பிரைடல் பிளவுஸில் பிரமாத லாபம்





கல்யாண ஷாப்பிங் எப்போதுமே ஸ்பெஷல்தான். புடவைக்கும், நகைக்கும் கடை கடையாக ஏறி அலைந்தவர்கள், இப்போது பூ, செருப்பு என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மணப்பெண் அணியும் ஜாக்கெட்டுக்கு அதில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கும் புடவையாச்சே... மேட்ச்சிங் பிளவுஸ் சரியில்லாமல் போகலாமா?

சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த உஷா ரமேஷ், மணப்பெண்களுக்கான ஜாக்கெட்டுகளை டிசைன் செய்வதில் நிபுணி. புடவைக்கு மேட்ச்சாக அதே கலரில் மட்டுமின்றி, அதே டிசைனில், அழகழகான வேலைப்பாடுகள் செய்து தருகிறார். ஹைலைட்டான விஷயம் என்ன தெரியுமா? புடவைக்கு மேட்ச்சாக நகைகளை வாங்கி, அவற்றையும் ஜாக்கெட்டில் வைத்துத் தைத்துத் தருகிறார். நெற்றிச்சுட்டி முதல், கொலுசு வரை எல்லாம் ஒரே மாதிரி அணியலாம்.

‘‘எம்பிராய்டரி ஒர்க் பண்ணிட்டிருந்தேன். ஏற்கனவே தைத்த பிளவுஸ்ல ஏதாவது பண்ணித் தர முடியுமான்னு நிறைய பேர் கேட்டாங்க. எனக்கு ஜுவல்லரி டிசைனிங்கும் தெரியும். அதனால அதையும், எம்பிராய்டரிங்கோட இணைச்சு, வித்தியாசமா முயற்சி பண்ணிப் பார்த்ததுல எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. கடைகள்ல மோடிஃப்னு சொல்ற ரெடிமேட் பட்டைகள் (பேட்ச்) கிடைக்கும். புடவை அல்லது சல்வார் கலருக்கு ஏத்தபடி அதை வாங்கி, தேவையான இடங்கள்ல வச்சு தைக்கவோ, ஒட்டவோ வேண்டியதுதான். இந்த மோடிஃப் 20 ரூபாய்லேருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும் கிடைக்கும். குட்டிக்குட்டியா மணிகள், நகைகள் வாங்கிக்கலாம். தைக்கிறதுக்கு நூலும், ஒட்டறதுக்குப் பசையும்தான் தேவை. விருப்பமில்லாதப்ப, அந்த நகையையோ, மோடிஃபையோ பிரிச்சி எடுத்து, வேற புடவை அல்லது சுடிதார்ல வச்சுத் தச்சுக்கலாம். ஒரு நாளைக்கு 3 முதல் 5 ஜாக்கெட் வரைக்கும் ரெடி பண்ணலாம். பெண்கள் விரும்பற விஷயமாச்சே... விளம்பரமே தேவையில்லை. ஒருத்தருக்குப் பண்ணிக் கொடுத்தீங்கன்னா, வாய்வழியா பரவி, உங்களுக்கு ஆர்டர் குவியும். பொட்டிக், ரெடிமேட் பிளவுஸ் விற்கற கடைகள், புடவைக் கடைகள், சுடிதார் கடைகள்ல மாடலை காட்டி, ஆர்டர் வாங்கலாம்.

 ஏற்கனவே தச்ச ஜாக்கெட் அல்லது சல்வார்லதான் அழகு படுத்தப் போறோம். அதனால டெய்லரிங் தெரியணும்னு அவசியமில்லை. கற்பனைக்குத்தான் இதுல காசு...’’‘ என்கிறார் உஷா.
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்


முதலீடு: 500 ரூபாய்.
லாபம்: 100 சதவீதம்

பயிற்சிக்கு: 1,000 ரூபாய் (5 நாள்களில் 5 மாடல்களுக்கு) பொருட்களுக்கு தனியே 750 ரூபாய் செலவாகும்.
தொடர்புக்கு: 99400 32761