நையாண்டி





நாட்டுல கடந்த ஒரு மாசமா யாரு பிஸியா இருக்காங்களோ இல்லையோ... ரப்பர் ஸ்டாம்ப் என்று கிண்டல் செய்யப்படுற நம்ம ஜனாதிபதி, கருணை மனுக்களை நிராகரிப்பதில் ரொம்ப பிசி. கருணை மனுவை ஜனாதிபதி மட்டும் நிராகரிப்பதில்லை, கருணை மனுக்களை நிராகரிப்பவர்கள் எல்லாமே ஜனாதிபதிதான்.

‘‘சார் தாத்தா செத்துட்டாரு, ரெண்டு நாள் லீவு வேணும்’’ என்ற ஒரு மாணவனின் கருணை மனுவை நிராகரித்து ஜனாதிபதி ஆனார் பள்ளிக்கூட வாத்தியார்.

‘‘அம்முகுட்டி, ஒரே ஒரு பீர் சாப்பிட்டுக்கிறேம்மா’’ என்ற கணவனின் கருணை மனுவை நிராகரித்து ஜனாதிபதி ஆனார் புதுப் பொண்டாட்டி.

‘‘அய்யா, தர்மபிரபு, ஏதாவது தர்மம் பண்ணுங்கய்யா’’ என்ற பிச்சைக்காரனின் கருணை மனுவை நிராகரித்து ஜனாதிபதி ஆனார் குடும்பஸ்தர்.

‘‘டார்லிங், ஒரே ஒரே முத்தம்...’’ என்ற காதலனின் கருணை மனுவை, ‘‘இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’’ என்று நிராகரித்து ஜனாதிபதியானார் காதலி.

‘‘அந்தப் பையனப் பார்த்தா நல்லவனா தெரியலம்மா. இந்த காதல் கீதல் எல்லாம் வேணாம்மா’’ என்ற பெற்றவர்களின் கருணை மனுவை நிராகரித்து ஜனாதிபதியானார்கள் வயசுப் பெண்கள்.

இப்படி நாட்டுல எல்லோருமே கருணை மனுவை நிராகரித்து ஜனாதிபதி ஆவதால்தான், இந்தியாவில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’னு சொன்னாங்களோ?

படைத்தல் கடவுளான பிரம்மாவுக்கு நாலு கைகள். உலகத்தை ரட்சிக்கும் நடராஜ பெருமானுக்கும் நாலு கைகள், அவரு மச்சினரான உலகை ஆட்டுவிக்கும் விஷ்ணுவுக்கும் கூட நாலு கைகள். சரஸ்வதி, லட்சுமி, காமாட்சி, மீனாட்சி என கொஞ்சம் வசதியான சாமிகளுக்கும் நாலு கைகள். சிவபெருமானின் செல்ல மகன்களான முருகனுக்கு நாலு கைகள், அவ்வப்பொழுது ஆறு கைகள், பிள்ளையாருக்கு நாலு கைகள், பத்தாக் குறைக்கு ஒரு தும்பிக்கையும் உண்டு. சிறு தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், கன்னியம்மன் போன்ற கடவுள்களுக்கு நாலு முதல் ஆறு கைகள். நரசிம்ம சாமிக்கு எட்டு கைகள். துர்கா தேவிக்கு எட்டு கைகள், அதிலும் கொல்கத்தாவில் வாழும் துர்கா தேவிக்கு பத்து கைகள். இப்படி உலகத்தை காத்து, வழி நடத்தும் கடவுள்களுக்கு எல்லாம் நாலு கைகளும் ஆறு கைகளும் இருக்க, இவர்களை எல்லாம் விட வெறும் இரண்டு கைகளை மட்டும் வைத்துக்கொண்டு நமக்காக அதிகம் வேலை செய்கிறாள் கண் முன்னே நிற்கும் கடவுளான நம் அம்மா.

கையப் பத்தி அவ்வளவு பார்த்தோம்... காலையும் கொஞ்சம் பார்க்க வேணாமா? மனுஷன் பிறக்கும்போது ரெண்டு கால், தவழும்போது நாலு கால், வயசான காலத்துல வாக்கிங் ஸ்டிக்கோட மூணு கால். பறவைகளுக்கு ரெண்டு கால், ஆடு மாடு நாய் போன்ற விலங்குகளுக்கு நாலு கால். முக்காலிக்கு மூணு கால், நாற்காலிக்கு நாலு கால். இப்போ நான் என்ன சொல்ல வர்றேன்னு ஒருக்கால் உங்களுக்கு புரியலைன்னா, நேரா விஷயத்துக்கு வர்றேன். மேலே கூறியவற்றுக்கு கால் இருப்பதால் கால் எண்ணிக்கை சொல்றோம். ஆனா ஒரு கால் கூட இல்லாத இந்த செல்போனுக்குதான் எத்தனை கால்? அட, call மேலே call.

