நியூஸ் வே





இந்தித் திரையுலகுக்கு தனது இரண்டு முகங்களையும் ஒரே நேரத்தில் காட்டியிருக்கிறார் ஸ்ரேயா. தீபா மேத்தாவின் ‘மிட்நைட்’ஸ் சில்ட்ரன்’ படத்தில் சீரியஸ் வேடத்தில் நடித்த அவர், ‘ஜில்லா காஸியாபாத்’ படத்தில் சஞ்சய் தத்துடன் ஒரு அயிட்டம் நம்பர் ஆடியிருக்கிறார். ‘‘எதையும் அர்ப்பணிப்போடு செய்ய வேண்டியது ஒரு நடிகையின் வேலை. நான் வித்தியாசம் பார்ப்பதில்லை’’ என்கிறார் ஸ்ரேயா.

மிக நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களின் பிறந்த நாளை நினைவு வைத்திருந்து பரிசளிப்பார் அஜித். விடியற்காலையில்
அந்தப் பரிசு  வீட்டிற்கு வந்து சேரும்.

‘நரேந்திர மோடி பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளரா?’ என தினம் தினம் எழும் விவாதங்களால் கடுப்பாகி இருக்கிறார், பி.ஜேபி கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார். ‘‘எப்போது, யாரை பிரதமர் ஆக்குவது என்ற விஷயத்தை அரசியல்வாதிகளான நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மீடியா இதைச் செய்ய வேண்டாம்’’ என கறாராக ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார்.

அடுத்து பாலா படத்தில் நடிக்கப்போவது யார் என்பதுதான் கேள்வி. பட்டியலில் சூர்யா, விக்ரம் இருக்கிறார்கள். விக்ரம் வர அடுத்த ஜனவரி ஆகும் என்பதால், சூர்யாதான் அடுத்த சாய்ஸ் என்கிறார்கள். ஆனால் கதையில் ஒரு சின்ன லைன்கூட இன்னும் ரெடியாகவில்லை என்பது தான் உண்மை.

தன்னை நேரில்
காண வந்து ஆறுதல் தந்த நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றிக் கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார் கமல்.

‘சாட்டை’ அன்பழகன் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகிவிட்டார். ‘ஹரிதாஸ்’ படத்தைத் தயாரித்த டாக்டர் ராமதாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

அர்ஜுன் மகள் சினிமாவுக்கு வந்துவிட, நடிகர் பார்த்திபனின் மூத்த மகள் அபி கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆகிவிட்டார். தினமும் கிழக்குக் கடற்கரை சாலையில் தானே கார் டிரைவ் பண்ணிப் போவதைப் பார்க்கலாம்.

காலில் செயற்கைக் கால்கள் பொருத்திக்கொண்டு ஒலிம்பிக்ஸ் வரை ஓடி ‘பிளேடு ரன்னர்’ எனப் பெயர் பெற்ற தென் ஆப்ரிக்க வீரர் பிஸ்டோரியஸ், காதலர் தினத்தன்று தன் காதலி ரீவா ஸ்டீவன்கேம்ப்பை சுட்டுக் கொன்றது உலகையே பரபரக்க வைத்தது. ‘காதலர் தினப் பரிசு தருவதற்காக ரகசியமாக வீட்டுக்குள் நுழைந்தவரை திருடன் என நினைத்து சுட்டதாக’ பிஸ்டோரியஸ் தரப்பு சொல்ல, முக்கோணக் காதல் விவகாரத்தைக் கிளப்புகிறது போலீஸ். ‘‘எங்களைப் போல ஆழமாகக் காதலித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. எங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை கடவுளுக்கே பொறுக்கவில்லை போலிருக்கிறது’’ என கோர்ட்டில் கதறி அழுதிருக்கிறார் பிஸ்டோரியஸ்.

குழந்தையோடு மிகவும் ஒன்றிவிட்டார் கார்த்தி. ஷூட்டிங் இல்லையென்றால் குழந்தையைக் கவனித்துக் கொள்வது எல்லாமே கார்த்திதான். இரவு ஒன்பது மணிக்கு மேல் அலைபேசியைக் கூட உடன் வைத்துக்கொள்வதில்லை. ஓ.கே பாஸ்... அனுபவிங்க. குழந்தையின் ஒவ்வொரு அசைவும் பேரானந்தம்!



