மன்னிப்பு





‘‘திருட்டு நாயே! சீட்டுக்குப் பின்னால இருந்து, என் பொண்ணு மேல கையா வைக்கிற?’’
பின் சீட்டில் அமர்ந்திருந்தவனின் கன்னத்தில் இடியென இறங்கியது மாலதியின் அம்மா விட்ட அறை. தடுமாறிப் போனான் அவன். பஸ்ஸில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர். சிலர் எழுந்தும் வந்தனர். அவன் சொல்ல வந்ததை யாரும் காதில் வாங்கவில்லை. பலத்த அர்ச்சனைக்குப் பிறகு, எதிர்ப்புறம் உள்ள இருக்கைக்கு மாற்றப்பட்டான். தலைகுனிந்தபடி அமர்ந்த அவனை, அற்பப் புழுவைப் போல எல்லோரும் பார்த்தனர்.
சிறிது நேரத்தில் மாலதி மீண்டும் நெளிந்தாள். குழம்பிய அம்மா அந்தப் பகுதியில் கையைத் துழாவிப் பார்த்தாள். பின்னால் யாரோ சொருகி வைத்திருந்த செய்தித்தாள் கையோடு வந்தது. ‘பகீர்’ என்றது அம்மாவுக்கு.
‘‘பேசாமல் இரு... மானம் போயிரும்!’’ என்றாள் மாலதியிடம்.
‘‘நீ மட்டும் ஒருத்தனோட மானத்தை வாங்கலாமா?’’ என்று எழுந்தாள். நேராக அவனை நோக்கிச் சென்றாள்.
‘‘ஸாரி சார்! சீட்டுக்கு சைடுல, இந்தப் பேப்பர் உரசியிருக்கு. இது தெரியாம உங்களைத் தப்பா சொல்லிட்டோம். தயவு பண்ணி மன்னிச்சுக்கோங்க சார்!’’ - எல்லோருக்கும் கேட்கும்படி அவள் கெஞ்சலாகச் சொன்னாள்.
மாலதியின் அம்மாவும் கண்களால் மன்னிப்பு கேட்டாள்.