இனி காவிரி தமிழகத்துக்கு வந்துவிடுமா..?





22ஆண்டுகளாக நீடித்துவந்த காவிரி பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. 2007 பிப்ரவரியில் காவிரி நடுவர்மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு மத்தியில், அரசிதழில் வெளியிட்டு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியிருக்கிறது மத்திய அரசு. அதன்படி, சட்டப்பூர்வமாக ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்கவேண்டும்.

டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சூழலில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அங்கீகரிக்கப்பட்டது தமிழகத்தில் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. கர்நாடகத்தின் தடை கடந்து நாளைக்கே காவிரி தமிழகத்தில் பொங்கிப் பிரவகித்துவிடும் என்ற தொனியில் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறார்கள். ஆனால், ‘‘இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது...’’ என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

‘‘கிட்டத்தட்ட 40 சதவீத விவசாயிகள் விவசாயத்தை விட்டே சென்றபிறகு, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. வஞ்சிக்கப்பட்ட நாம் கொண்டாட ஏதுமில்லை’’ என்கிறார் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம்.

‘‘நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு முற்றிலும் கர்நாடகத்துக்கு சாதகமானது. 1970ல் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கைப்படி, காவிரியின் மொத்த நீரோட்டமான 740 டிஎம்சியில், தமிழ்நாடு 566 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்தியது. நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு அதை 419 டிஎம்சியாக குறைத்துள்ளது. 1970ல் கர்நாடகத்தின் மொத்த ஆயக்கட்டு வெறும் 6.83 லட்சம் ஏக்கர். இறுதித்தீர்ப்பில் 18.85 லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தின் 29.26 லட்சம் ஏக்கரை, இறுதித்தீர்ப்பில் 24.71 லட்சமாகக் குறைத்திருக்கிறார்கள்.
டெல்டாவில் 5.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். அதை 1.85 லட்சம் என்று குறைத்திருக்கிறார்கள். இனி விவசாயிகள் குறுவை சாகுபடியே செய்யமுடியாது. இவ்வளவு இழப்புகளைக் கொண்ட இறுதித்தீர்ப்புக்குத்தான் இப்போது சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.

எல்லோரும் நினைப்பதைப் போல நாளைக்கே காவிரி இங்கே கரைபுரண்டு ஓடிவரப்போவதில்லை. ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இறுதித்தீர்ப்பை எதிர்த்தும், விளக்கம் கேட்டும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் நடுவர் மன்றத்தில் முறையிட்டுள்ளன. ஆனால் மனுக்களை விசாரித்து விளக்கம் சொல்வதற்கு நடுவர் மன்றத் தலைவர் இல்லை. அந்த இடம் காலியாகவே இருக்கிறது. இது தொடர்பான பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருக்கின்றன. நீதிமன்றம் இதுவரை அந்த வழக்குகளை விசாரித்து தீர்வு காணவில்லை. இதுவரை இவ்விவகாரத்தை கவனித்து வந்த பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையமும், காவிரி கண்காணிப்புக் குழுவும் இனி அதிகாரமற்றதாகி விடும். புதிதாக காவிரி ஒழுங்குமுறைக் குழு, மேலாண்மை வாரியங்கள் அமைக்க வேண்டும். இப்படி இன்னும் நடந்தேற வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. அரசிதழில் வெளியிடவே இவ்வளவு காலம் தாழ்த்திய மத்திய அரசு... இதையெல்லாம் எப்போது செய்து முடிக்குமோ, தெரியவில்லை.
கர்நாடகாவில் 13 ஆறுகளில் 2000 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதில் நேத்ராவதி நதியின் நீரை ஹேமாவதி அணைக்குத் திருப்பினால் 200 டிஎம்சி தண்ணீர் கூடுதலாகக் கிடைக்கும். இதன் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளன. மத்திய அரசு இந்தத் திட்டத்தை ஊக்குவித்து கர்நாடகாவின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்த்தால், காவிரி நீர் போதிய அளவு தமிழகத்துக்குக் கிடைக்கும். சட்டப்புத்தகமும், அரசிதழும் செய்யக்கூடியது ஒன்றுமில்லை...’’ என்கிறார் ஆறுபாதி கல்யாணம்.

ஆனால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன், ‘‘இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதன் மூலம், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது’’ என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

‘‘இதுவரை காவிரி விவகாரத்தில் இருந்ததெல்லாம் வெறும் சட்ட வரைவுகள். இப்போதுதான் சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. சட்டத்திடம் இருந்து யாரும் தப்பமுடியாது. இதற்கு பல உதாரணங்கள் உண்டு. இதைப் புரிந்துகொண்டுதான் கர்நாடக அரசு காவிரி விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகுகிறது. அதனால்தான் நம் முதல்வர் உச்ச நீதிமன்றத்தை அணுகும்போது, அவர்கள் பிரதமரை சந்திக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் சட்டத்தை அவ்வளவு எளிதில் ஏமாற்றமுடியாது.

காவிரி தொடர்பான மாநிலங்கள் ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். காவிரி, ஒரு பற்றாக்குறை நதி. மாநிலத்தின் முழுத்தேவையையும் அந்நதியால் நிறைவு செய்யமுடியாது. அதனால் எல்லோரும் புரிந்துணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். இனி காவிரி விவகாரத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை.

காவிரியோடு தொடர்புடைய எல்லா மாநில அதிகாரிகளையும் உள்ளடக்கி, மத்திய அரசு அதிகாரியின் தலைமையில் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும். தேர்தல் கமிஷனைப் போல அந்த ஆணையம் சுய அதிகாரம் கொண்டதாக இருக்கும். காவிரி நதி மற்றும் அணைகள் அந்த ஆணையத்தின் நிர்வாகத்தில் செல்லும். சட்டத்தை மீறவோ, ஏமாற்றவோ நினைத்தால், நீதிமன்றத்தை முழு உரிமையோடு அணுகலாம். இதன்மூலம் காவிரி விவகாரத்தில் நிலவிய அத்தனை சட்டபூர்வ குழப்பங்களும் முடிவுக்கு வந்துவிட்டது’’ என்கிறார் ரங்கநாதன்.
குழப்பங்கள் முடிவுக்கு வந்தது சரி... காவிரி தமிழகத்துக்கு வரவேண்டும். அதற்காகத்தான் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறது தமிழகம்.
- வெ.நீலகண்டன்