+2 விலங்கியல் : சென்டம் வாங்க டிப்ஸ்





“டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு படிக்கும் மாணவர்களுக்கு தாண்ட முடியாத தூரமாக இருக்கும் பாடங்களில் விலங்கியலும் ஒன்று. கடந்த ஆண்டு விலங்கியலில் சென்டம் வாங்கியவர்கள், வெறும் 4 பேர் மட்டுமே! அதற்கு முந்தைய ஆண்டில் ஒருவரால்கூட சென்டம் வாங்க முடியவில்லை. விலங்கியலின் கடந்த கால நிலவரத்தைப் பார்த்தால் கலவரமாகத்தான் இருக்கிறது. ‘மெடிக்கலைக் குறி வைக்கும் ப்யூர் சயின்ஸ் மாணவர்களின் ஒரு பாடமாக இருக்கும் விலங்கியல் அவ்வளவு கஷ்டமா?’ என்றால், ‘இல்லை’ என்பதே ஆசிரியர்களின் பதில். பிறகு எங்கு பிரச்னை? விலங்கியல் ஆசிரியர்கள்
விரிவாகப் பேசுகிறார்கள்...

‘‘எட்டே பாடங்கள்தான் என்றாலும், நூறு பக்கங்களைக் கொண்ட முதல் பாடத்தைப் பார்த்ததுமே மிரண்டு போறாங்க பசங்க. என்னதான் படிக்க வைக்க முயற்சி செய்தாலும், சாய்ஸ்ல விடலாமான்னுதான் யோசிக்கிறாங்க. அந்த ஒரு பாடத்தாலயே சென்டம் வாய்ப்பு பறி போகுது’’ என்கிற கோவில்பட்டியைச் சேர்ந்த ஆசிரியை பிரேமா, சென்டம் தவறிப் போவதற்குக் காரணமாகும் ஒரு பாயின்ட்டையும் குறிப்பிடுகிறார். ‘‘ஒரு மதிப்பெண் பகுதியில், விடைகள் எண்களாக வரும் கேள்வியிலேயே மாணவர்கள் குழம்புகிறார்கள்’’ என்பதே அந்த டிப்ஸ்.

‘‘முதல் பாடமான ‘மனித உடற்செயலியல்’ மருத்துவப் படிப்பில் முக்கியப் பாடம் என்பதால் அதை மொத்தமாக ஒதுக்கி வைப்பது நல்லதல்ல’’ என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன். ‘உடற்செயலியல்’ பாடத்திலும் கவனம் செலுத்தி சென்டத்தைத் தவற விடாமலிருக்க, ஐடியா தருகிறார் இவர்.

‘‘அந்தப் பாடத்தைப் பொறுத்தவரை பகுதி பகுதியாப் பிரிச்சு படிச்சா சுலபமா மனசுல பதிய வைக்க முடியும். ஒருவேளை சிரமம்னு நினைச்சாங்கன்னா, இந்தப் பாடத்துல மட்டும் புக்பேக், பழைய கேள்வித்தாள்கள்ல உள்ள 1, 3 மார்க் கேள்விகளை முழுசாப் பார்த்துடணும். ஏன்னா, 5, 10 மதிப்பெண் கேள்விகளை இந்தப் பாடம் இல்லாமலே எழுதிடலாம். அந்தப் பகுதிகளுக்கு 2, 5, 6, 8வது பாடங்களே போதுமானவை. அதனால, முதல் இரு பகுதிகளுக்கு மட்டும் (1, 3 மதிப்பெண்) இந்தப் பாடத்தைப் படிச்சுட்டுப் போனாலும் சென்டம் தப்பாது’’ என்பதே அவர் ஐடியா.
‘தொடர்ந்து சென்டத்துக்குத் தடுமாறி வரும் மாணவர்களுக்கு மேற்கண்ட இந்த யோசனைகள் நிச்சயமாகப் பலன் தரும்’’ என்று ஆமோதிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் இளங்கோவன்.
அவருடன் பேசியதில் கிடைத்தபயனுள்ள டிப்ஸ் கீழே...

*  ஒரு மார்க் பகுதியில் அளவுகள், வளர்ச்சிக் காலங்கள், கண்டுபிடிப்புகளின் ஆண்டுகள் போன்ற கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை பார்த்துச் செல்லுதல் நல்லது. ஏனெனில் மாணவர்களைக் குழப்புவதற்கென்றே ஒரே மாதிரி எண்களோ, அடுத்தடுத்த எண்களோ கொடுக்கப்படலாம்.
*  ஒரு மதிப்பெண் பகுதியில் அல்சீமர், எய்ட்ஸ் தொடர்பான கேள்விகள் நுணுக்கமாக எடுக்கப்பட்டு குழப்புவது போல் தோன்றும். கவனம் தேவை.

