பழசை ஞாபகத்துல வச்சுக்க வேண்டியது தான்! பாரதிராஜா





‘‘பாரதிராஜாவுக்கு என் மீதுள்ள குறையெல்லாம், நான் அவரைப் போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக்கொண்டும் கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என நினைக்கிறாரோ என்னவோ?’’

- இப்படி இயக்குநர் பாரதிராஜா மீது இளையராஜா தன் கோபத்தை ஆக்ரோஷமாகக் காட்டி திரி கிள்ளிப் போட... பற்றி எரிகிறது கோலிவுட். ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ எடிட்டிங்கில் இருந்த பாரதிராஜாவைப் பார்த்தால், இளையராஜாவுடைய பாய்ச்சலின் எந்தப் பதற்றத்தையும் தலையில் போட்டுக் கொள்ளாத மாதிரி இருந்தார். திடீரென பவர்கட்டாக, எழுந்து போய் கதவுகளைத் திறக்கிறார். ‘‘சீக்கிரமா ஆபீஸுக்கு வரமுடியலை... இன்னும் நான் சாப்பிடலை தெரியுமா... ‘அன்னக்கொடி’ பாட்டு கேட்டீயா... அந்த மேடம் கெஜட்ல தீர்ப்பை வெளி வர்ற மாதிரி பண்ணிட்டாங்களே... ட்ராபிக் ஜாஸ்தியாயிருக்கு...’’ என அடுத்தடுத்து டாபிக் மாறி அவர் பேசுவதிலிருந்தே, ‘‘இளையராஜா விஷயத்தைக் கேட்காதே’’ என சொல்ல விரும்புகிறார் என்பது புரிகிறது.

‘‘இளையராஜா எழுதியது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. எல்லோரும் ஒண்ணுமண்ணா வளர்ந்தோம். ‘அன்னக்கொடி’ ஆடியோ ரிலீஸில் குத்தமா எதையும் நான் சொல்லலை. ‘நம்மகிட்டே இருக்கிற திறமையெல்லாம் ஆண்டவன் கொடுத்தது. அது நம்மகிட்டே ஏற்கனவே இருக்குன்னு நினைக்கக்கூடாது. எங்க ஆத்தா கருத்தம்மா என்னய மாதிரியே இன்னொரு மகனையும்தான் பெத்தா, அவனுக்கு இந்த திறமையை வைக்கலையே... ஆக, இதெல்லாம் நமக்கு கடவுள் போட்ட பிச்சை’ன்னு பொதுவாதான் பேசினேன். அவ்வளவுதான். அதுக்கு இப்படிச் சொல்லியிருக்காரு.

நான் எப்போதும் திறந்த புத்தகமாகவே இருந்திருக்கேன். அப்படியே சுத்தபத்தமானவன்னு என்னை சொல்லிக்கிட்டதேயில்லை. எல்லோருக்கும் இருக்கிற ஆசாபாசங்கள், குற்றம் குறைகள் என்கிட்டேயும் இருக்கு. 80 சதவீதமாவது மனிதனாக இருக்கமுடிகிறதா என முயன்று பார்க்கிறதிலேயே இந்த வயசு ஓடிக்கிட்டே இருக்கு. சரி, இப்படி எழுதிட்டாரு... என்ன சொல்றது?

வாய்ப்பு தேடி இங்க வந்தப்ப நான் வேலை பார்த்த பெட்ரோல் பங்க்கில், பாஸ்கர், அமரன், இளையராஜா, நாங்க எல்லாரும் ஆயுத பூஜைக்கு பொரி வாங்கி, தண்ணியில ஊறப்போட்டு ரெண்டு, மூணு நாள் வச்சு சாப்பிட்டிருக்கோம். காலம் ஓடிப் போய் பார்த்தால், நான் டைரக்டரா, அவரு மியூசிக் டைரக்டரா வந்திட்டோம். பழசை ஞாபகத்தில் வச்சுக்க வேண்டியதுதான். இதற்குமேல் என்கிட்டே எதையும் கேட்காதீங்க’’ என கைகளை உயரத் தூக்கி கும்பிடுகிறார் பாரதிராஜா. கண்களில் மென்சோகத்தின் சாயல்.

