+2 தாவரவியல் : சென்டம் வாங்க டிப்ஸ்





டாக்டர் கனவோடு படிக்கிற மாணவர்கள் கண்டிப்பாக சென்டம் போட வேண்டிய பாடம் தாவரவியல். இதில் முழு மதிப்பெண் பெற்றால் மட்டுமே கட் ஆஃப் மதிப்பெண் கூடி, மெடிக்கல் சீட் உறுதியாகிறது. ஆனால் ஆறே பாடங்கள் கொண்ட தாவரவியலில் கடந்த ஆண்டு சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கையும் ஆறுதான். அதற்கு முந்தைய ஆண்டு நான்கு பேர்தான். சென்டம் வாங்குபவர்களின் எண்ணிக்கை சிங்கிள் டிஜிட்டைத் தாண்ட முடியாத அளவுக்குக் கடினமானதா தாவரவியல்?
கீழேயுள்ள அட்டவணை ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எவ்வளவு மதிப்பெண்ணுக்குக் கேள்விகள் கேட்கப்படுகின்றன என்கிற விபரத்தைக் காட்டுகிறது.
புளூபிரின்ட் படி சாய்ஸ் கேள்விகளையும் சேர்த்து ஆறு பாடங்களிலிருந்தும் மொத்தம் 230 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் எழுத வேண்டியதோ 150 மதிப்பெண்களுக்கு மட்டுமே.

‘‘புளூபிரின்ட்ல இருந்தே பாடங்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கலாம். சென்டம் வாங்கணும்னா, அதைத் தடுக்கற விஷயங்களைக் கரெக்டா கண்டுபிடிச்சு சரி பண்ணினாலே போதும். எனக்குத் தெரிஞ்சவரை, தேவையான இடங்கள்ல படம் போடாம விட்டுடறது, ‘வரையறை’ வகைக் கேள்விகளுக்கு புத்தகத்துல இருக்கிற மாதிரியே எழுதாம போறது, ட்விஸ்ட் பண்ணி கேட்கப்படற ஒரு மார்க் கேள்விகளுக்கு சரியான பதில் தெரியாம திணறுவது... இதெல்லாம்தான் சென்டத்தை கிடைக்கவிடாம செய்யற காரணங்கள்’’ என்கிறார் தாவரவியல் ஆசிரியை டெல்ஃபி ரோஸ்லெட். அனுபவம் வாய்ந்த ஆசிரியையான ரோஸ்லெட்டின் சென்டம் டிப்ஸ் இங்கே...

*   ஐந்து மதிப்பெண் கேள்விகள் பகுதியிலேயே படங்கள் வரைய வேண்டிய கேள்விகள் இடம்பெறுகின்றன. ‘தாவர உள்ளமைப்பியல்’, ‘தாவர செயலியல்’ பாடங்களிலிருந்து இவை அடிக்கடி இடம்பெறுகின்றன. கட்டாயக் கேள்வியும் படம் வரைய வேண்டிய கேள்வியே.

*   வரையறை வகைக் கேள்விகள் ‘மூன்று மதிப்பெண்’ பகுதியில் கேட்கப்படுகின்றன. இதற்கு, ‘கீ வார்த்தைகள்’ மாறாமல் பதிலளிப்பது அவசியம்.

*   ஒரு மார்க் கேள்விகளில் முதல் மற்றும் கடைசிப் பாடங்களிலிருந்து ட்விஸ்ட் கேள்விகள் இடம்பிடிக்கின்றன. முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களில் இருக்கும் வினாக்களைப் பார்த்துச் செல்வது பயனளிக்கும்.

