கண்ணீரில் நீந்தும் கல் மனிதர்கள்





ஒரு புகைப்படத்தின் அழகியல், அதன் தொழில்நுட்ப செயல்பாட்டை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. அது என்ன உணர்வை வெளிப்படுத்த விரும்புகிறது என்பதே அதைத் தீர்மானிக்கிறது’’

என்கிறார் குட்டி ரேவதி.
வெற்று எழுத்தாக அன்றி, ஒரு களப்பணியாளராக பெண்ணியம், தலித்தியம் சார்ந்து தீவிரமான பங்களிப்பைச் செலுத்தி வரும் குட்டி ரேவதியின் படைப்புகள் பொதுவெளியில் மிகப்பெரும் அதிர்வையும், அனலான விவாதத்தையும் உருவாக்குபவை. திருச்சியை அடுத்த திருவெறும்பூரைச் சேர்ந்த இவர், தற்போது சென்னையில் தங்கி காட்சி ஊடகங்களில் இயங்கிவருகிறார். வாழ்வுரிமை மறுக்கப்பட்ட விளிம்பு பெண்களின் வாழ்க்கைச்சூழலை புகைப்படத் தொகுப்பாக உருவாக்கும் பணியில் தீவிரமாக இயங்கிவருகிறார். இருளர் சமூக பெண்களின் ஒடுங்கிய வாழ்க்கையையும், சுனாமி பேரழிவுக்குப் பிறகான மீனவ பெண்களின் வாழ்க்கையையும் கடும் உழைப்பின் ஊடாக பதிவுசெய்துள்ள ரேவதி, கல்குவாரிகளில் வதைபடும் பெண்களைப் பற்றி ஒரு புகைப்படத் தொகுப்பை அண்மையில் உருவாக்கி பதைபதைக்க வைத்திருக்கிறார்.

‘‘திருநெல்வேலியில் சித்த மருத்துவம் படித்த காலம்தான் என் தேடல் விரிந்த காலம். அப்போது திருநெல்வேலியில் பரந்த இலக்கியவெளி உண்டு. ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ அப்போது அங்கு காட்சி ஊடகம் தொடர்பாக பயிற்சிகளை தொடர்ச்சியாக அளித்துவந்தது. தினமும் உலக திரைப்படங்களை திரையிடுவார்கள். பல்வேறு புதுவெளிகள் எனக்கு அறிமுகமாயின. அந்த இயக்கம் நடத்திய புகைப்படப் பயிலரங்கின் வழியாகவே அந்த தொழில்நுட்பத்தை பழகினேன்.

காட்சி ஊடகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவுகிற அரசியலை புகைப்படம் வழியாக முறியடிக்கும் உத்வேகத்தில்தான் நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். எல்லாக் கலைகளுமே ஆண்களுக்கென்றே காட்சியாகின்றன. பெண்ணுக்கான தேடலும், உரிமையும், ஆவலும் அவளுக்குள்ளாகவே மரித்துப்போகின்றன. பெண்ணுடலை ஒரு நுகர்வுப்பொருளாக, உயிரற்ற ஜடமாகவே காட்சி ஊடகம் பயன்படுத்துகிறது. பெண்ணை சக உயிராகக் கருதக்கூடிய படைப்புகள் அரிதிலும் அரிதாகவே வருகின்றன. படைப்பாளியாக பெண் மாறும்போதே இந்நிலையை மாற்றமுடியும்’’ என்கிறார் ரேவதி.




‘‘பெண் ணின் உடல், மொழி, பாவனை, கற்பனை அனைத்தையும் ஒரு பெண்ணின் பார்வையில் பதிவுசெய்ய வேண்டும். அதற்கானதாகவே என் பயணங்கள் அமைகின்றன. தென்மாவட்டங்களில் கொடூரங்களுக்கு உட்படுத்தப்படும் கல்குவாரி தொழிலாளர்கள் பற்றி ஆவணப்படம் எடுக்க முடிவு செய்தேன். அதற்குமுன்பு அங்கு ஆய்வு மேற்கொண்டேன். அப்போது எடுத்த படங்களே இவை.  
திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்த மலைகளில் பாதிக்கும்மேல் சிதைத்து விட்டார்கள். முதலாளிகளுக்கு அரசியல் பலம் இருப்பதால் அவர்களை கேள்வி கேட்க யாருமில்லை. பல்வேறு இடங்களில் இருந்து  கிளம்பிவந்த நாடோடிகள், இந்த முதலாளிகளிடம் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களுக்கே அவர்களின் வரலாறு தெரியவில்லை. கொத்தடிமை வாழ்க்கை. சிறு குழந்தைகள் தொடங்கி, வயது முதிர்ந்த பெண்கள் வரை எல்லோரும் சுத்தியல் தூக்கவேண்டிய நிர்ப்பந்தம். சிறிதளவு முன்பணத்தைப் பெற்றுக்கொண்டு காலம் முழுவதும் அந்தக் கடனை கழிக்கவே உழைத்துக் கொட்டுகிறார்கள். மகன் பேரில், மனைவி பேரில் கடன் கொடுத்து அவர்களையும் இந்தத் தொழிலோடு பிணைக்கிறார்கள். இப்படி லட்சக்கணக்கான தொழிலாளிகள் இருப்பது நம் அரசு எந்திரத்துக்குத் தெரியவில்லை.

கல்லுடைக்கும்போது கண்ணில் பட்டு பார்வையிழந்தவர்கள், சுத்தியல் இடம்மாறி விழுந்து கை நைந்தவர்கள், வெடி வைத்துத் தகர்க்கும்போது கால் இழந்தவர்கள் என இந்த குவாரிகளுக்குப் பின்னால் ஏகப்பட்ட சோகங்கள்.
அவர்களின் வாழ்க்கை குவாரிக்குள்ளாகவே முடிந்து போகிறது. இந்த தொழிலாளர்கள் சிந்துகிற ரத்தம்தான் நாட்டை தூக்கி நிறுத்துகிறது என்பது யாருக்கும் புரியவில்லை. வானுயர்ந்த கட்டிடங்களையும், நீண்டு வளையும் பாலங்களையும் அவர்கள் உடைத்து குவிக்கிற கற்களைக் கொண்டுதான் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்காகப் பேச யாருமில்லை என்பதை புரிந்துகொண்ட இவர்கள், ஒரு சங்கத்தை கட்டமைத்திருக்கிறார்கள். மெல்ல மெல்ல குவாரிகளுக்குள் உரிமைக்குரல் ஒலிக்கிறது. கடும் எதிர்ப்பையும் மீறி இந்தப் புகைப்படத் தொகுப்பு உருவாக அந்த சங்கம் துணை நின்றது’’ என்கிறார் ரேவதி.
இந்தப் பெண்களின் வாழ்க்கைப்பாட்டை ‘கல் மனிதர்கள்’ என்ற ஆவணப்படமாக தயாரித்திருக்கிறார் ரேவதி.
- வெ.நீலகண்டன்