உயிர்





முதலாளியின் வீட்டிற்குள் நுழையப் போன முருகன், சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரொன்று, ரோட்டோரம் படுத்திருந்த தெருநாயை இடித்துத் தள்ளிவிட்டு, பறந்து கொண்டிருந்தது.

கதறலாகக் குரைத்தபடி ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நாயை அப்படியே தூக்கினான் முருகன். ஆட்டோ பிடித்து அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் விரைந்தான்.

நாய்க்கு தீவிர சிகிச்சையளித்து விட்டு முருகனிடம் திரும்பிய அந்த மருத்துவர், ‘‘தெருநாய்னு கூடப் பார்க்காம, அதுவும் ஒரு உயிர்னு மதிச்சுத் தூக்கிட்டு வந்திருக்கீங்க பாருங்க. இதுதான் மனுஷத்தனம்ங்கிறது. உங்களைப் போல நாலு பேரு இருக்கறதாலதான் நம்ம நாட்டுல இன்னமும் மழை பெய்துக்கிட்டு இருக்கு’’ என்றார்.
நாயின் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, முதலாளி வீட்டுக்குக் கிளம்பினான் முருகன்.
முதலாளி பயங்கர டென்ஷனில் பேசினார். ‘‘எங்கடா போயிட்டே முருகா? வா... ஒரு அவசர வேலையாதான் உன்னைக் கூப்பிட்டேன். இந்தா போட்டோ... இதுல இருக்குறவன் பேரு நல்லதம்பி. ஒரு வாரத்துக்குள்ள நீ அவனை போட்டுத் தள்ளணும். காரியத்தை கச்சிதமா முடிச்சிட்டா, உனக்கு பத்து லட்சம் ரூபாய் தர்றேன்’’ என்றார் அவர்.
‘‘முடிச்சிடலாம் முதலாளி!’’ என்றான் கூலிப்படைத் தலைவன் முருகன்.