நிழல்கள் நடந்த பாதைகள்





சூரியநெல்லி பெண்ணுக்கு பெயர் ஏதும் இல்லை
இந்தியாவின் மகள்கள் தங்கள் பெயர்களை வேகமாக இழந்து வருகிறார்கள். டெல்லியில் ஒரு பெண் தன் பெயரை ஓடும் பேருந்தில் இழந்தாள். பிறகு அவளுக்கு ‘நிர்பயா’ என்று ஒரு பெயர் சூட்டப்பட்டது. இன்னொரு பெண் சமீபத்தில் தன் பெயரை இழந்து ‘கோவை சிறுமி’ என்று அழைக்கப்படுகிறாள். அவள் கோவை சிறுமியாக மாறுவதற்கு முன்பு அவளுக்கு ஒரு பெயர் இருந்திருக்கக்கூடும். அந்த 13 வயதுச் சிறுமியை சொந்த தாய்மாமனும் அவனது நண்பர்களும் கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததன் மூலம் அவளது பெயர் அழிக்கப்பட்டுவிட்டது.
இப்படித்தான் நாம் சூரியநெல்லி சிறுமியின் கதையையும் படிக்கிறோம். அவளுக்கும் ஒரு பெயர் இருந்தது. அவள் சூரியநெல்லி சிறுமியாக மாறுவதற்கு முன்பு அந்தப் பெயராலேயே அவளது பெற்றோரும் தோழிகளும் அழைத்திருக்க வேண்டும். இப்போது சூரியநெல்லி என்பது கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் பெயர் அல்ல. பாலியல் குற்றங்களுக்கும், அதைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பிற்கும் அடையாளமாக என்றென்றும் இருக்கப் போகும் பெயர் அது.

1996ம் ஆண்டு ஜனவரி மாதம், ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த 14 வயது சூரியநெல்லி சிறுமி காணாமல் போகிறாள். மகள் காணாமல் போனதாக, ஜனவரி 17ம் தேதி அவளது தந்தை காவல்துறையில் புகார் செய்கிறார். பிப்ரவரி 26ம் தேதி சிதைக்கப்பட்டவளாக அவள் வீடு திரும்புகிறாள். கேரளாவின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவள், 42 நாட்களில் 40 நபர்களால் பலாத்காரம் செய்யப்படுகிறாள். கோட்டயம் நீதிமன்றம் 34 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், விபசார தரகர் தர்மராஜனுக்கு ஆயுள் தண்டனையும்  விதிக்கிறது. நான்கு பேரை விடுதலை செய்கிறது. தண்டிக்கப்பட்ட அனைவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கின்றனர். அதை விசாரித்த அப்போதைய நீதிபதிகளான பசந்த், அப்துல் கபூர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அனைவரையும் விடுதலை செய்கிறது. தர்மராஜனின் ஆயுள் தண்டனை ஐந்தாண்டு தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.  

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் 2005ம் ஆண்டு முறையீடு செய்கிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள உயர் நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை அடுத்த ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.  
இந்தத் தெளிவான, சுருக்கமான கதை இதோடு முடியவில்லை. இதற்குள் பல கிளைக் கதைகள் இருக்கின்றன.

14 வயது சூரியநெல்லி சிறுமி ஒரு பஸ் கண்டக்டரிடம் காதலில் சிக்குகிறாள். அவன் அவளை மிரட்டிப் பயன்படுத்திவிட்டு, விபசார புரோக்கர் ஒருத்தியிடம் ஒப்படைக்கிறான். அவள் அந்தச் சிறுமியை தர்மராஜன் என்ற ஒரு தரகனிடம் விற்கிறாள். வக்கீலுக்குப் படித்த விபசார தரகன் தர்மராஜன், சிறுமியை ஊர் ஊராக அழைத்துச் சென்று பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்துகிறான். 42 நாட்களில் 40 நபர்கள் அவளை சூறையாடுகின்றனர். சிறுமி மயங்கி விழுகிறாள். பரிசோதித்த மருத்துவர், ‘‘அவளது பிறப்புறுப்பு முற்றாக சிதைந்து ரத்தப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவள் உயிருக்கு ஆபத்து’’ என்று எச்சரிக்கிறார். சிறுமி வீட்டிற்கு அனுப்பப்படுகிறாள்.

