கல்யாணம்... மாயாஜாலம்!





‘‘இளமை ததும்ப றெக்கை விரிச்சுப் பறக்கிற ஒரு காதல். இந்தக் கதையைச் செய்ய ஜெய் இன்னிக்குப் பொருத்தமானவர். ‘எங்கேயும் எப்போதும்’ ஜெய்யைக் கொண்டு போய் வச்ச உயரம் அதிசயமா, ஆச்சர்யமா, சந்தோஷமா இருக்கு. ஒரு ஸ்கிரிப்ட்டில் இறங்கி உள்ளே போகிற ஆர்வம் ஜெய்கிட்டே ரொம்ப இயற்கையா இருக்கு.’’

- நிதானமாகப் பேசுகிறார் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் இயக்குனர் அனீஸ். நடிகர், இயக்குனர் நாசரின் செல்ல சீடர்.  
‘‘பெயரே வித்தியாசமா இருக்கு...’’
‘‘ரத்தம், சத்தம், கூச்சல், குத்துப்பாட்டுன்னு எதுவும் இல்லாம நான் ஆசைப்பட்ட பயணம்தான் இந்தப்படம். புது கதைக்களம். காதலும் காமெடியும் நிரம்பி வழியும். ‘ஹம் ஆப்கே ஹே கோன்’, ‘மான்ஸூன் வெட்டிங்’னு பார்த்தோம் இல்லையா... அது மாதிரிதான். கலகலன்னு திருவிழா பார்க்கிற மாதிரி இருக்கும். மனதை அப்படியே ஈஸியாக்கி, காத்தில பறக்கவிடும். செட்டிநாட்டுக் கல்யாணம் மாதிரி அஞ்சு நாள் கொண்டாட்டத்திற்கு போனால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்... எப்படி புதுசா இருக்கும்! நீங்க ஒரு நிக்காஹ் போனால் அதன் முழு அழகை ஃபீல் பண்றது எப்படி? என் கதை இந்த இரண்டு இடத்துலயும் நடக்குது.



காதலையே புன்னகையும் சந்தோஷமுமா பார்க்கிறது ரொம்ப அழகா இருக்கும். காதலிக்காட்டி ஆசிட் ஊத்துற இந்தக் காலத்தில் எளிமையா, ஈரமா உங்களுக்குள் இருக்கிற அன்பையும், காதலையும், குழந்தைமையின் மிச்சத்தையும் பெண்மையின் உச்சத்தையும், காதலின் அழகையும் பேசுவோம். எப்பவும் பெற்றவர்கள் காதலைத் தடுக்கறாங்கன்னே நாம கதை சொல்றோம். அப்படிப் பழக்கமாயிடுச்சு. இப்ப கல்யாணம் ஆனவங்களுக்குக் கூட கதை சொல்லலாம். பிள்ளைகள் வளர்ந்த பின்னாடியும் மனைவியோட தனியா ஒரு இடத்துக்குப் போறப்ப... ‘ஞாபகமிருக்கா, 15 வருஷத்துக்கு முன்னால நாம இங்க வந்தோமே?’ன்னு அன்போடு மனைவியின் கையைப் பிடிக்கிறானே, அது காதல் கதைதானே? அதையும் கூட இனிமே யாராவது வந்து சொல்வாங்க. ஜனங்க நமக்கு ஒதுக்கியிருக்கிறது இரண்டரை மணி நேரம்தான். அதுக்குள்ள அவங்களை வசப்படுத்திட்டா போதும்னு நம்புறேன்.’’
‘‘ ‘எங்கேயும் எப்போதும்’க்குப் பிறகு ஜெய் பயங்கர டிமாண்டில் இருந்தார்...’’

