அவர்கள் எளிய மனிதர்கள்!





உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், தற்காலிகமாகத் தப்பியிருக்கிறது வீரப்பன் கூட்டாளிகள் என கருதப்படும் பிலவேந்திரன், மீசை மாதையன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நான்கு பேரின் உயிர். 1993, ஏப்ரல் 9ம் தேதி வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, பாலாறு என்ற இடத்தில் நடந்த கண்ணி வெடி தாக்குதலில், அதிரடிப்படை போலீசார், வனத்துறையினர் என 22 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த 4 பேருக்கு மட்டும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கிலிடும் நடவடிக்கைகள் துரிதமாயின. இச்சூழலில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தடை தற்காலிகமாக இவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அதிரடிப்படை நிகழ்த்திய அத்துமீறல்களை வெளியில் கொண்டு வந்தவரும், வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டவர்களை சட்டப்போராட்டம் நடத்தி மீட்டவருமான மக்கள் கண்காணிப்பக செயல் இயக்குனர் ஹென்றி டிபேனிடம் இதுபற்றிக் கேட்டோம்.

‘‘நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பதோ, இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்று சொல்வதோ சரியாக இருக்காது. ஆனால், இந்த வழக்கின் புறச்சூழலைப் பார்க்கும்போது பல கேள்விகள் எழுகிறது. 235 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தடா சட்டத்தின் கீழ் விசாரித்தார்கள். தமிழ்நாட்டில் தடா நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் கர்நாடகாவில் தடாவின் கீழ்தான் விசாரணை நடந்தது. விசாரணை முடிவதற்குள்ளாக 65க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டார்கள். 45க்கும் மேற்பட்டோர் பற்றி தகவலே இல்லை. இறுதியில் 21 பெண்கள் உள்பட 121 பேர் மீது வழக்கு இறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணையும் 8 ஆண்டுகள் நீண்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாழ்க்கையே நிலைகுலைந்து போனது.  

இவர்களின் வாழ்வுரிமை மீறப்படுவதாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் 40 ரிட் பெட்டிஷன்களை போட்டோம். அப்போது அரசு தரப்பில், Ôஇவர்கள் சீரியஸான தீவிரவாதிகள். இவர்களை சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. அதனால் புது கட்டிடங்களை கட்டித் தருமாறு பொதுப்பணித்துறையிடம் கேட்டிருக்கிறோம். அவர்கள் கட்டித்தந்த பிறகு விசாரணையைத் தொடங்குவோம்Õ என்றார்கள். கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, உடனடியாக விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டார். Ô108 பேரிடம் வாங்கப்பட்ட வாக்குமூலத்தில் நம்பகத்தன்மை இல்லைÕ என்று நீதிமன்றம் நிராகரித்தது. குற்றவாளிகளை சாட்சிகள் அடையாளம் காட்டியபோது, தற்போது தூக்கு தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் 4 பேர் உள்பட 10 பேர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். அனைவரும் அவர்களையே கை காட்டினார்கள். அந்த 10 பேர் தவிர மீதமிருந்த 111 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். 10ல் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  

மேல்முறையீடு செய்தோம். உச்ச நீதிமன்றம் 3 பேரின் தண்டனையை ரத்து செய்துவிட்டு, இந்த நால்வரின் ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றியது.
108 பேரிடம் எப்படி வாக்குமூலங்கள் பெறப்பட்டனவோ, அப்படித்தான் மற்ற 10பேரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. 108 பேரின் வாக்குமூலத்தை நிராகரித்த நீதிமன்றம், மற்ற 10 பேரின் வாக்குமூலங்களை ஏற்றுக்கொண்டு விட்டது. சாட்சிகள் அடையாளம் காட்டும்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்ததுதான் இவர்களின் தவறோ? ஒருவேளை எந்த 10 பேர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தாலும் அவர்கள்தான் குற்றவாளிகளாகி இருப்பார்களோ! தூக்குதண்டனைக்கு உள்ளாகியிருக்கும் நால்வரும் மிக எளிய மனிதர்கள். ஞானப்பிரகாசம் ஒரு தேவாலயத்தில் உதவியாளராக இருந்தவர். விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக ஃபாதரிடம் சொல்லிவிட்டு, சர்ச்சில் இருந்து அதிரடிப்படையினர் அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, ‘காட்டில் வீரப்பனின் கூட்டாளி பிடிபட்டதாக’ பத்திரிகைகளுக்கு ஞானப்பிரகாசத்தின் போட்டோவைக் கொடுத்திருக்கிறார்கள்.

கடந்த 13ம் தேதி கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த உடனே, அப்சல் குரு, கசாப்பை தூக்கிலிட்டதைப் போல சத்தமில்லாமல் செய்ய நினைத்தார்கள். நாங்கள் உடனடியாக பத்திரிகையாளர்களுக்கு செய்தியைக் கொண்டு சென்றுவிட்டோம். அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது நீதிமன்றம் விதித்துள்ள தடையால் சற்று நம்பிக்கை கிடைத்திருக்கிறது’’ என்கிறார் ஹென்றி டிபேன்.
நூறு குற்றவாளிகள் தப்பி னாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான் நம் சட்டத்தின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கம் குலைந்துவிடக் கூடாது என்பதே நமது கவலை.
- வெ.நீலகண்டன்