குட்டிச்சுவர் சிந்தனைகள்





அகலமாய் விரித்து, பாந்தமாய் தடவி, எட்டுத் திக்கும் விசிறி, அங்கங்கு உதறி, பக்குவமாய் மடித்து, நீவி விட்டு, சுத்தி சுத்தி மீண்டும் மடித்து, அலேக்காக உள்ள சொருகி... அடடே, மைதா மாவு கொண்டு பரோட்டா போடுவதும், காஞ்சிப் பட்டோ, பனாரஸ் பட்டோ, இல்லை கஷ்டப்பட்டோ வாங்கிய புடவையைக் கட்டுவதும் ஒன்றுதான் போல!

சென்ற வாரம் நமது இஸ்ரோ, நமது செயற்கைக்கோளை மட்டுமல்லாது வளர்ந்த நாடுகள் பலவற்றின் ஆறு செயற்கைக்கோள்களையும் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி விட்டது. அடுத்து, ‘ஆளே இல்லாத ராக்கெட்’ அனுப்பப் போகிறோம்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தயாரித்து விட்டோம், கடல்நீரை குடிநீராக்கும் வித்தை கற்றோம், ஒட்டுமொத்த இந்தியாவையே கம்ப்யூட்டரால் இணைத்து விட்டோம். அட, காட்டுல சுற்றித் திரியுற யானையை கூட்டி வந்து ரோட்டுல பிச்சை கூட எடுக்க வச்சிட்டோம். ஆனா, இந்த தம்மாத்தூண்டு கொசுவ ஒழிக்க நம்மளால முடியல. என்ன கொடுமை சார் இது?

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பின்பு அதை ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்த்து விடுவோம். நாட்டுப்பற்று இருக்கோ, இல்லையோ... ரூபாய் நோட்டுப்பற்று இருக்கச் செய்வோம். முடிந்தால் திருக்குறளில் கூட சில மாற்றங்கள் செய்வோம்.

*  ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை   டாக்டரென கேட்ட தாய்
*  தந்தை மகற்கு ஆற்றும் நன்றி     றிக்ஷீமீ.ரி.நி என்ட்ரன்ஸ் பாஸாகி விடல்
*  மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி படித்து
  எஞ்சினியர் ஆகி விடல்
பிளஸ் 2 தேர்வு ஆரம்பமாகி விட்டது. உங்கள் கனவுகளை பிள்ளைகளின் மேல் கொட்டாமல், அவர்களை இயல்பாக தேர்வு எழுத விடுங்கள். எஞ்சினியரிங் / டாக்டர் மட்டுமே படிப்பு அல்ல. 18 டாக்டர் பட்டம் வைத்திருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவரும் அல்ல, பொறியாளரும் அல்ல. மரியாதை மதிப்பெண்களில் மட்டுமில்லை.

குழந்தைகள் எனப்படுபவர்கள் யாரென்றால், பெரியவர்கள் பணத்தையும் படிப்பையும் கொண்டாடும்போது பட்டாம்பூச்சி பார்த்து அதிசயிப்பவர்கள்.
குழந்தைகள் எனப்படுபவர்கள் யாரென்றால், பாம் வெடித்ததைப் பற்றிய கவலையின்றி சோட்டா பீம் பற்றி கவலைப்படுபவர்கள்.
குழந்தைகள் எனப்படுபவர்கள் யாரென்றால், பல பெற்றோர்களை விவாகரத்து செய்யவிடாமல் ஃபெவிகால் போல ஒட்ட வைத்திருப்பவர்கள்.
குழந்தைகள் எனப்படுபவர்கள் யாரென்றால், வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கும் பெரியவர்களுக்கே வாழக் கற்றுக் கொடுப்பவர்கள்.

