மா ரணம் : கவிதைக்காரர்கள் வீதி




ஒரு மரணம்
நீண்ட தூரம்
பின்னோக்கிப் பயணிக்க வைக்கிறது.
நினைவடுக்குகளைத்
தட்டித் தட்டி எழுப்பி
புடைக்க வைக்கிறது.
சொல்ல முடியாத பயங்களை
விசும்பலாய் வெளிப்படுத்துகிறது
அதட்டியிருக்கக் கூடாதோ
அன்றைக்கொருநாள்
அலைபேசியில் அழைத்தபோது
அழுகைப் பேச்சை
அலட்சியப்படுத்தியிருக்கக் கூடாதோ
என்று குவியலாய்ப் பெருகி
குற்றவுணர்வு அழுத்துகிறது.
கண்ணைத் திறந்திருந்தால்
யாரைப் பார்க்க நினைத்திருப்பார்
கடைசி நொடிகளில்
எதைச் சொல்ல முயன்றிருப்பார்
என்று யோசிக்க வைக்கிறது.
பழைய நாட்குறிப்புகள் கிடைத்தால்
கையெழுத்தைத் தடவிப் பார்க்கலாம்
நமக்கேதும் குறிப்பிருந்தால் தேடலாமென
மனம் அலைபாய்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் பிறகான
வெறுமைப் பொழுதை நிரப்புகிறது
நாளிதழில் கொடுக்க வேண்டிய
நான்கு வரிச் செய்தியைப் பற்றிய நினைப்பும்
பழுப்பேறிய புகைப்படமொன்றை
புதிதாக்கி சுவற்றில் மாட்டும் முனைப்பும்