தத்துவம் மச்சி தத்துவம்





ஐஸ்கட்டியை எவ்வளவு நேரம் உற்று உற்றுப் பார்த்தாலும் சரி... அதுல எங்கே லீக் ஆகுதுன்னு யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
- எதையும் உன்னிப்பாக பார்ப்போர் சங்கம்
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

‘‘டாக்டர்... எனக்கு சுகரும், மனைவியும் ஒண்ணுதான்!’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘ரெண்டையும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை டாக்டர்...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

என்னதான் ஒருத்தன் ஓவர் ஸ்பீடுல பைக் ஓட்டிக்கிட்டுப் போனாலும், அவனுக்கு முன்னாலயும் ஒருத்தன் போயிட்டுத்தான் இருப்பான்.
- அத்தாணி கதிர், பெருந்துறை.

‘‘தலைவரை கிரிக்கெட் டீம்ல சேர்த்துக்கிட்டா நல்லா விளையாடுவார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘மேடையில அவர் மேல வீசுன செருப்பை ‘டைவ்’ அடிச்சு கேட்ச் பிடிக்கிறாரே...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘எம்.பியோட சம்சாரம் டிவில அப்படி என்ன பாக்கறாங்க..?’’
‘‘வீட்ல அமைதியா இருக்கற இந்த மனுஷன், பார்லிமென்ட்ல எப்படி அமளி பண்றார்னு ஆச்சரியமா பாக்கறாங்க..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

என்னதான் கலாசார ஆர்வலர்னாலும், கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு ‘பேன்ட்’ வாத்தியம்தான் வாசிக்கலாம். ‘வேட்டி’ வாத்தியமெல்லாம் வாசிக்க முடியாது!
- ஜால்ரா போன்ற பக்க வாத்தியங்கள் வாசித்து காரியம் சாதிப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘உங்க உருவ பொம்மையை எரிச்சவங்களை
கண்டுபிடிச்சிட்டாங்க தலைவரே...’’
‘‘கண்டுபிடிச்சு..?’’
‘‘முதல்ல எரிச்சவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு குடுத்திருக்காங்க..!’’
- சி.சாமிநாதன், கோயமுத்தூர்.