நியூஸ் வே





‘‘நான் இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடுவேன் என கனவிலும் நினைத்ததில்லை; அது நடந்தது. டெஸ்ட் போட்டியில் டபுள் செஞ்சுரி அடிப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை; ஆனால் அதுவும் நடந்தது’’ என நெகிழ்கிறார் டோனி. சென்னை டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா தோற்கக் காரணமாக இருந்தது, டோனியின் அதிரடி டபுள் செஞ்சுரி. ‘‘இதை யாருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டால், ‘‘இதை எனக்காக நானே வச்சுக்க விரும்புகிறேன்’’ என்கிறார் டோனி குழந்தையாக!

‘சுண்டாட்டம்’ படத்தில் சத்தம் காட்டாமல் ஒருவர் நடித்திருக்கிறார். அவர், நரேன். ‘முகமூடி’க்குப் பிறகு அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட ரோல் இதுதான் என்கிறார்கள். ஏவி.எம் ஸ்டுடியோவில் இருக்கும் தெரு செட், ‘பராசக்தி’யில் ஆரம்பித்து இன்றுவரைக்கும் ஃபேமஸ் ஷூட்டிங் ஸ்பாட். அதில் கடைசியாக ஷூட்டிங் நடந்த படமும் ‘சுண்டாட்டம்’தான். விரைவில் இந்த இடமும் ஷாப்பிங் மால் ஆகலாம்!

அஜித் மாதிரியே சிம்புவும் இனிமேல் பொது விழாக்களில் கலந்துகொள்வதில்லை என தீர்மானித்து விட்டார். இதையே அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்தும் விட்டார்.



டைரக்டர் பாரதிராஜா தன் சுயசரிதையை எழுதத் தீர்மானித்துவிட்டார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசி, கேசட்டில் ரெக்கார்ட் செய்துவருகிறார். நினைவு தெரிந்த நாளிலிருந்து புத்தகம் பேசத்தொடங்கும். இளையராஜாவோடு ஒரிஜினல் பைட்டுக்கான காரணம் அதில் இருக்குமா?

எம்.பி.ஏ முடித்து பிசினஸ் நிர்வாகத்தில் பெரிய ஆளாக வர வேண்டும் என்பதுதான் காஜல் அகர்வாலின் இளவயது லட்சியமாக இருந்திருக்கிறது. ‘‘எதிர்பாராத விதமாக நடிகை ஆகிவிட்டேன். டைரக்டர்கள் ஒரு படத்திலாவது எனக்கு எம்.பி.ஏ பட்டதாரி வேடம் கொடுத்தால் பரவாயில்லை’’ என்கிறார்.

‘சாட்டை’ படத்தில் நடித்தபிறகு சமுத்திரக்கனிக்கு நடிப்பில் இன்னும் ஆர்வம். ஒரு வாழ்க்கையை ஐந்து பாகங்களாகப் பிரித்து ஒரு படத்தில் அவரே நடிக்கப்போகிறார். இயக்குநரும் அவரேதான். இன்னொரு ஆட்டோகிராப் இதுதானா?

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தனஞ்செயன். யெஸ், விரைவில் படம் ஒன்றை இயக்கப்போகிறாராம் யு டி.வி தனஞ்செயன். ஆனால் படத்தை தயாரிப்பது யு டி.வி அல்ல. ரொம்ப தெளிவுதான்!



பி.ஜே.பி தலைவர் பதவியிலிருந்து நிதின் கட்கரி விலகியதில், டெல்லியில் இருக்கும் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ரொம்பவே வருத்தம். எல்லோருக்கும் அவர் வந்துதான் நல்ல சம்பள உயர்வு கொடுத்தார்; குடியிருப்புகளை சீரமைத்துக் கொடுத்தார். அதனால் இன்னும் அவர்கள் கட்கரியோடு டச்சில் இருக்கிறார்கள்.

‘பிரியாணி’ நல்லபடியாக வந்திருப்பதைப் பார்த்த கார்த்தி, வெங்கட்பிரபுவுக்கு ‘ஐபோன் 5’ கிஃப்ட் கொடுத்திருக்கிறார். சந்தோஷத்தில் குதித்த வெங்கட்பிரபு இன்னும் கவனமாக படப்பிடிப்பில் ஆழ்ந்துவிட்டார். கார்த்தி... பார்ட்டி பாய்ஸ்களை வேலை வாங்க இது நல்ல ஐடியா!

