முகமரியா மனிதனுக்கான இறுதிப்பாட்டு : அந்தர மனிதர்கள்




அந்த மரண வீடெங்கும் நிசப்தம். உறவுகளின் கண்கள் வற்றிவிட்டன. சாவகாசமாக வந்து பெண்களுக்கு மத்தியில் அமர்கிற லட்சுமி, பெருங்குரல் எடுத்துப் பாடுகிறார்.
‘‘ராஜமகராஜன் கந்தவேல் பெத்தமவன்...
சென்னச் சீமயில சீமானா வாழ்ந்தவனே...
ஊரு நாடெல்லாம் உத்தமன்னு பேரெடுத்த...
கண்ணே மகராசா காணாமப் போயிட்டியேயா...’’
- நெஞ்சில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கிற லட்சுமியின் ஓங்காரக் குரல், அடங்கிக் கிடந்த உறவுகளின் துக்கத்தைக் கீறிவிட, மீண்டும் அந்த வீடு கதறலால் நிறைகிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் லட்சுமி. ‘பாட்டுக்கார லட்சுமி’ என்றால் தமிழகத்தின் வட துருவம், தென் துருவம் எல்லாம் அறியும். சாவு வீடுகளில் ஒப்பாரி வைப்பதே இவரது பிரதான தொழில். எங்கு சாவு நிகழ்ந்தாலும் உறவுகளுக்கு முன்பே லட்சுமிக்கு தகவல் வந்துவிடும். இதுவரைக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்களின் ஆன்மாவைத் தன் குரலால் வழியனுப்பி வைத்திருக்கிறார்.  
‘‘போளூர் தாலுகா மூலக்காட்டுல பெறந்தவ நான். வாழப்போன ஊரு கல்ரப்பாடி. அப்பம் பேரு முனுசாமி. அம்மா ரேணுகாம்பா. எங்க ஊரைச் சுத்தி எங்க பாத்தாலும் ராமாயணமும், மகாபாரதமும்தான் கேட்கும். உழைச்சு, உழைச்சு களைச்சு வார மக்களுக்கு உறக்கமும், உற்சாகமும் தர்றது அந்த கூத்துகதான். நூத்துக்கணக்கான கூத்துக்கலைஞர்கள் எங்க பகுதியில உண்டு. எங்க தாத்தன் பெரிய ஆட்டக்காரன். கூத்துல வேஷம் கட்டி ஆடும். எங்க அப்பனும் சாதாரணமில்லே. அடியக்காரன். தப்பை அடிச்சுக்கிட்டே சாவு வூட்டுல பாடுவாரு. அதனால பாட்டு எனக்கு பொறப்புல வந்துருச்சு’’ என்கிற லட்சுமி பள்ளிக்கூடம் சென்றதில்லை. ஆனால், கர்ணமோட்சம் தொடங்கி, சித்தர் பாடல்கள் வரை நொடி இடைவெளி இல்லாமல் மழையாகப் பொழிகிறார். இவருடைய அங்கமொழி வாய்மொழியை விட உக்கிரம். கடந்து வந்த வாழ்க்கை அதை விடவும் உக்கிரம்.

‘‘எங்க அப்பனுக்கு இன்னொரு பொழப்பும் இருக்கு. வருஷந்தவறாம புள்ளைகள பெத்துக்கறது. எட்டுப் பேரு. நாந்தான் மூத்தவ. எங்க ஊருகள்ல தலைச்சனாப் பெறக்கிற புள்ளைக பள்ளிக்கூடம் போவ முடியாது. ஆத்தாகாரி பெத்துப்போடுற புள்ளகள தூக்கிச் செமக்கணும். எனக்குப் பெறவு பொறந்த எல்லாப் புள்ளைகளையும் தூக்கி வளத்தது நாந்தான்.

வயசுக்கு வர்றதுக்கு மின்னாடியே எம் தாய்மாமனுக்கு என்னைக் கட்டி வச்சுட்டாக. அப்போ 12 வயசிருக்கும். மாமனுக்கு 20. வரிசையா 6 புள்ளைக பெத்தாலும், எனக்கும் எம் வீட்டு மனுஷனுக்கும் எப்பவும் பிரச்னை. வேலை வெட்டிக்குப் போவ மாட்டாரு. சாராயம் காச்சுவாரு. வாங்காத அடியில்லை. தினமும் ரத்தம், காயம், அழுகை...