தென்கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட ‘நீர்ப்பறவை’ தேர்வாகியுள்ளது. தென்னிந்தியாவிலேயே இந்தப் படம் மட்டும்தான் தேர்வாகியுள்ளதால் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி.

ஆழி பதிப்பகத்தில் இருந்து ‘தமிழ்ஆழி’ என்ற பெயரில் ஒரு செய்தி மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது.

தனது சொந்த தயாரிப்பு நிறுவன தொடக்கவிழாவை வெகு விமரிசையாக நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சேரன். இந்த விழாவில் ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தொடங்கி வைக்க கமலிடம் தேதி கேட்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ரீ-என்ட்ரி கிடைத்த மறுநாளே மும்பை மாநகராட்சி கமிஷனரை சந்தித்தார் ஹர்பஜன் சிங். மும்பையில் தான் ஆரம்பிக்க இருக்கும் கிரிக்கெட் அகாடமிக்கு நிலம் ஒதுக்க வேண்டித்தான் இந்த சந்திப்பு. மும்பை இந்தியன் அணியில் ஆடுகிறவர், மும்பை நடிகையைக் காதலிக்கிறவர், மும்பையில்தானே கிரிக்கெட் அகாடமி ஆரம்பிக்க முடியும்?!

‘  மைனா’, ‘கும்கி’ என்று வரிசையாக வாகை சூடி வரும் இமான், இதுவரை வெளி இடங்களுக்கு கம்போஸிங்கிற்காகப் போனதில்லை. காஷ்மீர் போகலாம், சுவிட்சர்லாந்து போகலாம் என தயாரிப்பாளரே டிக்கெட் போட்டாலும், ‘‘விருகம்பாக்கம் அலுவலகமே எனக்கு சொர்க்கம்’’ என அங்கேயே டியூன் போட்டுத் தருகிறார்.

மூத்த எழுத்தாளர் தி.க.சி தனது நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள், பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள், செய்தி அறிக்கைகள், தி.க.சியைப் பற்றி பிறர் எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து thikasi.blogspot.in என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது  

‘காதலில் சொதப்புவது எப்படி?’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பாலாஜி மோகன், அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையில் தீவிரமாக உள்ளார். ‘‘ஸ்கிரிப்டில் சொதப்பிவிடாமல் இருக்க கதை விவாதத்திற்காக உதவி இயக்குனர்களை வைத்துக்கொள்ளும் பாலிசி இல்லை’’ என்கிறார்.

நாசர் வீட்டில் மிகப்பெரிய லைப்ரரி வைத்திருக்கிறார். இலக்கியத்தில் எந்தப் பிரிவு என்றாலும் அவரிடம் கிடைக்கும். அவுட்டோர் போனால் பெட்டியில் முதலில் எடுத்து வைப்பது புத்தகங்களைத்தான்.

சைலன்ஸ்

கலகலப்பு இழந்து காணப்படுகிறார் அந்த மூன்றெழுத்து ஹீரோ. சிட்டி சப்ஜெக்ட்டில் நடிக்கும் படங்கள் வரிசையாக புட்டுக்கொண்டதால், சிட்டி சப்ஜெக்ட் சொல்லக் காத்திருந்த இயக்குனர்கள் சென்டிமென்ட்டாக நினைத்து ஜகா வாங்கியதுதான் ஹீரோவின் அப்செட்டுக்கு காரணம்!

இரண்டு எழுத்து நடிகையை சாப்பாடு டைரக்டரின் நண்பர் கோஷ்டி ஊறுகாய் போல தொட்டுக்கொண்டதாம். ‘‘பெரிய ரோல் தர்றேன்’’, ‘‘டைரக்டர்கிட்டே சொல்றேன்’’ என்று மாலை நேரங்களில் மயக்கமாகப் பேசியே காரியம் சாதித்துக்கொண்டார்களாம். விழித்துக் கொண்ட நடிகை, ‘போய்யா’ என சென்னை வருவதையே தவிர்த்துவிட்டார்.