பணக்காரர்கள் அதிக வரி கட்டுவார்களா?





‘‘பணக்காரர்களுக்கு சூப்பர் டாக்ஸ் விதிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்’’ என்றெல்லாம் பட்ஜெட்டுக்கு முன்பு பரபரப்பாக முன்னோட்டம் கொடுத்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், வழக்கம்போலவே பணக்காரர்களை மயிலிறகால் தடவிக் கொடுத்து, மத்தியதர வர்க்கத்தை தடிகொண்டு தாக்கியிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்திருக்கிறார் நிதியமைச்சர். ஆனால் 110 கோடிக்கும் மேலாக மக்கள்தொகையைக் கொண்ட, உலக அளவிலான செல்வந்தர்கள் குவிந்துள்ள இந்தியப் பெருநாட்டில் 1 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் வெறும் 42 ஆயிரத்து 800 பேர்தான்.

‘‘ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் சென்னையில் மட்டுமே 10 ஆயிரம் பேருக்கு மேல் இருப்பார்கள். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் 42 ஆயிரத்து 800 பேர்தான் என்கிறார் நிதியமைச்சர். பெரும்பாலானவர்கள் வரி கட்டுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான திட்டங்களும் இல்லை. மாதச்சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே முறையாக கணக்குத் தாக்கல் செய்கிறார்கள். பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. நாட்டின் கட்டமைப்பே வரியை அடிப்படையாகக் கொண்டுள்ள நிலையில், வரி வசூல் முறையாக இருக்க வேண்டும். ஆதார் கார்டுக்கு பதிலாக பான் கார்டை தேசிய அடையாள அட்டையாக மாற்ற வேண்டும். சிலிண்டர் வாங்குவதிலிருந்து, பிளைட் டிக்கெட் வாங்குவது வரை பான் கார்டை அவசியமாக்கினால் தனி மனிதனின் செலவினங்களை எளிதாகக் கணக்கிடலாம். அதன்மூலம் வரி கட்டாத பணக்காரர்களை இனம் காண முடியும்’’ என்கிறார் பொருளாதார நிபுணர் புகழேந்தி.

‘‘அமெரிக்காவில் ஆண்டுக்கு 4 லட்சம் டாலருக்கு மேல் சம்பாதிக்கும் தனி நபர்களுக்கும், நான்கரை லட்சம் டாலருக்கும் மேல் சம்பாதிக்கும் தம்பதிகளுக்கும் கூடுதல் வரி விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். எல்லாவற்றிலும் அமெரிக்காவை பின்பற்றும் மத்திய அரசு அதை இங்கே நடைமுறைப்படுத்த நினைக்கிறது. ஆனால், நடுத்தர மக்களின் மீதான கடுமையில் கால் பாகம் கூட பணக்காரர்கள் மேல் காட்டப்படவில்லை. நடுத்தர மக்களுடைய சிரமங்களைக் குறைக்கவோ, விவசாயத்தை மேம்படுத்தவோ இந்த பட்ஜெட்டில் எந்த ஏற்பாடும் இல்லை. இன்று பணத்தின் மதிப்பு வெகுவாக குறைந்திருக்கிறது. வருடத்துக்கு 2 லட்சம் என்றால் மாதத்துக்கு 16,500. சென்னை போன்ற நகரங்களில் 30 ஆயிரம் சம்பாதித்தால் கூட தன்னிறைவான வாழ்க்கை வாழமுடியாது. ஆனால் இவர்கள் வரி கட்டவேண்டும். ஆனால் எந்த வரையறைக்கும் உட்படாமல் பெரும் பணம் ஈட்டுபவர்கள் வரியே கட்டாமல் ஏமாற்றுகிறார்கள். இந்த முரண்பாட்டைக் களைய பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை’’ என்று வருந்துகிறார் பொருளாதார நிபுணர் கோபாலன்.

பொருளாதார நிபுணர் ஆத்ரேயா, ‘‘நாட்டில் ‘கொடுபடா வரிகள்’ மட்டும் 2.74 லட்சம் கோடி இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் 65 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே வசூலிக்க முடியும் என்கிறார் நிதியமைச்சர். அதாவது, நான்கில் ஒரு பங்கு. இருக்கிற வரி பாக்கியை வசூல் செய்யமுடியாத இந்த அரசின் ஆளுமைத்திறனைப் பற்றி என்ன சொல்ல..?’’ என்று கேட்கிறார்.

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் வெறும் 42 ஆயிரத்து 800 பேர்தான் என்பதை நிதியமைச்சரே ஒத்துக்கொள்கிறார். அவர்களுக்கும் கூட இந்தக் கூடுதல் வரி இந்த வருடத்துக்கு மட்டும்தான் என்கிறார். ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் ஈட்டும் நிறுவனங்களுக்கு 5 முதல் 10 சதவீத கூடுதல் வரியாம். இதனால் பொருளாதாரத்தில் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை. நேர்முகவரி மூலம் ரூ.13 ஆயிரம் கோடியும், மறைமுக வரி மூலம் ரூ.3 கோடியும் கிடைக்கும் என்பது அவரின் அனுமானம். இது மிகவும் சொற்பத்தொகை. பணவீக்கத்தோடு ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை.

பெரும் வருமானம் உள்ள பலர், ‘வருமான வரித்துறைக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களை வரிகட்டச் செய்வதற்கான ஆக்கப்பூர்வ திட்டங்கள் இல்லை. ‘பொதுவான வரி ஏய்ப்புக்கு எதிரான நெறி முறைகள்’ என்ற திட்டம் ஒன்றை பிரணாப் நிதியமைச்சராக இருந்தபோது உருவாக்கினார். வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் அடங்கிய திட்டம். சிதம்பரம் நிதியமைச்சரான பிறகு, பார்த்தசாரதி ஜோம் என்பவரை ஒரு நபர் கமிட்டியாக நியமித்து அத்திட்டத்தை பரிசீலிக்கச் சொன்னார். அந்த கமிட்டி 2016 வரை அதை செயல்படுத்த அவசியமில்லை என்று அறிக்கையளித்து விட்டது. என்றால், 2016 வரை வரி ஏய்ப்பு செய்யலாம் என்று அர்த்தமா..?

சேமிப்பு விகிதம் குறைந்திருப்பதாகக் கவலைப்படும் நிதியமைச்சர் அதை ஊக்குவிப்பதற்கு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ‘80 சி’க்கான வருமான வரி வரம்பு உயர்த்தப்படவில்லை. விவசாயிகள், மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு இந்த பட்ஜெட் எந்த சந்தோஷத்தையும் தராது’’ என்கிறார் ஆத்ரேயா.

இந்தியாவின் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் விவசாயிகளும், மாதச் சம்பளம் பெறுபவர்களும் தான் என்பதை நிதியமைச்சர் மறந்துவிட்டாரோ..?
- வெ.நீலகண்டன்