ஒருக்கா எனக்கும் அவருக்கும் பெரும் பிரச்னை வந்துருச்சு. புள்ளைக எல்லாத்தையும் வச்சுக்கிட்டு என்னைத் துரத்திட்டாரு. அப்போ எங் கடைசி மவ மல்லிகாவுக்கு 4 வயசு. எல்லாப் புள்ளைகளும் கதறுதுவ. புள்ளைக இல்லாம வாழவே பிடிக்கலே. இனிமே இந்த ஈனப்பட்ட உசுரு வேணாம்னு ஒட்டன்தழையை அரைச்சு வச்சுக்கிட்டேன். நமக்காக யாரும் ஒத்தக் காசு செலவு பண்ணக்கூடாதுன்னு, உடம்புக்குப் போர்த்த கோடித்துணியில இருந்து வாயில வச்சுக் கட்ட வெத்தலை வரைக்கும் எல்லாத்தையும் வாங்கி ஒரு மூட்டையா கட்டிக்கிட்டு ஆத்தங்கரைக்குப் போயிட்டேன்.



ஆனா, மனசு ரெண்டு பட்டு நிக்கிது. நம்ம இல்லைன்னா புள்ளைக வாழ்க்கை என்னவாவும்? மனுஷன் ரோட்டுல விட்டுருவானே! கொண்டுபோன எல்லாத்தையும் ஆத்துல வீசிட்டு வீட்டுக்கு வந்தேன். அந்த ஆம்பள முன்னாடி வாழ்ந்து காட்டணும்னு முடிவு செஞ்சேன். பாக்காத வேலையில்லை... கெணத்துக்குள்ள எறங்கி தூரு வாருவேன். காட்டுக்குள்ள போயி வெறகு வெட்டி தலைச்சுமையா யாவாரம் பண்ணுவேன். கழனிக்கு தழை வெட்டப் போவேன். எல்லாத்துக்கும் எனக்குத் துணை இந்தப் பாட்டுதாம். கிடைக்கிற காசை புள்ளைக கையில குடுத்துருவேன். அந்த ஆம்புளை குடிக்கப் பணம் கிடைக்காம செரமப்படுவாரே... அதுக்கும் சேத்துக் குடுப்பேன். அஞ்சோ, பத்தோ நான் எடுத்துக்கிட்டு கூழோ, கஞ்சியோ ஆக்கிக் குடிப்பேன். இப்பிடியேதாங் காலம் ஓடுச்சு.

கோவிந்தன்னு ஒரு மகராசன். ‘ஏம்புள்ள சிரமப்படுறே... மாட்டுக்கறி தாரேன், ஊரு கூவி வித்துத் தாறியா’ன்னு கேட்டாரு. செஞ்சேன். கறிச்சட்டிய தலையில வச்சுக்கிட்டு ஊருபூரா சுத்துவேன். கூடையில இருந்து ரத்தம் வடிஞ்சு உடம்பெல்லாம் நனைக்கும். பாடிக்கிட்டே நடப்பேன். பாக்குறவங்க ஏதோ பைத்தியக்காரி போறாள்னு நினைப்பாங்க. ஆனா, அந்தப் பாட்டுக்குப் பின்னாடி இருக்கிற துயரம் எனக்கு மட்டுந்தான் தெரியும்.

மாதிமங்கலத்துல தனபாக்கியம்னு ஒரு அக்கா. காய்கறி யாவாரி. வாரம் தவறாம கறி வாங்கும். எனக்கு நானூறு ரூவா கடன் தரணும். காசைக் கேட்டப்போ, ‘எல்லா காய்கறியையும் வித்துக் குடு, ஒங்காசைத் தர்றேன்’னு விளையாட்டா சொல்லிச்சு. உடனே, ஒரு பாட்டை எடுத்துவிட்டேன்... ஒரு மணி நேரத்துல எல்லாம் வித்துப்போச்சு. ‘அட, நம்ப குரலுக்கு இந்தா மதிப்பிருக்கா’ன்னு அப்பதான் தெரிஞ்சுச்சு. அந்தக்கா கடை பக்கத்திலயே காய்கறி கடை போட்டேன். நல்லா போச்சி. அடுத்ததா லாரியில காய்கறி ஏத்தி ஏழூரு சந்தைக்கும் ஓட்ட ஆரம்பிச்சுட்டேன். அஞ்சு நிமிஷம் வீட்ல படுத்தோம்னு இல்லாம வேலை. கையில நாலு காசு பொழங்குச்சு. உறவுகள்லாம் வந்து ஒட்டிக்கிச்சு. வூட்டுக்காரும் வந்துட்டாரு. புள்ளைகள படிக்க வச்சேன்.