*  ஐந்து மதிப்பெண் பகுதியில் வரும் கட்டாயக் கேள்வி, சில நேரங்களில் மாணவர்களுக்கு தடுமாற்றத்தை உண்டாக்கி விடுகிறது. பழைய பத்து வருட கேள்வித்தாள்களைப் பார்த்துச் செல்லுங்கள். நிச்சயமாக அவற்றிலிருந்தே கட்டாயக் கேள்வி எதுவாக இருக்கும் என்பது தெளிவாகிவிடும்.
*  படம் தேவைப்படுகிற கேள்விகளில் படத்தின் அழகு முக்கியமல்ல. பாகங்களே முக்கியம்.
இந்த ஆண்டு கட்டாய வினா (ஐந்து மதிப்பெண் பகுதி) கீழ்க்கண்டவற்றிலி ருந்தும் கேட்கப் படலாம். தயார் செய்து கொள்ளவும்.
*  உலகளாவிய வெப்ப உயர்வின் விளைவுகளை எழுதுக
*  ஓசோன் படல இழப்பின் விளைவுகள் யாவை?
*  உயிரிய பல்வகைமை இழப் பால் ஏற்படும் இழப்புகள் யாவை?




*  உட்கிரகித்தல், தன்மயமாதல் பற்றி எழுதுக
*  வேர்க்கால்வாய் சிகிச்சை பற்றி விவரிக்க
*  எலும்பு முறிவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
*  தண்டுவட திரவத்தின் பணிகள் யாவை?
*  ரத்தம் உறைதல் நிகழ்வை விளக்குக
*  நினைவாற்றல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
*  குளோனிங் செயல்முறையை விளக்குக
‘‘பாகங்கள் மறக்காமல் இருக்க, படங்களை வரைந்து பயிற்சி செய்தல் அவசியம்’’ என்கிற பிரேமா, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு மறக்காமல் பயிற்சி எடுக்கச் சொல்கிறார்.
*   மனித இதயம் - நீள்வெட்டுத் தோற்றம்
*  இதயத் துடிப்பின் தோற்றம் மற்றும் பரவல்
*  மனித கண் - குறுக்கு வெட்டுத் தோற்றம்
*  இம்யூனோகுளோபின் அமைப்பு
*  விந்து மற்றும் அண்டத்தின் அமைப்பு மதிப்பெண்களை அப்படியே வழங்கும் பத்து மதிப்பெண் பகுதியில் தொடர்ந்து ரிப்பீட்டாகும் சில கேள்விகள் இவை...
*  சிறுகுடலில் நடைபெறும் செரிமானத்தை விவரி
*  சுவாசம் நடைபெறும் முறையை விவரி
*  எலும்புத் தசையின் அமைப்பை விவரி
*  வைட்டமின் குறைவினால் ஏற்படும் நோய்களை விவரி
*  மனித ரத்தத்தின் இயைபை விவரி
*  அட்ரீனல் சுரப்பியின் மெடுல்லா பணிகளை விவரி
*  நீரிழிவு நோய் பற்றி ஒரு கட்டுரை வரைக
*  மாதவிடாய் சுழற்சியை விளக்குக
*  கண்ணின் பார்வை குறைபாடுகளையும் அதனைச் சரி செய்யும் வழிகளையும் விவரி
*  குடும்பநலத் திட்டத்தின் நோக்கங்களையும் பல்வேறு குடும்பக் கட்டுப்பாட்டு வழிமுறைகளையும் விளக்குக
*  சிறுநீர் உற்பத்தியாகும் முறையை விவரி
*  வைரஸ் நோய்கள் பற்றி விளக்குக
*  ஆஸ்காரிஸ் புழுவின் வாழ்க்கைச் சுழற்சியை விவரி
*  மனித குரோமோசோம் கேரியோடைப்பிங் பற்றி எழுதுக
*  நன்னீர் மேலாண்மை பற்றி விளக்கி எழுதுக
*  கோழி வளர்ப்பின் முக்கிய நிலைகளை விவரி
இதுவரை பார்த்த விஷயங்கள் இந்த ஆண்டு விலங்கியலில் சென்டம் எண்ணிக்கையை நிச்சயம் கூட்டும் என நம்புவோம். அடுத்த இதழில் கம்ப்யூட்டர் சயின்ஸ்!
தொகுப்பு: அய்யனார் ராஜன்
மாடல்: சுசி
படம்: புதூர் சரவணன்