மலட்டுத்தன்மை





மலட்டுத்தன்மை என்பது, கர்ப்பமுறுவதற்கு ஆணோ பெண்ணோ உடல்ரீதியாக பங்களிக்க இயலாத நிலைமையைக் குறிப்பது. ஆங்கிலத்தில் இதை Infertility என்பர். இந்நிலை தற்காலிகமானது; சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக் கூடியது. நிரந்தரமாக கர்ப்பம் அடையவியலா நிலையை Sterility என்பர். மலட்டுத்தன்மைக்கும் ஆண்மைக்குறைவு / பெண்மைக்குறைவுக்கும் (Impotency) எவ்விதத் தொடர்புமில்லை. கலவியிலேயே ஈடுபட இயலா நிலை அது. இது கலவி கொண்டும் கர்ப்பம் தரிக்க இயலா நிலை.

‘ஒரு ஜோடி எந்தக் கருத்தடை முறைகளையும் பயன்படுத்தாமல், தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு கலவியில் ஈடுபட்டும் கர்ப்பமடையாத நிலையே மலட்டுத்தன்மை’ என உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. அமெரிக்காவில் இதையே 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒரு வருடம், அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆறு மாதங்கள் என கெடு நிர்ணயித்துள்ளனர். அதுவரை குழந்தையே இல்லாத நிலை முதல்நிலை மலட்டுத்தன்மை (Primary Infertility); ஏற்கனவே குழந்தை இருந்து தற்போது கர்ப்பமுறா நிலை இரண்டாம் நிலை மலட்டுத்தன்மை (Secondary Infertility).

  சர்க்கரை நோய், நாளமில்லாச் சுரப்பிகளில் பிரச்னைகள், மரபணுச் சிக்கல்கள், குடி, புகைப்பழக்கம், சுற்றுச்சூழல் கேடுகள், கருப்பை, ஃபெல்லோப்பியன் குழாய் உள்ளிட்ட பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்னைகள், விந்தணுக்களில் குறைபாடுகள், உடல் பருமன் போன்றவை மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்.

பண்டைய எகிப்தில் ஆண்களுக்குச் சமமாக பெண்கள் நடத்தப்பட்டனர். அதனால் பெண் கர்ப்பமடையாதது ஒரு குறையாகக் கருதப் படாமல், சிகிச்சை தேவைப்படும் நோயாகவே பாவிக்கப்பட்டது. கி.மு 1900ல் எழுதப்பட்ட கர்ப்பப் பிரச்னைகள் குறித்த எகிப்திய ஆவணங்கள் பெண் இனப்பெருக்கப் பாதை குறித்துப் பேசுகின்றன. ஆண் மலட்டுத்தன்மை கூட இந்த மருத்துவ ஆவணங்களில் பேசப்பட்டிருக்கிறது.

அப்போது மாந்திரீகத்தின் ஒரு பகுதியாகவே மருத்துவம் கருதப்பட்டதால், நோய்களுக்குக் காரணமான சேக்மத் என்ற பெண் கடவுளைத் திருப்திப்படுத்துவதன் மூலம் குழந்தைப் பிறப்பைத் தூண்டலாம் என நம்பினர். குழந்தையற்ற பெண்களுக்கென நெஃப்திஸ் என்ற ஒரு தனிப் பெண் கடவுள் இருந்தார். அந்த நெஃப்திஸுக்கும் குழந்தைகள் இல்லை.
பண்டைய எகிப்தியர்கள் மலட்டுத்தன்மையைக் கண்டறிய விரிவான பரிசோதனைகளைச் செய்தனர். ஆனால் மலட்டுத்தன்மை மருத்துவங்கள் குறைந்த வெற்றி வாய்ப்பையே கொண்டிருந்தன.

பைபிளில் மலட்டுத்தன்மை பற்றிய குறிப்புகள் வருகின்றன. தேவன் ஆதாமையும் ஏவாளையும் நோக்கி, ‘‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி’’ என்று ஆசீர்வதிப்பதாக பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்தில் வருகிறது (அதிகாரம் 1, வசனம் 28). குழந்தை பிறப்பை கடவுளின் பரிசாகச் சொல்கிறது பைபிள். ‘‘கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்’’ என்றே ஏவாள் ஆதியாகமத்தில் சொல்கிறாள் (அதிகாரம் 4, வசனம் 1).

ஆதியாகமத்தில் நீண்ட காத்திருப்புக்குப் பின் பிள்ளை பெறும் ராகேல் ‘‘தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார்’’ என்று சொல்கிறாள் (அதிகாரம் 30, வசனம் 23). அதாவது, குழந்தை இல்லாமல் இருப்பது ஒருவிதக் குற்றம் அல்லது குறை என்றே கருதப்பட்டிருக்கிறது. இன்றும் உலகம் முழுக்க இதே நிலைதான்.

