ஹரிதாஸ் : விமர்சனம்





‘குறையொன்றுமில்லை...’ என்ற ஒற்றை வரியை ஊனப்படுத்தாமல் சொல்லியிருக்கிறார்கள். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான கிஷோருக்கு ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட ஒரு மகன். தாயை இழந்த மகனுக்கு தான் மட்டுமே ஆதரவு என்ற நிலையில், மகனை வெற்றியாளனாக மாற்றும் போராட்டம் ஒரு பக்கம், தாதா ஆதியை போட்டுத் தள்ள வேண்டிய சவால் இன்னொரு பக்கம். கிஷோர் வெல்வாரா? வீழ்வாரா? என்பதுதான் படத்தின் அதிர்ச்சி க்ளைமாக்ஸ்.

பரபர போலீஸ், பாசமான தந்தை என இரண்டையும் பின்னி கதை சொன்ன அழகில் கவனிக்கவும் கைகுலுக்கவும் வைக்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இதோ... பிடியுங்கள் பூங்கொத்து!
எந்த உணர்வையும் உள்வாங்கிக் கொண்டு, கதாபாத்திரத்திலிருந்து ஒரு மில்லி மீட்டர் கூடப் பிசகாமல் யதார்த்தம் காட்டும் கிஷோர், இதிலும் மிளிர்கிறார். வில்லன் ஆதிக்கு ஸ்கெட்ச் போடுவதில் விறைப்பு காட்டும் அவர், மகனுக்காக சிறுவர்களோடு சிறுவனாக வகுப்பறையில் உட்காருவது பிரமாதமான அழகு சித்திரம். கொட்டும் மழையில் மகனைக் கட்டி அணைத்தபடி, ‘‘உனக்கு என்ன தேவைன்னு என்னால புரிஞ்சிக்க முடியலையேடா...’’ என கிஷோர் கதறும் காட்சியில் கரையாத மனமும் கரையும்.

சிறுவன் பிருத்வியிடம் அக்கறை காட்டும் அமிர்தவள்ளி டீச்சராக சினேகாவின் நடிப்பு, மனசுக்குள் வேர் பிடித்துக்கொள்கிறது. ‘குள்ள குள்ள வாத்து...’ என தலையில் கைகளால் கொம்பு வைத்து நடித்துக் காட்டி பாடம் எடுக்கும் சினேகா, வகுப்பறையில் கிஷோர் உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் வெட்கத்தில் உறையும் காட்சி, கவிதை.
‘அஞ்சலி’ ஷாமிலி சாயல்போல் சிறுவன் பிருத்விக்கு ‘ஹரிதாஸ்’. யார் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்காமல், தலையை வேறு பக்கம் சாய்த்து அத்தனை துல்லியம் காட்டியிருக்கிறார். வீட்ல சொல்லி சுத்திப் போடச் சொல்லு கண்ணு! டிரைவராக வரும் சூரியின் காமெடி, இறுக்கக் கதைக்கு அளவுச் சிரிப்பு.

கிஷோர் - சினேகா பழக்கத்தைத் தவறாக நினைத்து அம்மா பொரும, அப்போது போனில் பேசும் கிஷோர், ‘‘ஆம்பள துணை இல்லாமலேயே ரெண்டு பொம்பளப் பிள்ளைங்கள வளர்த்து ஆளாக்க உங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க. உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தர்றதிலதான் அவங்க சந்தோஷம் இருக்கு. அதனால உங்க முடிவ மாத்திக்கங்க’’ என்று பேசும் இடத்தில் பாத்திரத்தின் கம்பீர வார்ப்பு.



இயக்கம், திரைக்கதை தவிர உறுத்தல் இல்லாத ஒளிப்பதிவும், எந்த இடத்திலும் துறுத்தி நிற்காத வசனமும் இயக்குனருக்கு இரண்டு கரங்களாக பலமூட்டி இருக்கிறது. ஆக்ஷனில் தீப்பிடிக்கும் ரத்னவேலுவின் கேமரா, சினேகா இடம்பெறும் பள்ளிக்காட்சிகளில் கவிதை வாசிக்கிறது. ‘‘என் மகன் போட்டியில் கலந்துக்கிறதையே வெற்றியா நினைக்கிறேன்’’, ‘‘விழட்டும்... அப்பதான் எழுந்திரிக்க தெரியும்’’, ‘‘அவன் பேர் எழுதின தோட்டா என் துப்பாக்கிலதான் இருக்கு’’ என வெங்கடேசனின் வசனம் பின்னியெடுக்கிறது.
விஜய் ஆன்டனியின் பரபரப்பு பின்னணி இசையில் தெரிகிறது. காட்சிகளைத் தொய்வுபடுத்தாத அழகு, எடிட்டர் ராஜா முகமதுவுக்கானது. போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பற்ற குடிக்காட்சிகளைத் தவிர்த்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பெரிய தாதாவாகக் காட்டப்படும் பிரதீப் வரும் காட்சிகள் வேகமெடுக்கத் தவறுகிறது. கொடுத்த பில்டப்புக்கு தாதா, சாதா.
சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் மனதில் நிறைகிறான் ‘ஹரிதாஸ்’.
- குங்குமம்
விமர்சனக் குழு