அமலாபாலா... அப்படின்னா யாரு?





மீண்டும் முருங்கை மரம் ஏறுவது வேதாளம் மட்டுமல்ல... டாப்ஸி மீதான சர்ச்சையும்தான். ஒரு தெலுங்குப் பட வாய்ப்பைப் பிடிப்பது தொடர்பாக, அமலாபாலுக்கும் டாப்ஸிக்கும் இடையே ‘வாய்’க்கா தகராறு முற்றியதாக டோலிவுட்டில் கசிந்த செய்தி, இப்போது கோடம்பாக்கத்திலும். அத்திபூத்தாற்போல சென்னை வந்திருந்த டாப்ஸிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தோம்.

‘‘ஆடியன்ஸ் ஆளாளுக்கு ஏங்கிக்கிட்டு இருக்காங்க... உங்களப் பார்க்க முடியலையே?’’

‘‘ஏங்க... நான் சென்னை வர்றப்ப எல்லாம் சொல்லிட்டா வர முடியும்? எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்குற ரசிகர்களுக்கு தேங்க்ஸ். ஏதோ நான் தமிழ்ப் படத்திலேயே நடிக்காத மாதிரில்ல கேட்குறீங்க. விஷ்ணுவர்த்தன் சார் டைரக்ஷன்ல ‘தல’ படத்துல நடிச்சிட்டு இருக்கேன். படத்தோட டைட்டில் இப்போதைக்கு ‘வலை’. அப்புறம் ‘முனி பார்ட் 3’யில் நடிக்கிறேன். இந்தப் படம் தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளிலும் தயாராகுது. இந்தப் படங்களில் என்ன கேரக்டர்னு நீங்களும் கேட்காதீங்க! நானும் சொல்ல மாட்டேன்...’’
‘‘ ‘வந்தான் வென்றான்’ படத்துக்குப் பிறகு ரொம்ப கேப்பானது மாதிரி தோணலையா?’’

‘‘அதுக்கு என்ன பண்றது? தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகள்ல நடிச்சிட்டு இருக்கேன். நான் ஒரு ஆளுதானே. என்னை ஜெராக்ஸ் எடுத்தா எல்லா இடத்துக்கும் அனுப்ப முடியும்? நான் நடிக்க வந்து முழுசா ரெண்டு வருஷம்தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள என்னோட லிஸ்ட்ல பத்து படங்கள் ஆகிடுச்சு. இதுவே பெரிய விஷயமா இருக்குறப்போ, கேப் என்ன கேப்? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... விஷ்ணு சார் படம் வந்திடும்!’’
‘‘இந்தி படம் பற்றியாவது சொல்லலாமே?’’

‘‘ம்... சொல்லலாமே! படத்தோட பேரு ‘சாஷ்மி படோர்’. நாலு நண்பர்களுக்கிடையே நடக்கிற கதை. இதில் கல்லூரி மாணவி வேடம். முப்பது வருஷத்துக்கு முன்னாடி வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தைத்தான் அதே பேரில் ரீமேக் பண்றாங்க. பெரிய பட்ஜெட் படம். இன்னும் ரெண்டு மாசத்தில ரிலீஸாகிடும். படத்தில எல்லாருக்குமே நல்ல பேர் கிடைக்கும்னு நம்புறேன்!’’
‘‘சரி, அல்லு அர்ஜுன் படத்தில என்ன பிரச்னை?’’
‘‘ஒண்ணும் பிரச்னை இல்லையே... எதுக்காக இந்தக் கேள்வி?’’

‘‘அவர் படத்தில நடிக்கிறதுக்கு அமலாபாலுக்கும் உங்களுக்கும் கடுமையான போட்டியாமே?’’
‘‘ஹய்யோ இதுபத்தி ஏற்கனவே சொல்லிட்டேன். அப்படியொரு பிரச்னையே நடக்கல. யாரோ கற்பனையில் திரித்து வெளியிட்ட செய்திக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா என்ன? எனக்கு நிறைய வேலை இருக்கு. சம்பந்தமில்லாத விஷயத்தில் சம்பந்தமே இல்லாதவங்க தலையிடாம இருந்தாலே எந்தப் பிரச்னையும் இல்லை. யாரும் யார் இடத்தையும் பிடிக்க முடியாது. விட்டுக்கொடுக்கிற அளவுக்கு இங்க யாருக்கும் பக்குவமோ, மனசோ இல்லை. எதுக்கு இதப் பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ணணும்?’’



‘‘நீங்க இப்படி சொல்றீங்க. டாப்ஸியும் என்னோட ஃபிரண்டுதான்னு அமலாபால் சொல்லியிருக்காங்களே?’’
‘‘ஹலோ... நான் யாரைப் பற்றியும் பேச விரும்பல. நீங்க சொல்ற நடிகையோட எனக்குப் பழக்கமே இல்ல. அப்படியிருக்கும்போது தேவையற்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. நான் அப்புறமா பேசுறேன்...’’ எனப் பறந்த வெள்ளாவி தேவதையிடம் சிறகாக முளைத்திருந்தது சினம்.
- அமலன்