பண்டைய கிரேக்கத்தில் மலட்டுத்தன்மை குறித்த புரிதல் இருந்திருக்கிறது. பொதுவாய் மந்திர தந்திரங்களை நம்பியிருந்த மலட்டுத்தன்மை சிகிச்சை, ஹிப்போக்ரேடஸ் வருகைக்குப் பின் தர்க்கரீதியான மருத்துவ முறையாக மாறியது. பெண்களின் மலட்டுத்தன்மை ஒரு நோயாகக் கருதப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஹிப்போக்ரேடஸ் இதற்கெனப் பல வழிகள் கையாண்டார். கருப்பைவாய் மிக இறுக்கமாக மூடிக் கொண்டால், சிவப்பு நைட்ரேட், சீரகப் பசை மற்றும் தேனைக் கலந்து பிறப்புறுப்புக்குள் செலுத்தி துளையை அகண்டதாக்கினார். ஈயத்தாலான அறுவைக் கருவி ஒன்றைப் பயன்படுத்தி பிறப்புறுப்புக்குள் மென்மையாக்கும் வஸ்துக்களை ஊற்றி சிகிச்சையளித்தார்.

பண்டைய ரோமானிய காலகட்டத்திலும் மலட்டுத்தன்மை என்பது கடவுள் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. மார்ஸ் கடவுளுக்கான விருந்து நிகழ்வில் சாமியார்கள் மலட்டுத்தன்மை கொண்ட பெண்களின் வயிற்றில் கசையடி கொடுத்தபடி நகரத்தைச் சுற்றி ஓடி வருவர். மாதவிலக்கிற்கு முன்பு கருப்பை அதிக பாரத்தால் நிரம்பி விடுவதால், அது முடிந்த பிறகுதான் கரு உண்டாகும் என நம்பினர். ரோமானிய ராஜ்ஜியத்தில் குறுகிய அளவிலேயே மலட்டுத்தன்மை குறித்த மருத்துவ அறிவு இருந்தது.

சில பண்டைய கலாசாரங்களில் கரு உண்டாகாத மனைவியை அவளது கணவன் தூக்கிலிட்டுக் கொல்வதற்கு அனுமதி இருந்தது. இங்கிலாந்தில் ரீஜென்ஸி காலகட்டத்தில் (1811 - 1820) வாரிசு உருவாக்காத பெண்களுடனான திருமணத்தை ரத்து செய்து, அவளைத் தள்ளி வைக்க ஆண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கி.பி 220ல் பதிப்பிக்கப்பட்ட Shang Han Lun என்ற உலகின் பழமையான சீன மருத்துவப் பாடநூல், அக்குபஞ்சர் மூலம் மலட்டுத்தன்மையை குணமாக்கலாம் என்கிறது.
பைஸன்டைன் பேரரசு காலத்தில், மலட்டுத்தன்மை சிகிச்சையில் சற்று முன்னேற்றம் இருந்தது. மத்திய காலத்தில் குழந்தைப்பேறு என்பது மனித இனத்தைத் தொடரச் செய்ய முக்கியமான தேவையாகக் கருதப்பட்டது. கலவி செய்யும் ஜோடியின் நோக்கம் குழந்தைப் பிறப்பாக இல்லை என்றால் மலட்டுத்தன்மை ஏற்படும் என நம்பினர். பாவங்கள் செய்வது, துணையைச் சந்தேகிப்பது, இறைவனைத் தூற்றுவது போன்ற காரணங்களாலும் மலட்டுத்தன்மை ஏற்படலாம் என நினைத்தனர். மலடு என்பதைக் காண்பித்து திருமணத்தை ரத்து செய்ய முடியாது. மலட்டுத்தன்மை என்பது மத்திய காலகட்டத்தில் பயமுறுத்தும் ஒரு விஷயமாகவே இருந்தது.

1553ல் எட்டாம் ஹென்றியின் மகளான மேரி, ‘ஒரு பெண் ஆட்சிக்கு வரலாகாது’ என்ற கடுமையான எதிர்ப்புகளை மீறி இங்கிலாந்தின் அரசி ஆனார். அவருக்கு ஒரு குழந்தை பெற்று அதனை தன் பதவிக்குப் பாதுகாவலாக வைப்பது நோக்கம். ஆனால் ஆண்டுகள் பல கழிந்தும் அவருக்குப் பிள்ளைப்பேறு உண்டாகவில்லை. ஒரு முறை எடை அதிகரித்து, மாதவிடாய் நின்று, மசக்கை ஏற்பட்ட போதிலும் குழந்தை மட்டும் உருவாகவில்லை. இறுதிவரை மலடாக இருந்து மறைந்தார்.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் லியோனார்டா டாவின்ஸி உள்ளிட்டோர் பங்களிப்பின் காரணமாக பெண்ணுடல் பற்றிய புதிர்களுக்கும், மலட்டுத்தன்மை குறித்த சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தன. 1672ல் அரிஸ்டாட்டிலின் சித்தாந்தங்களை ஒட்டி, டி க்ராஃப் என்பவர் கருமுட்டையைக் கண்டுபிடித்தார். 1752ல் ஸ்மெல்லி என்பவர் முதன்முதலில் மலட்டுத்தன்மை குறித்து மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் ஆராய்ச்சி நடத்தினார். ஆனால், அப்போதும் மலட்டுத்தன்மை என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது என்று நம்பப்பட்டது. ஆண்கள் மலட்டுத்தன்மைக்கு குற்றம் சாட்டப்படுவது மிக அரிதாகவே நிகழ்ந்தது.

