காஜல் செம ஃபாஸ்ட் த்ரிஷா கிக் டேஸ்ட்





கேமராவால் கவிதை தீட்டுவதில் கைதேர்ந்தவர் முத்துகுமார். இவரது க்ளிக்கில் சிக்கிய படங்கள் ஒவ்வொன்றிலும் ஜீவித்திருக்கிறது அழகும் ரம்மியமும். பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணியாற்றிவிட்டு, ஸ்டில் கேமராவில் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியவரின் ஹார்ட் டிஸ்க்கை சினிமா நட்சத்திரங்களும், அரசியல் பிரபலங்களும் நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.



‘போட்டோ கிராபிக்கு எது அவசியம்’ என்ற கேள்விக்கு சாதாரணமாக அல்லது நக்கலாகக் கிடைப்பது ‘கேமரா’ என்ற பதில்தான். முத்துகுமார் இதில் வித்தியாசப்படுகிறார். ‘‘கண்கள்தான் போட்டோகிராபிக்கு அவசியம். எல்லாவற்றிலும் ஒரு அழகியல் இருக்கு. அழகாக இருப்பவர்களைத்தான் அழகாக படமெடுக்கமுடியும் என்றில்லை. எல்லோரது மனசுக்குள்ளும் காதல் இருப்பதுபோல, ஒவ்வொருத்தரிடம் ஒரு அழகு இருக்கு. போட்டோஜெனிக்கான முகம் என்பதிலெல்லாம் எனக்கு நம்பிகையில்லை...’’ என்னும் முத்துகுமாரின் க்ளிக்கில் விக்ரம், சூர்யா, ஜீவா, அனுஷ்கா, ஹன்சிகா, த்ரிஷா, காஜல் அகர்வால், சினேகா உள்பட பல நட்சத்திரங்களும் மாடல்களும் பளிச்சிடுகின்றனர்.



‘யார் யார் எந்தெந்த விஷயத்தில் ஸ்பெஷல்?’ என்றபோது, தனது கோணத்தில் ரசித்த, பிரமித்த விஷயங்களை விவரித்தார்...
‘‘பொதுவா விளம்பரங்களுக்கு மாடலா வர்றவங்களுக்கு கான்செப்ட்டை சொல்லிட்டா போதும். வேகமா பண்ணி முடிச்சிட்டு, போய்க்கிட்டே இருப்பாங்க. ‘ஹே ராம்’ படத்துல வொர்க் பண்றப்ப, பின்னி மில்லில் ஷூட்டிங். கமல் சாரும் ராணி முகர்ஜியும் கிஸ் பண்ற சீனை ஷூட் பண்ண வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். ராணி முகர்ஜி கார்ல வந்து இறங்கினப்போ ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாங்க. மேக்கப் போட்டுட்டு ஷூட்டுக்கு ரெடியானப்போ அவங்க கொடுத்த எக்ஸ்பிரஷன்களை பார்த்துட்டு மிரண்டுட்டேன். அடுத்தடுத்த நாள் ஷூட்ல அவங்களோட ஃபேனா ஆகிட்டேன். கேமரா முன்னாடி ராணி முகர்ஜி வந்து நின்னா, எந்த போட்டோகிராபரா இருந்தாலும் ஆங்கிள் பார்க்கும்போது அசந்துடுவாங்க.


அனுஷ்கா ரொம்ப ஸ்வீட். என் கை அசைவை பார்த்தே போஸ்களை மாத்தி மாத்தி கொடுப்பார். ஷூட் முடிஞ்ச பிறகும் ஃபிரண்ட்லியா ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருப்பார். எல்லாரையும் போலவே சினேகாவோட ஸ்மைலுக்கு என் கேமராவும் அடிமை. நித்யா மேனன் கண்களுக்காகவே லட்சம் படமெடுக்கலாம். கேஷுவல் மூட்ல த்ரிஷா லுக் செம கிக். ரஹ்மான் சார் பாட்டு மாதிரியே ஸ்லோ பாய்ஸன் ஏத்துறவர் ரிச்சா. ஷூட் ஆரம்பிச்சா கொஞ்சம் கொஞ்சமாதான் மூடைக் கொண்டு வருவார். ஷூட் சூடு பிடிக்க தொடங்கியதும், அடடா... ஒவ்வொரு போஸும் செம டேஸ்ட். காஜல்கிட்ட பப்ளினெஸ் இருக்கும். கேமரா ஷட்டர் ஸ்பீடு மாதிரிதான் காஜலும் செம ஃபாஸ்ட். நொடிக்கொரு ரீயாக்ஷனாக நமக்கு செம தீனி போடுவார்.



விக்ரம் சார் ஆன் தி ஸ்பாட்ல இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருப்பார். லயோலாவில் படிக்கும்போது சூர்யாவும் விஜய்யும் எனக்கு ஜூனியர்கள். சூர்யா சாரை தெரிஞ்ச அளவுக்கு, விஜய் சார் எனக்குப் பழக்கம் இல்ல. ‘சன்ஃபீஸ்ட்’ விளம்பரத்துக்காக சூர்யாவை க்ளிக்கியிருக்கேன். ‘தன்னோட ஒரு மைனஸ் பாய்ன்ட் போட்டோகூட வெளில போயிடக்கூடாதுங்கிறதுல ரொம்ப அக்கறை எடுத்துக்கறவர் எம்.ஜி.ஆர்’னு சொல்லுவாங்க. அந்த விஷயத்தை அப்படியே ஃபாலோ பண்றார் சூர்யா. ஒரு ஹீரோவுக்கு அது ரொம்ப அவசியம்.



ஜெயலலிதா மேடத்தை போயஸ் கார்டன் வீட்டில் வைத்து படம் எடுத்திருக்கேன். படமெல்லாம் எடுத்து முடிச்சதும், ‘பின்னணியில் இருக்கும் கதவில் சிலுவை தெரியுதே, இது மத ரீதியாக பார்க்கப்படுமா?’ன்னு எங்கிட்ட கேட்டப்போ, அவங்களோட கவனத்தை பார்த்துட்டு அசந்துட்டேன். கி.வீரமணியை ஒருநாள் காலையிலிருந்து மாலை வரை படம் எடுத்தேன். பிரேக்கே விடல. ‘ஏம்பா... உனக்கு பசிக்காதா’ன்னு கேட்டார். ‘அதான் கேமராவுல சாப்பிட்டுக்கிட்டு இருக்கேனே சார்’னு நான் சொன்னதைக் கேட்டு சிரிச்சார்’’ என்கிற முத்துகுமார், விரைவில் விளம்பரப் படங்களில் கைவண்ணம்
காட்டத் தயாராகி வருகிறார்.
- அமலன்
அட்டை மற்றும் படங்கள்: முத்துகுமார்