பத்திரிகைகளில் சூரியநெல்லி சிறுமி ஒரு புகைப்படத்தைப் பார்க்கிறாள். தன்னை பலாத்காரம் செய்த மனிதர்களில் ஒருவருடைய புகைப்படம் இது என்று உணர்கிறாள். அது மூத்த காங்கிரஸ் தலைவரும், அப்போதைய கேரள அமைச்சரும், இந்நாள் ராஜ்யசபா துணைத்தலைவருமான பி.ஜே.குரியன். குரியன் தன்னை குமுளியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 1996ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறாள். அவளது புகாரின் பேரில் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து குரியன் 2007ல் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதிலும் குரியனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து சூரியநெல்லி சிறுமி, ‘குரியனுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்’ என்று தனது வக்கீலுக்கு எழுது கிறாள். அதன்படி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று குரியன் ராஜ்யசபா துணைத் தலைவராக இருப்பது மட்டுமல்ல... பாலியல் குற்றங்கள் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை உருவாக்கிய குழுவிலும் அவர் இருக்கிறார்.
கேரளா இன்று குரியனுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. தான் அந்த நாளில் குமுளியில் இல்லவே இல்லை என்று குரியன் மறுக்கிறார். ஆனால் கேரள புரட்சிகர சோஷலிச கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் அச்சன் குஞ்சு என்பவர், அன்றைய தினம் தான் குமுளி விருந்தினர் மாளிகையில் குரியனைக் கண்டதாகக் கூறியுள்ளார். தரகர் தர்மராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான்தான் குமுளி மாளிகைக்கு சூரியநெல்லி சிறுமியை குரியனிடம் அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார். தரகர், பாதிக்கப்பட்ட சிறுமி, நேரில் கண்ட சாட்சியங்கள் எல்லாமே தனக்கு எதிரான அரசியல் சதி என்று குரியன் சாதித்து வருகிறார். ‘‘அரசியல் செல்வாக்குள்ள குரியனை எதிர்த்து எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிற்குக் காட்டிய அதே கருணையை எங்கள் மீதும் காட்டுங்கள்’’ என்று சோனியா காந்திக்கு சூரியநெல்லி சிறுமியின் தாய் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் சூரியநெல்லி சிறுமி மீது கருணை காட்டப்படாதது மட்டுமல்ல, ‘விபசாரி’ என்று இப்போது காங்கிரஸ்காரர்களால் அழைக்கப்படுகிறாள். காங்கிரஸ் எம்.பி சுதாகரன், ‘‘சூரியநெல்லி சிறுமி ஒரு விலைமாது’’ என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, குற்றவாளிகளை விடுவித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பசந்த்தும் இப்படியே சொல்கிறார். ‘‘சூரியநெல்லி சிறுமி ஒரு விபசாரி. விரும்பியே அத்தனை பேருடனும் உறவுகொண்டார். தனது உத்தரவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது தவறு’’ என்று சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபரிடம் கூறினார். கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ‘‘யாரிடமிருந்தோ ரகசிய உதவிகள் வாங்கிக்கொண்டு பெண்களுக்கு எதிராகச் செயல்படும் இந்த நீதிபதியின் கன்னத்தில் பெண்கள் அறைய வேண்டும்’’ என்று ஆவேசத்தோடு கூறியுள்ளார். மத்திய அமைச்சர் வயலார் ரவியிடம் கேரள தனியார் தொலைக்காட்சியின் பெண் நிருபர் ஒருவர் குரியன் பற்றி கேள்வி எழுப்பினார். ஆத்திரமுற்ற வயலார் ரவி ‘‘தனிப்பட்ட முறையில் உனக்கு குரியன் மீது எதுவும் கோபம் உண்டா? அவருடன் உனக்கு எதுவும் முன் அனுபவம் உண்டா? தவறாக எதுவும் உண்டா?’’ என்று பெண் நிருபரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
‘பாதிக்கப்பட்டவர்கள்தான் குற்றவாளிகள்’ என்று சொல்லப்படும் குரூரத்திற்கு டெல்லி மாணவி முதல் சூரியநெல்லி சிறுமி வரை சாட்சியங்கள். இதுபோன்ற அமைச்சர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள்தான் இந்தியாவில் பெண்களை பாலியல் கொடுமைகளிலிருந்து காப்பாற்றப் போகிறார்களா? ‘பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அரசியல் தலைவர்கள் உடனடியாகப் பதவி விலகவேண்டும்’ என்று வர்மா கமிஷன் முன்வைத்த கோரிக்கையை ஏன் மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது என்பதை குரியன் விவகாரத்தின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. டெல்லி மாணவிக்குக் காட்டப்பட்ட கருணை ஒரு போலி நாடகம் என்பதை சூரியநெல்லி விவகாரம் நிரூபித்துவிட்டது.