1600களில் கருவுறுதல் என்பது கலவியின்போது ஆணும் பெண்ணும் வெளியிடும் விதைகள் கலப்பதால் நிகழ்வதாகக் கருதப்பட்டது. 1700களில் கரு உண்டாவதில் முக்கியப் பங்கு வகிப்பது கருமுட்டையா விந்தணுவா எனக் குழப்பம் நிலவியது. பெண்கள் கலவியின்போது மகிழ்ச்சிகரமாக இருந்தால்தான் கருப்பை பரவச நிலையை அடைந்து கரு உண்டாகும் எனக் கருதினர். 1797ல் பென்சில்வேனியா பல்கலைக்கழக மாணவர் ஜேம்ஸ் வாக்கர், ‘‘மலட்டுத்தன்மையைக் கண்டுபிடிக்கும், சிகிச்சையளிக்கும் பணியை தாதிகளிடமிருந்து மருத்துவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என அறிவித்தார். விர்ஜினியன் ஆராய்ச்சித் தொகுதி, ‘‘மலட்டுத்தன்மை ஒரு நோய், அதற்கு மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்’’ என்றது.

1880களில் மலட்டுத்தன்மை கொண்ட பெண்ணுக்கு கருப்பை வாயில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அறுவை சிகிச்சை சிபாரிசு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் மரியான் சிம்ஸ் என்ற மருத்துவர், அடிமைப் பெண்களை வைத்து மலட்டுத்தன்மை குறித்த பரிசோதனைகளை நிகழ்த்தினார். இவர்   On the Treatment of VesicoVaginal Fistul என்ற குழந்தைப்பேறு நூலை 1852ல் எழுதினார்.

18ம் நூற்றாண்டில் மருத்துவ அறிவு வளர்ச்சியுற்றாலும், பெண்களே குழந்தைப் பேறின்மையால் வெளிப்படையாக உடைந்து போனதால் அவர்களையே மலடு என்றனர். பொதுவாக மலட்டுத்தன்மைக்கு பெண்கள்தாம் காரணம் என்றொரு எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆனால் தரவுகள் ஆண்களும் பெண்களுக்கு இணையாக குழந்தைப் பேறின்மைக்குக் காரணம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. பிரிட்டனில் மலட்டுத்தன்மைக்கு 50% பெண்ணும் 25% ஆணும் 25% இருவரும் காரணம் என்கிறது ஓர் ஆய்வு. ஆஸ்திரேலியாவில் மலட்டுத்தன்மைக்கு 40% பெண்ணும் 40% ஆணும் 10% இருவரும் காரணம். ஸ்வீடனில் மலட்டுத்தன்மைக்கு 33% பெண்ணும் 33% ஆணும் 33% இருவரும் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

மலட்டுத்தன்மை என்பது பெரும்பாலும் சிகிச்சைகளின் வழி குணப்படுத்தக்கூடிய ஒரு குறைபாடே. இதில் ஆண், பெண் பாகுபாடெல்லாம் இல்லவே இல்லை. குழந்தை என்பது இயற்கை அளிக்கும் பெரும்பேறு என்பது நிஜமே. ஆனால், அது இல்லாதவர் எவ்வகையிலும் மற்றவர்களை விடக் குறைந்து விடுவதில்லை.     

மலட்டுத்தன்மை
சுக்கிலத்தில் பஞ்சமோ
அகப்பையில் வஞ்சமோ
அகவையோ சூழலோ
அரும்பும் வியாதியோ
காமக்கடும்புனலோடும்
கலவிப்பெருங்கடலில்
மச்சம் ஒன்றுமில்லை.
- கவிஞர் காத்துவாயன்

Stats   சவீதா

இந்திய ஆண்களில் 8 முதல் 12% பேர் மலட்டுத்தன்மை கொண்டவர்கள்.
ஆறில் ஒரு தம்பதியருக்கு மலட்டுத்தன்மைப் பிரச்னை இருக்கிறது.
35 வயதுக்கு மேல் 3ல் ஒரு பெண்ணுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
அமெரிக்காவில் ஆண்டுக்கு 15 லட்சம் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.