ஒரு மார்க் கேள்விகளைப் பொறுத்தவரை, அறிவியலாளர்களின் பெயர்கள் மற்றும் கண்டுபிடிப்புகள், குரோமோசோம்களின் எண்ணிக்கை, குடும்பம், துறைகளின் எண்ணிக்கை, தாவரங்களின் இருசொற்பெயர்கள், நொதிகளின் பெயர்கள், கண்டுபிடிப்புகளின் வருடங்கள் போன்றவையே அதிகம் கேட்கப்படுகின்றன.
மூன்று மதிப்பெண் பகுதிக்கு கீழ்க்கண்ட வேதிப்பொருள்கள் குறித்து நன்கு தெரிந்துகொண்டு செல்ல வேண்டியது அவசியம்..
குயினைன், சாண்டோனின், பைரித்திரம், அட்ரோஃபின், ஸ்ட்ராமோனியம், ஹியூமிலின், கால்ச்சிஸின், டெல்டா எண்டோடாக்சின்கள், இன்டர்ஃபெரான் பாலி எத்திலீன் கிளைக்கால், காமா-லினோலினிக் அமிலம் மற்றும் அலிசரின்.
‘‘தேவைப்படுற இடத்தில் படம் வரைஞ்சாதான் முழு மார்க் கிடைக்கும். படங்கள் நுணுக்கமா இருக்கறதாலயும், நிறைய பாகங்கள் குறிக்க வேண்டியிருக்குன்னும், நேரமில்லைன்னும் பசங்க அந்தக் கேள்விகளை சாய்ஸ்ல விட்டுட நினைக்கிறாங்க. அதனால, கட்டாயக் கேள்வியே படக்கேள்வியா இருக்கறப்ப கஷ்டப்படுறாங்க. படிக்கும்போதே படத்தை வரைஞ்சு பார்த்துப் படிச்சா இந்தப் பிரச்னை இருக்காது’’ என்கிறார் ரோஸ்லெட்.
கீழ்க்கண்ட ஐந்து மார்க் படக் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன என்பதால் பயிற்சி செய்து பார்த்துச் செல்லலாம்...



*   பாலிடீன் குரோமோசோம் மற்றும் விளக்கு தூரிகை குரோமோசோமின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
*   இருவித்திலைத் தாவர இலையின் குறுக்கு வெட்டுத் தோற்ற படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
*   படம் வரைந்து விளக்கவும் - இருவித்திலைத் தாவர வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றம். (இந்தப் படத்துக்கு 11 பாகங்கள் உள்ளன. அனைத்தையும் குறிக்க வேண்டும்)
*   குரோமோசோமின் அமைப்பை படம் வரைந்து பாகங்கள் குறிக்க.
*   ஒருவித்திலைத் தாவர வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படம் வரைந்து பாகங்களைக் குறிக்க.
கேள்வித்தாளின் நிறைவுப் பகுதியான பத்து மதிப்பெண் கேள்விகளில், முதல் இரு பாடங்களுடன் 4 மற்றும் 5வது பாடங்களை நன்கு படித்தாலே முழு மதிப்பெண்களையும் அள்ளலாம் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் சில 10 மார்க் கேள்விகள் கீழே...
*   பெந்தம் ஹூக்கர் தாவர வகைப்பாட்டினை விவரி
*   ஒளிச்சேர்க்கையின் இருள் வினைகளை விவரி
*   இருவித்திலைத் தாவர இலையின் உள்ளமைப்பை விவரி
*   உயிரி உரங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக
*   குரோமோசோம் பிறட்சியை அதன் அமைப்பின் அடிப்படையில் விளக்குக
*   நெல், நிலக்கடலையின் பொருளாதாரப் பயன்கள் பற்றி தொகுத்து எழுதுக
*   டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில்நுட்பவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதுக
*   நொதிகள் செயலாற்றும் விதத்தை விளக்கும் கோட்பாடுகளை விளக்குக
*   தாவர திசு வளர்ப்பின் செயல்நுட்பத்தை விவரி
*   ஆக்ஸின் மற்றும் ஜிப்ரெலின்களின் வாழ்வியல் விளைவுகளை விவரி
*   கிளைட்டோரியா டெர்னேஷியாவைக் கலைச்சொற்களால் விவரி
*   டி.என்.ஏவின் அமைப்பை விளக்குக
*   சைலம் திசுவின் செல் வகைகள் யாவை? விளக்குக
*   பென்டோஸ் பாஸ்ஃபேட் வழித்தடத்தை வரைபடத்துடன் விளக்குக
*   புரோட்டோபிளாச இணைவு முறையின் படிநிலைகளைப் படத்துடன் விளக்குக
*   தாவர வகைப்பாட்டு முறைகளின் வகைகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் குறிப்பெழுது.
தாவரவியல் தேர்வை எதிர்கொண்டு சென்டமையும் தட்டிச் செல்ல இந்தத் தகவல்கள் நிச்சயம் உதவும். அடுத்த இதழில் விலங்கியல்..
தொகுப்பு: அய்யனார் ராஜன்
மாடல்: ஐஸ்வர்யா
படம்: புதூர் சரவணன்