சின்ன வயசுல, சீக்கிரம் வளர்ந்திடுவோம்னு பேன்ட்டை லூசா தைப்போம்... இப்போ இளைச்சிடுவோம்ங்கற நம்பிக்கையில பேன்ட்டை டைட்டா வாங்கறோம்.

சின்ன வயசுல அக்காவோட ஃபிரண்ட்ஸை பார்த்தா வெட்கப்பட்டு ஒளிஞ்சுக்குவோம். வளர்ந்த பிறகு தங்கச்சி ஃபிரண்ட்ஸைப் பார்த்துட்டு போகவே பத்து நிமிஷம் வெயிட் பண்றோம்.

சின்ன வயசுல சாமி கண்ண குத்தும்னு சொன்னா பயந்துக்குவோம், இப்போ ‘ஆண்டவன பார்க்கணும், அவனுக்கு ஊத்தணும்’னு எகத்தாளம் பேசுறோம்.  

சின்ன வயசுல அம்மா என்ன சொன்னாலும் பிளிவிணிகீளிஸிரி   செய்ய மாட்டோம். இப்போ பொண்டாட்டி திட்டுவான்னு பயந்துக்கிட்டு சொல்லாமலே வீட்டுவேலை செய்யறோம்.

சின்ன வயசுல சினிமால ஏதாவது ஆபாசமா வந்தா கண்ணை மூடிக்குவோம், இப்போ ஆபாசமா ஏதாவது பார்க்க வேண்டுமென்றால் கதவ மூடிக்கிறோம்.

ஆக, சின்ன வயசுல எதை செஞ்சு இருக்க வேண்டியதோ... அதை இப்போ செஞ்சுக்கிட்டு இருக்கோம், இப்போ செய்யக்கூடாததை சின்ன வயசுல செஞ்சுட்டோம்!

‘‘அவ மட்டும் கிடைக்கலைனா நான் செத்துடுவேன் மச்சான். என் அஞ்சலை மச்சான் அவ’’ன்னு தம் கட்டி, டயலாக் பேசுனவன் பலபேரு இப்போ, ‘‘மச்சான், ரெண்டு லார்ஜ்தான்... சீக்கிரம் வீட்டுக்கு போகாட்டி அவ திட்டுவா’’ன்னு சொல்றாங்க. விஷயம் என்னன்னா... அந்த அவ, இவ இல்லை.
‘‘பப்லும்மா, புஜ்ஜிம்மா, கன்னுக்குட்டி, நாய்க்குட்டி, குரங்குக்குட்டி’’ன்னு ஒரு பொண்ண கொஞ்சி கடலை வறுத்த பலபேரு, இப்போ ‘‘வாடி, போடி, கிரகம், தொல்லை’’ன்னு புகழ்றாங்க. ஏன்னா... அந்த அவ, இவ இல்லை.
‘‘அவ என்னை அப்படி பார்த்தாடா, அவ என்கிட்டே சிரிச்சு பேசுனாடா’’ன்னு நம்மளப் பிறாண்டினவன் பலபேரு, இப்போ ‘‘மதிக்க மாட்டேங்கிறாடா, எதிர்த்துப் பேசுறாடா’’ன்னு புலம்பித் தீர்க்கறானுங்க. காரணம்... அந்த அவ, இவ இல்லை.
இதுல நல்ல விஷயம் என்னன்னா, அந்த அவ, இவளா இல்லாட்டியும், இந்த இவ ஒரு காலத்துல யாரோ ஒருவருக்கு அந்த அவளா சந்தோஷமா இருந்திருப்பாங்க.

*  மூணு மணி நேரம் புடவை கட்டி, அது சரியில்லன்னு மூணே செகண்டுல அவுத்து எறிய இந்தப் பெண்களால் மட்டுமே முடியும். 

*  உருகி உருகி காதலிக்கிறவன விட்டுட்டு, ஊத்தி ஊத்தி குடிக்கிறவன கல்யாணம் பண்ணிக்க இந்தப் பெண்களால் மட்டுமே முடியும்.

*  ஒரு மணி நேரமா பார்க்க காத்திருந்தவனை ஒரே ஒரு செகண்ட் ஓரப்பார்வையில் கடந்து செல்ல இந்தப் பெண்களால் மட்டுமே முடியும்.

*  நாதஸ்வரம் சீரியல்ல கோபிக்கு மலர் சாப்பாடு போடுறத பார்த்துக்கிட்டு, கட்டுன புருஷன பட்டினி போட இந்தப் பெண்களால் மட்டுமே முடியும்.

* ‘என்னது, உப்புமாவா? அதை நாய் சாப்பிடுமா’ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள தட்டுல போட்டு நம்ம மூஞ்சிக்கு முன்னால நீட்ட இந்தப் பெண்களால் மட்டுமே முடியும்.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...

‘ஹெலிகாப்டர் வாங்க, விற்க, விசாரிக்க எங்கிட்ட வாங்க’ என்று டூர் வந்து கூல் ஸ்டேட்மென்ட் விட்ட இங்கிலாந்து பிரதமர்
டேவிட் கேமரூன்!