‘‘உண்மைதான். ஆச்சரியம் என்னன்னா, இந்தக் கதை அவரே கேள்விப்பட்டு ஆசைப்பட்டு வந்தது. ‘காலையில் எழுந்திருச்சு சாப்பிட்டுட்டு போன் பண்ணுங்க, வர்றேன். முதல் பாதி சொல்லிட்டு போயிடுறேன். மதியம் குட்டித் தூக்கம் போட்டுட்டு உட்காருங்க, வந்றேன். மறுபாதியை சொல்லிடுறேன்’னு சொன்னேன். ‘என்னடா இது, புது மாதிரியா இருக்கு’ன்னு நினைச்சிருப்பார் போல. ஒரு பார்வை பார்த்திட்டு அப்படியே செய்தார். அவருக்கு ரொம்பப் பிடிச்சது. அதற்குப் பின்னாடி ஹீரோயின் தேட வேண்டியிருந்தது. அதற்கும் சரி சொல்லிட்டு வேற ஷூட்டிங் போகாம உட்கார்ந்திருந்தார். இப்படி ஆசை ஆசையா ரோல் பண்ணுகிற ஹீரோவைப் பார்த்தால் ஒரு புது டைரக்டருக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்! நிச்சயம் ஜெய்க்கு அருமையான, தனித்துவமான இடம் இருக்கு. இப்ப முன்னே மாதிரி இல்லாமல் ஒவ்வொரு படத்தையும் யோசிச்சு, திட்டமிட்டு பண்றார்.’’
‘‘கேரளாவில் புகழ்பெற்ற நஜிரியா நஜிம்மை கொண்டு வந்திட்டீங்க...’’




‘‘உங்களுக்கு அவங்களைத் தெரியுமா? அவங்க ஃப்ராக் போட்ட காலத்திலிருந்து, ‘மஞ்சு சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறாங்க. கேரளாவுல அவங்க பேரை சின்னக் குழந்தையும் சொல்லும். நஜிம்மோட பிரபலமான மியூசிக் ஆல்பம் ‘யுவா’... அதைப் பார்த்து ரசித்தவர்கள் அநேகம். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அந்த ஆல்பம் பார்க்கக் கிடைச்சது. அப்படியே என் மனதிலிருந்த ஹீரோயின். உடனே போய்க் கூட்டி வந்திட்டோம். ஜெய், நஜிம் இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி அவ்வளவு இயல்பா இருக்கு. ஸ்பாட்ல வச்சு பார்த்தீங்கன்னா, ‘சம்திங் சம்திங்’னு எழுதி இருப்பீங்க. இப்ப அவங்களுக்கு ஏகப்பட்ட ஆஃபர். எல்லாமே இந்தப் படத்திற்குப் பிறகுதான்னு அவங்க சொல்லிட்டாங்க. எங்க மேலே வச்ச நம்பிக்கை. எனர்ஜியும் இளமையும் நிரம்பிய டீம் அமைஞ்சது மேஜிக். ஸோ, மாயாஜாலங்கள் சாத்தியம்னு நம்புறேன்.’’
‘‘திருமணம் சம்பந்தப்பட்ட படம். இசைக்கு முக்கியத்துவம் இருக்குமே...’’



‘‘உண்மைங்க. எனக்கு ‘சரசர சாரக்காத்து’ கேட்கும்போது மனசு ஆழம் வரைக்கும் போச்சு. அதே பாட்டை நடுராத்திரி கேட்டால் வேற வடிவம் தருது. எனக்கு இரண்டு தரப்பு திருமணங்களின் இசை வடிவம் வேணும். ஜிப்ரானுக்கு இரண்டுமே கைவந்தது. புரட்யூசர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் மியூசிக் டைரக்டர்னா ரொம்ப கவனம் வைப்பார். முதலில் கொடுத்த ஒரே ட்யூனில் அவரை ‘வெரிகுட்’ சொல்ல வச்சார். இந்தப் படத்தில் இசைக்கு பெரிய இடம். தமிழிலிருந்து கேரளாவுக்கு போய் பின்னுகிறார் லோகநாதன். சக்கைப் போடு போடுகிற ‘உஸ்தாத் ஹோட்டல்’க்கு அவர்தான் கேமரா. அவரை முதல் தடவையா, ‘சொந்த பூமிக்கு வாப்பா’ன்னு கூட்டி வந்திருக்கேன். காதல், மியூசிக் ட்ரீட்டுக்கு தமிழ் மக்கள் ரெடியாகலாம்!’’
- நா.கதிர்வேலன்