தீராக்காதல்கள்!





சென்னை ராமாபுரம். பெரிய அபார்ட்மென்டின் இரண்டாவது தளம். ‘‘மணி ஆறாகுது. சமைக்கணும்... துவைக்கணும்... எழுந்து ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்ல! எழுந்திருங்க மாமா... ஆபீஸ்க்கு வேற டயமாகுது’’ - சிணுங்கலாகப் பேசுகிறார் அஜிதா.

‘‘சமைக்கிறது, துவைக்கிறதெல்லாம் பொண்டாட்டி வேலை. டார்ச்சர் பண்ணாம போய் வேலையைப் பாருடி’’ என அலுத்துக்கொண்டு திரும்பிப் படுக்கிறார் ஜெனிபர். மெல்லிய ஊடலோடு புலர்கிறது அந்த தம்பதிகளின் பொழுது. 

வெளியுலகைப் பொறுத்தவரை அஜிதாவும், ஜெனிபரும் இணைபிரியாத தோழிகள். பணி நிமித்தமாக இருவரும் ஒரு அறையில் தங்கியிருக்கிறார்கள். நிஜத்தில் 13 ஆண்டு காலமாக இணைந்து வாழும் மனமொத்த தம்பதிகள். இருவர் விரல்களையும் அலங்கரிக்கும் திருமண மோதிரமே அதற்கு சாட்சி.

ஜெனிபர் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அஜிதா இல்லத்தரசி. மற்றவர்கள் எதிரில் ஜெனிபரை ‘‘வாங்க... போங்க’’ என விளிக்கும் அஜிதா, இல்லத்துக்குள் ‘‘மாமா’’ என்றே அன்பொழுக அழைக்கிறார்.

‘‘கோட்டயம்தான் எங்க சொந்த ஊர். ஒரு தேயிலை எஸ்டேட்ல குடியிருந்தோம். அப்பா குடி அடிமை. ஒரு தம்பி, ஒரு தங்கை. விரல்தேய தேயிலை கிள்ளித்தான் அம்மா எங்களை வளத்தா. அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசையும் அப்பா அடிச்சுப் புடிங்கிட்டுப் போய் குடிப்பார். அடி, அழுகை, காயம், ரத்தம்... வீட்ல இருக்கவே பிடிக்காது. குறிப்பா அப்பா மேல பயங்கர வெறுப்பு. ஆண்களைப் பாத்தாவே அப்பா முகம்தான் தெரியும். 6வது படிக்கும்போது அஜிதா எனக்கு அறிமுகமானா. எங்க வீட்டில இருந்து பத்து வீடு தள்ளி அவ வீடு. அவளுக்கு அம்மா கிடையாது. அப்பா, ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். அஜிதாவை அந்த சித்தி வஞ்சம் வச்சு கொடுமைப்படுத்துனா. அவள விட இவ கொஞ்சம் கலரு... அதனால!

ரெண்டு பேருக்குமே உண்மையான அன்பு தேவையா இருந்துச்சு. ஆதரவா தோள்ல சாஞ்சி அழ, மனம்விட்டுப் பேச, ஆறுதல் சொல்ல... அப்படித்தான் எங்க நட்பு தொடங்குச்சு. ரெண்டு பேரும் நடந்து போனா, ‘புருஷன் - பொண்டாட்டி மாதிரி வருதுக பாரு’ன்னு கேலி பேசுவாங்க. எனக்கு சந்தோஷமா இருக்கும்.

18 வயசு வரைக்கும் அப்படியே வளர்ந்தோம். என் பிறந்தநாள் அன்னிக்கு அஜிதா ஒரு கிப்ட் கொடுத்தா... அதுக்குள்ள ஒரு கடிதம் இருந்துச்சு. ‘என் உயிரான உயிருக்கு... என் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அக்கா, தங்கை மட்டுமல்ல... என் கணவரும் நீதான்’னு எழுதியிருந்தா. எனக்கு வானத்துல பறக்குற மாதிரி தோணுச்சு. ரெண்டுபேருக்கும் இடையில இருந்த ஏதோவொரு தடை அகன்ற மாதிரி இருந்துச்சு.

எனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க. நான் சம்மதிக்கலே. மீறி கல்யாணம் பண்ணி வச்சா தற்கொலை பண்ணிக்குவேன்னு சொல்லிட்டேன். அஜிதாவும் ‘நீ இல்லாம என்னால வாழ முடியாது.. நானும் செத்துடுவேன்’னு சொன்னா. ஒருநாள் நானும் அஜிதாவும் ஒண்ணாயிருந்ததை பாத்து அதிர்ந்துபோன அம்மா, மறுநாளே மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வரச் சொல்லிடுச்சு. ‘தற்கொலை பண்ணிக்கலாம்... இல்லைன்னா எங்காவது ஓடிப்போயிடலாம்’னு அஜிதா கூப்பிட்டா.



‘ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுவரைக்கும் சென்னையில போய் வேலை செய்யிறேன்’னு அம்மாகிட்ட சொல்லிட்டு சென்னை வந்துட்டேன். அதுக்கு முன்னாடியே அஜிதாவை சென்னைக்கு அனுப்பி என் ஃபிரண்ட் ரூம்ல தங்க வச்சிட்டேன். தாம்பரத்துல ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலை கிடைச்சுச்சு. பூந்தமல்லியில ஒரு வீடு எடுத்து தங்குனோம். தோழிகள் முன்னிலையில மோதிரம் மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பதிமூணு வருஷமாச்சு. உறவுக்காரங்கல்லாம் ஓரளவுக்கு ஒத்து வந்துட்டாங்க. எங்க அம்மாவும் எங்க வீட்டுக்கு வர்றதுண்டு. அஜிதா வீட்டுல மட்டும் கோபம் தணியல.