ஆப்பிள் சீசன், ஆரஞ்சு சீசன், அன்னாசிப் பழ சீசன் மாதிரி, இது ஆசிட் சீசன் போல இருக்கு. நேற்று வினோதினி; இன்று வித்யா. தமிழகத்திற்கு ஆசிட் வீச்சு ஒன்றும் புதிதல்ல, ஐ.ஏ.எஸ் ஆபீசர் முதல் ஐ.டியில் வேலை செய்யும் பெண்கள் வரை பலரும் அமிலத்தில் முகம் கழுவி இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் முகம்தான் அடையாளம். அது சிதைக்கப்படும்போது ஒரு பெண் படும் உடல் வேதனையும் மன வேதனையும் எழுத்தால் சொல்ல முடியாதது. ‘ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்’ என உறுதி அளித்திருக்கிறார் முதல்வர். பேச்சளவில் இல்லாமல் அதை எந்த வகையில் அரசு இயந்திரம் செயல்படுத்தும் என போகப் போகத்தான் தெரியும்.

ஸ்கூலுக்கு லேட்டா போனா ஒரு காரணம் வச்சிருக்கோம். வீட்டுக்கு லேட்டா போனா ஒரு காரணம் வச்சிருக்கோம். காதலிக்க ஒரு காரணம் வச்சிருக்கோம். காதலை மறுக்க ஒரு காரணம் வச்சிருக்கோம். கல்யாணத்துக்கு ஒரு காரணம் வச்சிருக்கோம். விவாகரத்துக்கு ஒரு காரணம் வச்சிருக்கோம். நட்புக்கு ஒரு காரணம், பிரிவுக்கு ஒரு காரணம் வச்சிருக்கோம். பொருள் வாங்க ஒரு காரணம் வச்சிருக்கோம். ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க ஒரு காரணம் வச்சிருக்கோம். பயணம் போக ஒரு காரணம் வச்சிருக்கோம். இந்த உலகத்தில் எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு காரணம் உண்டு. இப்படி வாழ்க்கை முழுக்க காரணங்களால் இருந்தாலும், பல பேருக்கு வாழ்க்கைக்கான காரணமே தெரியவில்லை!

குளிர் கழுத்துக்கு வராம இருக்க வெள்ளைக்காரன் டையைப் பயன்படுத்தினா, நாம எல்.கே.ஜி, யு.கே.ஜி குழந்தைங்களுக்கு மாட்டிவிட்டு மூக்கு தொடைக்க பயன்படுத்தறோம். வெள்ளைக்காரன் ஆபீசுக்கு ஒரு ஷூ, கால்பந்து விளையாட ஒரு ஷூ, வாக்கிங் ஜாக்கிங் போக ஒரு ஷூன்னு போட்டா, நாம வெயில் பிரதேச நாட்டுல எந்த வேலை செய்யறதுக்கும், அதை எந்த நேரம் செய்யும்போதும் ஒரே ஷூவ பயன்படுத்தறோம். கூலிங் கிளாஸை அவன் சம்மர் டைம்ல மட்டும்தான் போடுவான். நாம சாமக்கோழி கூவுற நேரத்துலயும் போட்டு பந்தா காட்டறோம். பனிப் பிரதேசமா இருப்பதால வெள்ளைக்காரன் முழுக்கை சட்டை போட்டுக்கிட்டு சுத்தறான்; நாம முழுக்கை சட்டை போட்டுக்கிட்டு முழங்கை வரைக்கும் சுருட்டி விட்டுக்கறோம். வெள்ளைக்காரன் கர்சீப்ப முகம் தொடைக்க பயன்படுத்தறான். நாம பஸ்லயும் தியேட்டர்லயும் இடம் புடிக்க பயன்படுத்தறோம்.

வெள்ளைக்காரன் அவன் நாட்டு வெப்பநிலைக்கு பயன்படுத்துவது எல்லாத்தையும், வேகாத வெயில்ல நாய் மாதிரி பொழப்பு நடத்துற நாம எதுக்கு பங்காளி பயன்படுத்தணும்? இந்த பந்தாக்கார படிச்சவங்கதான் அப்படி இருக்காங்கன்னா, நமக்கு எதுக்கு இந்த வௌம்பரம்?

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...

ஐதராபாத் குண்டுவெடிப்பு நடந்து பத்து நாள் ஆகியும், குண்டை யாரு வச்சான்னு கண்டுபுடிக்க முடியாத இந்திய உளவுத்துறை!