வேலைக்குப் போகாதீர்கள்!





‘‘நீங்கள் நேசிக்கும் ஒரு வேலையைத் தேர்ந்தெடுங்கள். அப்புறம் வாழ்க்கையில் ஒருநாள்கூட நீங்கள் வேலை பார்க்க வேண்டியிருக்காது!’’
- கன்ஃபூஷியஸ்

உங்களது தெருவில் உள்ளவர்களின் பட்டியல், அல்லது உங்களுக்குத் தெரிந்த... உங்களது உடனடி நினைவில் இருக்கிறவர்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்யுங்கள். குறைந்தது இருபது பேர் அந்தப் பட்டியலில் இருக்கட்டும். அவர்களின் பெயர்கள் நமக்கு முக்கியமில்லை. அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுங்கள்.

இப்போது பாருங்கள்... அந்தப் பட்டியலில் எத்தனை பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறவர்கள், அரசு அலுவலர்கள், தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள், ஜவுளிக்கடையில் வேலை செய்பவர்கள், ரைஸ் மில் முதல் ஐஸ் கம்பெனி வரை உள்ள நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வங்கிகளில் பணிபுரிகிறவர்கள், சொந்தத் தொழில் செய்பவர்கள், அச்சகங்களில் வேலை பார்ப்பவர்கள்...
இந்தப் பட்டியலை இப்போது இரண்டாகப் பிரியுங்கள். இன்னொருவரின் கீழ் வேலை பார்ப்பவர்/ சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருப்பவர்.

எனது பட்டியலின்படி, இருபது பேரில் ஒருவர் சுயமாய் தொழில் செய்கிறார். சராசரியாக நூற்றுக்கு 5 பேர். இந்த எண்ணிக்கை தவறு / கூடுதல் / குறைவு என்று வாதிடுபவர்கள் கூட, ‘நம்மில் பெரும்பாலானவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவதில்லை’ என்ற உண்மையை ஒப்புக்கொள்வர்.

எனவே, நம்மில் அநேகம் பேர் வாழ்வை நகர்த்திச் செல்ல பணியிடச் சூழலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதுதான் நடைமுறை உண்மை. நண்பர்களே, கவனியுங்கள்! இங்கே வேண்டுமென்றேதான் பணி இடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறேன். அலுவலகம் என்ற வார்த்தையைத் திட்டமிட்டே தவிர்த்திருக்கிறேன். காரணம், அலுவலகம் என்ற சொல் அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஐ.டி கம்பெனிகள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவற்றை மட்டுமே குறிக்கிற சொல்லாக இருக்கிறது. மாறாக பணி இடம் என்பதோ, மனிதர்கள் எங்கெங்கு, என்னென்ன வேலை பார்க்கிறார்களோ - அந்த இடங்களைக் குறிக்கும் ஒரு பரந்துபட்ட சொல். அலுவலகத்தையும் உள்ளடக்கிய சொல். எனவே, பணி இடம்  (கீஷீக்ஷீளீவீஸீரீ ஷிஜீஷீt)  என்ற சொல்லே பணி செய்பவர்களுக்குப் பொருத்தமானது.

வெல்டிங் பட்டறையோ, பல்பொருள் அங்காடியோ, செல்போன் விற்கிற கடையோ... பணி இடம் என்பது ஒன்றே. பன் தயாரிக்கும் கம்பெனியோ, பன்னாட்டுக் கம்பெனியோ... பணி இடம் என்பது பணி இடமே. எனவே, சிறிய கூலியோ, பெரிய ஊதியமோ... அதைப் பெற்றுத் தரும் பணிச் சூழலும் ஏறக்குறைய ஒன்றே. காரணம், பணி இடம் என்பது மனிதர்களாலும், மனித உணர்வுகளாலும் நிரம்பி இருக்கிறது - எல்லா இடங்களிலும்.

ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான படிப்புகள் இருக்கின்றன. அல்லது அனுபவத்தின் மூலமும் நீங்கள் அவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ‘வேலை செய்கிற இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்னென்ன பிரச்னைகள் அங்கு வரும், அவற்றை எப்படி எதிர்கொள்வது’ என்பதை உங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். பணிகளும், பணிச் சுமைகளும் வெகு தீவிரமாக மாறிவரும் இக்காலகட்டத்தில், இது போன்ற விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்வது உங்களது பயணத்தை மரங்கள் நிறைந்த சாலைக்குக் கொண்டு செல்லும். உங்களது சாலை குளுமையாக இருந்தால், பயணமும் இனிமையாகத்தானே இருக்கும்?



