கவிதைக்காரர்கள் வீதி

பெண்மை
அவள் தினமும் ரசிக்கும் நிலைக்கண்ணாடியையும் அவளை தினமும் ரசிக்கும் குளியலறைச் சுவர்களையும் பெண்ணாக்கி வைத்திருக்கிறாள் ஸ்டிக்கர் பொட்டுகளை ஒட்டி! - தெ.சு.கவுதமன், சென்னை-52.
பகிர்தல்
வந்தபின் பகிர்ந்து கொள்கின்றன நீ வராத தனிமையின் காத்திருப்புகளை மௌனம் - தமிழ்நாயகி, சேலம்.
நிரம்பல்
பக்கத்து வீட்டுக்கு குடிவருவோர் பால் காய்ச்சும்போது அவர்களின் மனசும் வீடும் விசாலமாகவே உள்ளன. மறுநாளிலிருந்தே நிரம்பிடத் தொடங்குகின்றன இரண்டிலும் ஏதேதோ... - வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
நிற்றல்
ஒலிபெருக்கியில் சினிமா பாடல் பாதியில் நிற்கிறது பறவையின் பாடல்! - பெ.பாண்டியன், காரைக்குடி.
விளையாடல்
சன்னதியில் சத்தத்துடன் குழந்தை விளையாடுகிறது அதட்டிவிட்டு அம்மா திரும்பினால், குழந்தையுடன் கடவுள் விளையாடிக் கொண்டிருக்கிறார் - கே.கமலவேணி, ஈரோடு.
தூரம்
நமது கைப்பேசிகளுக்கு இடையில் இருக்கிறது நம் காதலின் தூரம் - அ.கோ.விஜயபாலன், திருவாரூர்.
|