‘ரவுடி ராத்தோர்’ படத்தில் அக்ஷய்குமாருடன் விஜய் ஒரு பாட்டுக்கு சில ஸ்டெப்ஸ் கொடுத்து ஆடினார். ரொம்ப சந்தோஷப்பட்ட அக்ஷய்குமார் இப்போது விஜய்யுடன் ‘தலைவா’ படத்தில் இரண்டு ஸ்டெப்ஸ் போட ஓகே சொல்லி விட்டார். படமாக்குவதற்கான வேலைகள் நடக்கிறதாம்.

கட்சி, ஆர்ப்பாட்டம் என்று ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்த விஜய டி.ராஜேந்தர், கிடப்பில் போட்டிருந்த  ‘ஒருதலை காதல்’ படத்தை எடுத்து முடிக்க ஆயத்தமாகிவிட்டார்.

இயக்கம், தயாரிப்பு என இரட்டை சவாரியை தொடங்கியுள்ள சற்குணம், தனது உதவியாளர்களை இரண்டு யூனிட்டுகளாக பிரித்து வேலை வாங்குகிறாராம். தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி பகுதியில் தனுஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சற்குணம், இரவு ஷூட்டிங் முடிந்து ரூமுக்குத் திரும்பியதும் ‘மஞ்சபை’ படத் தயாரிப்பு வேலையைப் பார்க்கிறாராம்.

சைலன்ஸ்

நொடித்துப்போன நவ‘ரத்ன’ தயாரிப்பாளருக்காக ஒரு படம் பண்ணிக் கொடுக்க அந்த ஹீரோ முன்வந்தார். ‘‘வியாபாரம் எல்லாம் முடிந்த பிறகு பணம் வாங்கிக்கொள்கிறேன்’’ என தயாரிப்பாளர் வயிற்றில் பால் வார்த்தார் நடிகர். ஆனால் ‘‘கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது’’ எனச் சொல்லியே சம்பளத்தில் பாதிக்கும் மேலே வாங்கி விட்டாராம் நடிகர். இது என்னடா புதுவிதமான சோதனை என ‘தல’யில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார் தயாரிப்பாளர்.

இப்போது நிறைய படங்களை எடுக்கும் கம்பெனி ஒன்று ஆனந்த இயக்குநரை கதை கேட்டது. ‘கதையோடு டைரக்ஷனும் செய்து தரவேண்டும்’ என்பதுதான் ஒப்பந்தம். கதையை சூப்பர் ஸ்டாருக்கு ரெடி பண்ணினார் டைரக்டர். கொண்டு போய் கொடுத்ததும், ‘‘நீங்கள் கேமராவை பார்த்துக்கொள்ளுங்கள். டைரக்ஷன் இன்னொருவர்’’ என்றதும், ‘ஸாரி’ என ஸ்கிரிப்ட்டை பிடுங்கிக் கொண்டு திரும்பிவிட்டார் டைரக்டர்.

அடுத்தடுத்து மணிரத்னம் - ஜெயமோகன் இணைந்து ஸ்கிரிப்ட் ரெடி செய்ய ஆர்வமாக இருந்தார்கள். ‘கடலு’க்குப் பிறகு அவர்களது ஃபிரண்ட்ஷிப் மூழ்கிவிட்டது. இனிமேல் சேர்ந்து ஒர்க் செய்யமாட்டார்களாம்.

நடிகை சீதா தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் வரைவதில் கை தேர்ந்தவர். அவரது வீடு முழுக்க ஓவியங்களின் அணிவரிசையைப் பார்க்கலாம். கேட்டால், ஓவியங்கள் வரைவது பற்றி லெக்சரே எடுப்பார்.

குஜராத்தில் புதிதாக வாகனம் வாங்கினாலோ, ஓட்டுனர் உரிமம் பெற்றாலோ ஆர்.டி.ஒ. அலுவலகத்திலிருந்து வாங்கிய அந்த நபருக்குச் செல்லும் கடிதங்களுடன், நரேந்திர மோடியின் பிரத்யேகமான ஒரு கடிதமும் செல்கிறது. கடிதத்தில் மோடி அந்த நபருக்கு வாழ்த்துச் சொல்வதுடன், அவர் சார்ந்த பகுதியின் சூழல் மாசு அளவைக் குறிப்பிட்டு, கூடுமானவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தக் கேட்டுக் கொள்கிறார்.