மாதிமங்கலத்துல ஒரு காய்கறிக்காரு எறந்துட்டாரு. நல்ல மனுஷன். அவரு முகத்தைப் பாத்தவுடனே அழுகை முட்டிக்கிட்டு வந்திருச்சு. கொரலெடுத்து ஒப்பாரி வச்சேன். நான் பேரு சொல்லி அழுவுறதைப் பாத்துட்டு உறவாளிகள்லாம் நூறு, அம்பதுன்னு கொடுக்க ஆரம்பிச்சாக. ஆயிரம் ரூவா சேந்துபோச்சு. அப்பத்தான் யோசனை வந்துச்சு. செத்துப்போற மனுஷனைப் பத்தி நாலு நல்ல சொல்லு சொல்லி அனுப்பி வைக்கிற புண்ணியமும் கிடைக்குது... பணமும் கிடைக்குது. இதையே ஏன் பொழப்பா செய்யக் கூடாது?

கொளக்குடியில ஒரு கருணைக்கிழங்கு யாவாரி சாவுக்குப் போயிருந்தப்போ வாளாவெட்டி பெரியமேளக்காரங்க அடியலுக்கு வந்திருந்தாங்க. என்னோட பாட்டையும், ஆட்டத்தையும் பாத்துட்டு, ‘நாங்க போற எடத்துக்கெல்லாம் வந்திரு தாயி... சம்பளம் தாரோம்’னு கூப்பிட்டாங்க. அவங்க தயவுல அங்கேயே வீடு பாத்துத் தங்கிட்டேன். கிடைச்ச பணத்துல நிலத்தை குத்தகை வாங்கி மொச்சைக்கொட்டை, நெல்லுப்பயிரு வச்சேன். அப்படியே வாழ்க்கை ஓடுது’’ - பாட்டும் கதையுமாக வாழ்க்கையை எடுத்து வைக்கிறார் லட்சுமி.

லட்சுமியின் வார்த்தைகளில் இருக்கும் துயரமும் கண்ணீரும் உறவுகளை உறைய வைக்கிறது. இப்போது 1001 ரூபாய் கூலி வாங்குகிறார். இரவு, பகல் ஒப்பாரியென்றால் 1501. ‘‘முன்னாடி தப்படிக்கவும் போவேன். ஒரு தடவை குச்சி தெறிச்சு ஒரு கண்ணுக்குள்ள எறங்கிருச்சு. பார்வையைக் காப்பாத்த முடியலே. ஒத்தைக்கண்ணுதான் பார்வை. இந்த வயசுக்கு நான் சம்பாதிக்காத காசு இல்லை. ஆனா ஒத்தை பைசா மிச்சம் பண்ண நினைச்சதில்லை. மூணு வேளை சாப்பாடும், உடுத்த துணியும் கிடைச்சா அதுக்கு மேல என்ன வேணும்? ஆறு புள்ளைகளும் நல்ல நிலைமைக்கு வந்திருச்சுக. 16 பேரப்புள்ளைக. எல்லாத்துக்கும் கை நிறைய குடுப்பேன். அண்ணாமலையாரு கோயிலைச் சுத்தி இருக்கிற முடியாத மக்களுக்கு சாப்பாடு வாங்கிப் போடுவேன். முன்ன மாதிரி இப்போ உடம்பு ஒத்துழைக்கலே. புள்ளைகளுக்கும் நான் ஒப்பாரி வைக்கிறது புடிக்கல. இப்போ கொஞ்சம் குறைச்சுக்கிட்டேன். யாராவது விருப்பப்பட்டு கூப்புட்டா போயி அழுவேன்’’ என்கிறார்.
பிறருக்காக அழுகிற லட்சுமி எப்போதேனும் தனக்காக அழுததுண்டா?

‘‘தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க சாவுன்னா என்னையறியாம கண்ணீர் வந்துரும். தெரியாத சாவா இருந்தா, என் வாழ்க்கையை நினைச்சுத்தான் அழுவேன். ‘தலைச்சனா பெறந்து, நல்ல சோத்துக்கு வழியில்லாம வளந்து, வயசுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு குடிகாரனுக்கு வாக்கப்பட்டு, படாத கஷ்டப்பட்டு, உழைச்சு ஊணாப் போயி, அவதிக்கும் அழுகைக்குமே என்னைப் படைச்சிருக்கியே அண்ணாமலையானே’ன்னு நினைப்பேன். கண்ணுல தானா தண்ணி ஊத்தும். ஆனா, எம்பாட்டை நான் சொல்லி அழுறப்போ எல்லாப் பொம்பளைகளும் அவங்க பாட்டை பாடுறதா நினைச்சு அழுவாங்க. பொம்பளன்னாவே இப்படித்தான் போலருக்கு வாழ்க்கை..!’’
-வெ.நீலகண்டன்
படங்கள்: திவாகர்