உண்மையில் ‘நடந்தது என்ன’ என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தால் தகவல்கள் கொட்டிக் கொண்டே இருந்தன. பெயரையும் அடையாளத்தையும் மறைத்தால் கிடைக்கிற நம்பிக்கையில் உதிர்ந்த உண்மைத் தகவல்கள் அவை.



‘‘டைரக்டருக்கு ரொம்ப வருத்தம். எக்கச்சக்கமா காயப்பட்டுட்டார். அதை மறைக்கத்தான் ஒண்ணுமே இல்லை என நடிக்கிறார். அந்த விழாவுக்கு அழைத்ததும் இளையராஜா வந்துவிட்டார்.  படத்துக்கு இசை அமைச்சிருந்த ஜி.வி.பிரகாஷ்குமாரை கண்டுகொள்ளவேயில்லை. 25 படம் செய்த மியூசிக் டைரக்டரைப் பத்தி ஏதாவது சொல்லியிருந்தால் பெரிய மரியாதையாக இருந்திருக்கும். அதைக்கூட அவர் செய்யவில்லை. விழாக்கள் என்பது குதூகலமா செய்யப்படற விஷயங்கள். அது ஏன் அவருக்குப் புரியவில்லை?  

எப்போதும் டைரக்டருக்கு அவர் மீது கரிசனம் உண்டு. இருவரும் சேர்ந்து படம் செய்யவில்லை என்றபோது கூட, இடைவெளி குறையாமல் பார்த்துக்கொண்டார். இவர் வீட்டு விழாக்களில் அவரும், அவர் வீட்டு விசேஷங்களில் இவரும் தவறாமல் கலந்துகொண்டார்கள். இரண்டு பேரும் சேர்ந்துதான் வளர்ந்தார்கள். இளையராஜாவை சிலர் விழுந்து கும்பிட ஆரம்பித்த பிறகுதான் நிலைமை மாறியது. தான் வேறு என உணர ஆரம்பித்தார் அவர். நிறைய சந்தர்ப்பங்களில் டைரக்டர் பேசியதை அவர் தவறாகவே புரிந்துகொண்டு இருக்கிறார். இளையராஜா ‘சிம்பொனி’ அமைத்த பிறகு வைகோ தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் டைரக்டர் பேசியதைக்கூட அவர் தவறாகத்தான் புரிந்துகொண்டார். இளையராஜாவின் மனைவி, டைரக்டரின் மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். தான் என்ன அர்த்தத்தில் பேசினேன் என்பதை கஷ்டப்பட்டு புரிய வைத்தார் டைரக்டர்.

ஏதோ இப்போதுதான் அவர்களுக்கிடையே பிரச்னை உருவாகிவிட்டது என சிலர் நினைக்கிறார்கள். இருவருக்கும் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அந்த இடைவெளியைத் தாண்டிப் போய்த்தான் ஒவ்வொரு முறையும் டைரக்டர் நட்பு பாராட்டினார்.

இப்போதுகூட அப்படி விட்டிருப்பார். ஆனால் பர்சனல் லைஃப்பை பற்றிக் குறிப்பிட்டு இளையராஜா சொன்னதுதான் டைரக்டரை ரொம்பக் காயப்படுத்திவிட்டது. இரண்டு பேரும் இணைந்தே வளர்ந்திருக்கிறார்கள். ஊரிலிருந்து புறப்பட்டு வந்து, இங்கே ஒரு இடத்தைப் பற்றிப் பிடிக்கிறவரைக்கும் படு நெருக்கமாக இருந்தது அவர்களது நட்பு. நட்பின் அர்த்தமே... சேர்ந்திருந்தபோது நிகழ்ந்த விஷயங்களை, பிரிந்தபிறகு பேசாமல் விடுவதுதான்! அதுதான் இரண்டு பேருக்குமே பெருமை சேர்க்கும். இரண்டு பேரும் மிகவும் புகழ்பெற்றவர்களாக ஆகிப்போனதுதான் அவர்கள் நட்புக்கான முதல் தோல்வி. ஒன்று தெரியுமா, இனிமேல் அவர்கள் நட்பு கிளை விட வாய்ப்பே இல்லை’’ என நழுவிக்கொண்டார்கள் அவர்கள். அடடா!
- நா.கதிர்வேலன்