எனவே, இது அந்த 95 சதவீதத்திற்கான - கார் ஷோ ரூமிலிருந்து ஷேர் கம்பெனி வரை, அரசு அலுவலகம் முதல் அரிசிக்கடை வரை, ஆடிட்டர் அலுவலகத்திலிருந்து ஆடித் தள்ளுபடியில் ஜவுளி விற்கிற கடைகள் வரை - அனைத்திலும் பணிபுரிகிற நண்பர்களுக்கான தொடர். அதே நேரத்தில், மீதி 5 சதவீதத்தினரும் கூட இதைப் படிக்கலாம்.
முதலாளி என்றால் யார்? நிறுவனத்தின் முதல் தொழிலாளியே முதலாளி என அழைக்கப்படுகிறார். எனவே, அந்த நீதியில் அவர்களுக்கும், ‘தங்களின் கீழ் பணி செய்பவர்கள் எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள், அவற்றை எப்படி சரி செய்யலாம்’ என்பதைத்தெரிந்துகொள்ள இந்த சின்ன சின்னக் கட்டுரைகள் உதவும். மேலும், இப்போது படித்து முடித்து விட்டு வேலைக்குச் செல்ல தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் இத்தொடர் உதவும்.

ஔவையார் இன்றிருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார். ‘‘ஔவையே, உலகில் நல்லது என்ன?’’
‘‘அடுத்தவரின் அனுபவத்திலிருந்து பாடம் கற்பதை விடவும் அட்வான்டேஜ் எதுவும் உண்டோ?’’
அதிகாலையில் செய்தித்தாளில் கண்விழிக்கும்போது நாம் கடந்து போகிற சில செய்திகள் இப்படியானவையாக இருக்கக்கூடும்...

*  ஐ.டி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து, அதனால் அவர்களுக்கு இளம் வயதிலேயே பலவிதமான நோய்கள் வந்து விடுகின்றன
*  லீவ் தர மறுத்த மேலதிகாரியை சுட்ட ஊழியர் கைது
*  வேலைக்குச் செல்லாததை மனைவி கண்டித்ததால் வெறுப்படைந்த கணவன் தற்கொலை
- இது போன்ற செய்திகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் பிரச்னைகளைச் சரிவர கையாளத் தெரியாததும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நண்பர்களே... நினைவில் கொள்ளுங்கள். வேலை என்பது எளிதானதல்ல... நீங்கள் எளிதாக்கிக் கொள்ளும் வரையில். இந்த வித்தை வசப்படாதவரை வேலை என்பது நீங்கள் நினைப்பதை விடவும் சிரமமாகத்தான் இருக்கும். உதாரணமாக, எதை உங்கள் பணி நேரம் என்று நினைக்கிறீர்கள்? பொதுவாக 10 முதல் 6, காலை 8.30 முதல் மாலை 4.30, பகல் 2 முதல் இரவு 10... இதில் எதுவாக இருந்தாலும், அதுஉண்மையல்ல.

நீங்கள் தூங்கி எழுந்ததும், ‘இன்று என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும்? அவற்றை எப்படிச் செய்ய வேண்டும்’ என்றெல்லாம் யோசிக்கும்போதே, உங்களது பணி நேரம் துவங்கிவிடுகிறது. கூடவே, அது சார்ந்த பிரச்னைகளும், அழுத்தமும் உங்கள் வீட்டிலிருந்தே துவங்கி விடுகிறது.

ஆக... எப்படிப் பார்த்தாலும், பணி இடத்தில் நாம் பணிபுரிகிற நேரம் - பொதுவாக எட்டு மணி நேரம் என்பது உண்மையல்ல. ஒரு நாளில், அநேகமாக நாம் தூங்குகிற நேரம் தவிர (கனவுகளில் பணிச்சுமைகள் வராது என்று நம்புவோம்!) மற்ற எல்லா நேரத்தையும் நமது பணி இடம் பிடுங்கிக் கொள்கிறது.
எனவே, ‘‘நான் வேலைக்குப் போகிறேன்’’, ‘‘கம்பெனிக்குப் போகிறேன்’’, ‘‘ஆபீஸிற்குப் போகிறேன்’’, ‘‘ஃபேக்டரிக்குப் போகிறேன்...’’ என்ற சொற்களில் வேறு சில விஷயங்களும் அடங்கியுள்ளன. பணி இடத்திற்குச் செல்வதற்கு நம்மைத் தயார் செய்வதில் துவங்கி, பயணித்து, உடன் பணிபுரிகிறவர்கள், வாடிக்கையாளர்கள், நமக்கு மேலே வேலை செய்கிறவர்கள், கீழே வேலை செய்கிறவர்கள் என்று பலரோடும் பழகி, அதனால் ஏற்படும் இனிய, கசப்பான பாதிப்புகளோடு வீடு திரும்பி - மறுநாள் என்ன வேலை செய்யலாம் எனத் திட்டமிட்டு கண்ணயர்வது வரை எல்லா விஷயங்களும் நமது பணி நேரத்துள் அடக்கம்.

ஆக, வீட்டில் இருக்கும்போதே பணி இடத்தில் மானசீகமாய் இருந்து விட்டு, ‘‘என் பணி நேரம் எட்டு மணி நேரம்தான்... மற்ற நேரம் நான் ஃப்ரீ’’ என்று சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

வீட்டிலேயே பணிசார்ந்த நினைப்புகளும், அது சார்ந்த டென்ஷன்களும் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வந்தே தீரும் என்பதைப்புரிந்துகொண்டால் உங்களின் எல்லா வாழ்க்கைகளும் எளிதாகி விடும்.
என்ன, அப்படியானால் நிறைய வாழ்க்கைகள் இருக்கிறதா?
(வேலை வரும்...)