படிப்பு





சிதம்பரத்துக்கும் சிவகாமிக்கும் அன்று திருமண நாள்...
மனைவியோடு கோயிலுக்குப் போய்விட்டு, மேட்னி ஷோ சினிமா பார்க்க டிக்கெட் எடுத்துக்கொண்டு திரையரங்கினுள் நுழைந்த சிதம்பரம், முன் வரிசையில் அமர்ந்திருந்த சித்ராவைப் பார்த்து அதிர்ந்தார்!

‘‘சிவகாமி, அங்கே பாரு! நம்ப மகள் காலேஜுக்குப் போறதா சொல்லிவிட்டு சினிமாவுக்கு வந்து தோழிகளோடு அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கா!’’
சிவகாமி பார்த்ததும் கொதித்தாள். ‘‘என்னங்க இப்படி பண்றா... பத்து நிமிஷத்துக்கு முன்னாடி கூட, ‘எங்கே இருக்கே’ன்னு போன் பண்ணிக் கேட்டேங்க. ‘காலேஜ் ப்ராஜக்ட்டும்மா... பிராக்டிக்கல்ஸ்ல இருக்கேன்’னு சொன்னா. வாயைத் திறந்தா பொய்தான்!’’
‘‘எதுவா இருந்தாலும் அவ வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம். இங்கே அவளப் பார்த்ததை காமிச்சிக்க வேணாம்’’ என்று மனைவியை அமைதியாக்கினார் சிதம்பரம்.
மாலையில் வீட்டில்...
‘‘படிக்க அனுப்பிச்சா சினிமாவுக்கா போயிட்டு வர்றே’’ - வீட்டிற்கு வந்த மகளிடம் கண்டிப்புடன் கேட்டார் சிதம்பரம்.
‘‘அப்பா, நான் படிக்கிறது விஷுவல் மீடியா... அந்த தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருக்கிற அந்தப் பழைய படத்தை புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றியது எங்க டீம்தான். தியேட்டர்ல அதுக்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருக்குன்னு பார்க்கத்தான் நாங்க அங்க போயிருந்தோம். அது எனக்கு பிராக்டிகல்ஸ்தான்’’ என்றாள் அவள் அமைதியாக!