப்பா என குதூகலத்துடன்
முத்தமிடுகிறது
தன் கைவளைகள் ஆடியில் தெரிய
கொலுசு கால்களை
உயர்த்திப் பிடித்து சந்தோஷிக்கிறது
குழந்தை
எச்சில் வழிய கடவுளைத் தீண்டுகிறது
முதலும் முடிவுமாய்
- சங்கர ராமசுப்பிரமணியன்

நான் படித்த புத்தகம்
வால்மார்ட்டை விரட்டி அடிப்போம் ஆல் நார்மன்
தமிழில்: ச.சுப்பாராவ்

வால்மார்ட் எப்படி உலகளாவியதோ, அதேபோல வால்மார்ட்டிற்கு எதிரான யுத்தமும் உலகளாவியது. வால்மார்ட் இந்தியாவிற்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று யூகங்கள் அடிப்படையில் இங்கே விவாதங்களும், அவற்றை மறுக்கும் கற்பனை நம்பிக்கைகளும் அளிக்கப்படும் சூழலில், இந்த நூல் அமெரிக்காவில் வால்மார்ட்டிற்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கிறது. ஆல் நார்மன் என்பவர் வால்மார்ட்டுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடினார். அவரது அனுபவங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வால்மார்ட்டின் வர்த்தக சூதாட்டத்தில் வாழ்விழந்த மக்கள், அதன் உழைப்புச் சுரண்டல்கள் என பல தளங்களில் இந்த நூல் புதிய உண்மைகளைச் சொல்கிறது.
வால்மார்ட் என்பது சர்வதேச முதலாளித்துவத்தின் ஒரு கோரமுகம் என்பதற்கு இந்த நூல் சாட்சியமளிக்கிறது.
(விலை: ரூ.75/- , வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018. தொலைபேசி: 044-24332424.)

மனூஷ்ய புத்திரனின் : ஃபேஸ்புக் பக்கம்

இன்று சுஜாதாவின் நினைவு தினம். ஒரு மனிதனின் இருப்பு அவனது இறப்பிற்குப் பிறகும் அவன் படைப்புகள் வழியே மேலும் மேலும் பிரகாசமாகிக்கொண்டே வரும் என்பதற்கு சுஜாதா ஒரு மகத்தான உதாரணம். ‘சுஜாதாவின் வெற்றிடத்தை எப்படி உணர்கிறீர்கள்’ என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டார்கள். ‘‘பெரிய மனுஷன்னு யாரும் இல்லாத உலகத்தில் வாழ்ற மாதிரி இருக்கு’’ என்று பதில் சொன்னேன்.