இதுவரைக்கும் சின்ன சண்டை கூட எங்களுக்குள்ள வந்ததில்லை. நிம்மதியா இருக்கோம். போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன். ஒரே மனக்குறை... அள்ளிக் கொஞ்ச ஒரு குழந்தையில்லை. இப்ப தத்தெடுக்கலாம்னு யோசிக்கிறோம்’’ என்கிறார் ஜெனிபர்.

‘‘காபி எடுத்துக்குங்க மாமா’’ என்று லேசான வெட்கத்தோடு ஜெனிபரிடம் கோப்பையை நீட்டுகிறார் அஜிதா.
சென்னை, பரங்கிமலையை ஒட்டியுள்ள பட் ரோடு. தனித்திருக்கிற சிறிய குடிசை வீடு. 

‘‘கொஞ்ச நாளா உன் போக்கே சரியில்லை... யாரைப் பாத்தாலும் வழிஞ்சு வழிஞ்சு பேசுறே... அடக்கம், ஒடுக்கமா இருக்கப் பழகு...’’ - கிருஷ்ணாவின் குரலில் அனல்.
‘‘நீ மட்டும் ஒழுங்கா? சமையல் வேலைக்குப் போயி அனல்ல வெந்து சம்பாதிச்சுக் கொட்டுறேன்... தெனமும் வேலைக்குப் போறதா சொல்லிட்டு எங்கேயோ போற. செலவுக்கு அஞ்சு பைசா கொடுக்கிறதில்லை’’ - பதிலுக்கு ஆவேசம் காட்டுகிறார் ரவி.

கிருஷ்ணாவும், ரவியும் காதல் தம்பதி. ரவியை ‘‘அனுஷ்கா’’ என்று அன்பாக அழைக்கிறார் கிருஷ்ணா. தாடி, மீசை என கம்பீர ஆணாகத் தெரிகிற ரவியின் உடல்மொழியில் பெண்மையின் நளினம். திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிறது. கிருஷ்ணா கட்டிய தாலி, மஞ்சள் மணக்க ரவியின் கழுத்தை நிறைக்கிறது.

‘‘திருவண்ணாமலையில பெறந்தேன். கூடப் பெறந்தவங்க 8 பேரு. உடம்புல ஆணா இருந்தாலும் வீடு, வாசல் பெருக்கிறது, கோலம் போடுறதுன்னு விபரம் தெரிஞ்சதுல இருந்தே மனசுக்குள்ள பெண்ணாதான் வளந்தேன். அஞ்சாவதுக்கு மேல பள்ளிக்கூடம் போக முடியலே. வீட்லயும் இருக்க முடியலே. அடி, உதை... ஏதோ ஒரு தைரியத்துல சென்னை வந்துட்டேன். ஒரு சமையல் மேஸ்திரிகிட்ட உதவியாளரா சேந்தேன். கண்ணுல மை தடவி, சவுரி முடி வச்சு பொண்ணு மாதிரியே வேலைக்குப் போவேன். மெரினா பீச்ல நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சமையலுக்குப் போனப்ப தான் இவுகளைப் பாத்தேன். முதல் பார்வையிலயே புடிச்சுப் போச்சு. வலிய, வலியப் போய் பேசுனேன். மனுஷன் கண்டுக்கவே இல்லை. மூணு மாசம் பின்னாடியே அலைஞ்சேன். அதுக்குப் பிறகுதான் மனம் இறங்குனாரு. கடிதம் மூலமாவும், போன் மூலமாவும் எங்க காதல் வளந்துச்சு. ஒருநாள் நாங்க ரெண்டுபேரும் தனியா இருந்ததை அவரோட அம்மா பாத்துட்டாங்க. பெரிய பிரச்னையாயிடுச்சு. அவரோட அண்ணன், தம்பிகள்லாம் வந்து அவரை அடிச்சிட்டாங்க.

‘ஆண்கள் முன்னேற்ற சங்கத்’ தலைவர் வாசு அண்ணாவைப் பாத்தேன். அவரு பையன் வீட்ல போய் பேசினார். அவங்க சம்மதிக்கல. ரெண்டு பேரையும் நேரா திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் மக்கள் முன்னிலையில எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சார். இவர் தாலி கட்டிய பிறகு தான் எனக்கு உசுரே வந்துச்சு...’’ என்கிறார் ரவி என்கிற அனுஷ்கா.

இப்போது இருவரும் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். ‘அனுஷ்கா’ சமையல் மேஸ்திரி ஆகிவிட்டார். குடும்பச் சுமையும் ‘அனுஷ்கா’ தலைமையில்தான். கிருஷ்ணாவுக்கு வேலையில்லை... கிருஷ்ணாவின் அம்மா அவ்வப்போது வந்து மகனைப் பார்த்துச் செல்கிறார்.

‘‘என்னதான் மனம் கோணாம குடும்பம் நடத்தினாலும் என்னால என் வீட்டுக்காரருக்கு ஒரு வாரிசைப் பெத்துக் கொடுக்க முடியாது. அதனால ‘வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க’ன்னு சொல்றேன். ‘உன்னைத் தவிர வேற யாரையும் மனைவியா கற்பனை கூட செய்ய முடியாது’ங்கிறார். இப்படி ஒரு புருஷன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்...’’ என்றபடி தழையத் தழைய தவழ்கிற தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்கிறார் அனுஷ்கா.

ஜன்னலுக்கு வெளியே, வெட்கத்தில் முகம் மறைக்க நேரம் பார்க்கிறது மாலைச் சூரியன். அட, அசப்பில் அது நிலாவாகவே தெரிகிறதே!
- வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்