புகழ்

‘‘என்ன சேகர், நீ ஆசைப்பட்ட மேனேஜர் பதவி உனக்கு கிடைச்சிடுச்சு. சந்தோஷம்தானே?’’ - பால்ய நண்பன் கேட்டான். சேகர் உதட்டைப் பிதுக்கினான். ‘‘இந்த சீட்ல உக்காந்து ஆறு மாசமாச்சு. எரிச்சல்தான் மிச்சம்!’’ ‘‘ஏன் சலிச்சுக்கறே? நீதானே இந்தப் பதவி கிடைச்சா நிறைய புகழ் சேரும்னு சொன்னே?’’ ‘‘எங்கே..? முன்னாடி இந்தப் பதவியில இருந்தவனுக்கு எவ்ளோ புகழ், பாராட்டு தெரியுமா? அவனைப் பார்க்கக் கூட்டம் கூட்டமா வருவாங்க... கௌரவிப்பாங்க. என்னை யாரு மதிக்கறா?’’ ‘‘நானும் உன்னைப் பத்தி சிலர் புலம்பறதை கேள்விப்பட்டேன்...’’ ‘‘என்ன புலம்பல்..?’’ ‘‘முன்னாடி இருந்த மேனேஜர், தன் கீழே வேலை செய்யறவங்களுக்கு வீடு கட்ட லோன், மருத்துவ செலவு, அரியர்ஸ், இன்கிரிமென்ட்னு எல்லாம் உடனுக்குடன் செய்வாராம். வேலை நடக்குற இடத்துக்கே போய் தொழிலாளிங்க குறைகளைக் கேட்பாராம். யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா ஹாஸ்பிடலுக்கே போய்ப் பார்த்து ஆறுதல் சொல்வாராம்.’’ ‘‘ஆபீஸ் கோப்புகளையெல்லாம் உடனே பார்த்து ஓகே செய்திடறேனே... இந்த வேலைக்கு மத்தியில வெளியே எல்லாம் போய் அலையவா முடியும்..?’’ ‘‘சேகர், வெறும் பதவி புகழைத் தராது. நீதான் உன் அணுகுமுறையால இந்தப் பதவிக்கு புகழ் சேர்க்கணும்.’’ சேகருக்கு இப்போது புரிந்தது.
|