ஒரு ரூபாய் இட்லி
தமிழக முதல்வர் ஏழை மக்களுக்கு மலிவு விலை சாப்பாட்டுக் கடைகளை தொடங்கி வைத்திருக்கிறார். மின்சாரம் இன்மை, பருவமழை பொய்த்தது, காவிரி பிரச்னை போன்றவற்றால் தமிழகம் முழுக்க எல்லா பிரிவு மக்களுக்கும் இந்தத் திட்டத்தை சீக்கிரம் விரிவுபடுத்த வேண்டியிருக்கலாம்.

சாட்டை
சமீபத்தில்தான் ‘சாட்டை’ படம் பார்த்தேன். ஒவ்வொரு மாதமும் எல்லா பள்ளிகளிலும் சம்பளம் கொடுக்கும் முன்பு வாத்தியார்களுக்கு இந்தப் படத்தைப் போட்டுக் காட்டலாம். லட்சியவாதம் முற்றாக அழிந்துபோன ஒரு காலத்தில், அதன் எச்சங்களிலிருந்து உயிர்த்தெழும் படம் இது.
(இன்னும் நடக்கலாம்...)

நான் படித்த புத்தகம்


அகதி வாழ்க்கை : கலையரசன்
அகதி வாழ்க்கை பற்றி எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது. ஆனாலும் அகதிகளின் கதை தீர்வதில்லை. ஈழத் தமிழர்கள் தமிழில் அகதி இலக்கியம் என்ற ஒரு புதிய திணையை உருவாக்கினார்கள். அந்த வரிசையில் இந்த நூலும் இணைகிறது. ஈழத்திற்குள்ளும், ஈழத்திற்கு வெளியிலும், உலக வரலாறு சார்ந்தும், சொந்த அனுபவம் சார்ந்தும், அகதி என்ற சொல்லின் அர்த்தத்தைத் தேடிப் பயணம் செய்கிறது இந்த நூல். அகதி முகாம்கள், ஒடுக்குமுறைகள், பயணங்கள், ஏஜென்ட்டுகள், சர்வதேச நடைமுறைகள், நிச்சயமின்மை, பயம் என கலையரசன் முன்வைக்கும் குறிப்புகள், ‘மனிதகுல வரலாற்றில் அகதி என்ற அடையாளத்தைவிடவும் துயரம் தருவது எதுவும் இல்லை’ என்ற உணர்வைத் தருகிறது.
(விலை ரூ.100/-, வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை-600017. தொலைபேசி: 044-42868126

மனுஷ்ய புத்திரனின் : ஃபேஸ்புக் பக்கம்



‘‘இந்த வயதில் இப்படிக் கஷ்டப்படணுமா..?’’ என வைகோவிடம் கரிசனத்துடன் கேட்ட ஜெயலலிதா - செய்தி
‘‘அவ்வளவுக்கும் அப்புறம் நீ ரொம்ப நல்லவன்னு சொன்னாங்க...’’

எனக்குப் பிடித்த கவிதை


நானொரு குழந்தையாகி செல்ல மனைவியின்
கர்ப்பக் கவிதைக்குள் உருண்டோடிக்கொண்டிருந்தேன்
மருத்துவச்சி சொன்னாள் படுசுட்டியென்று
குறித்த நேரத்திற்கு முன்பாகவே
பனிக்குடத்தை கால்கொண்டு மிதித்து
தலைகீழாக வந்து குதித்தேன்
உயிர்குளிர முலை தந்தாள்
ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம்
சொல்ல முடியா என்னவோ ஒன்று
முடியவில்லை எழுதியது பாதியில் நிற்கிறது
பேனாவை புத்தகத்திற்குள் வைத்தபடி
குட்டிபோடு மயிலிறகேயென சொல்லிவிட்டு
வயிறு பசித்து முலைதேடும்
குழந்தையின் சிறுவாயருகில்
பால் பொங்க நின்றேன் நானொரு முலையாய்.
- என்.டி.ராஜ்குமார்